(நேர்கண்டவர் - மா.உஷாநந்தினி)
“ஈழத்திலிருந்து எழுதப்பட்ட மிகப் பெரியதொரு நாவலை கொக்குவில்லிலோ அக்கரைப்பற்றிலோ யாழ்ப்பாணத்திலோ திருகோணமலையிலோ வைத்து பெருந்திரளான வாசகர்கள் மத்தியில் அவர்களுடைய வாழ்வை கண்ணீரும் கம்பலையுமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற பேராசை எனக்கிருக்கிறது. இது பேராசையுமல்ல, கனவின் ஆற்றில் ஒதுங்குகிற கனவுமல்ல. இது, விரைவில் நிறைவேறும்…” என தமிழ்நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர், பேச்சாளர், ‘கதை சொல்லி’ பவா செல்லத்துரை, இதுவரை தனக்குள் புதைத்திருந்த எதிர்பார்ப்பை இவ்விதமாக வெளிப்படுத்தினார்.
வீரகேசரி வாசகர்களுக்காக பவா செல்லத்துரை அளித்த பேட்டியின் ஒரு பகுதி இங்கே…
கதைகளை சொல்ல உங்களை தூண்டியது எது?
கதை சொல்வது என் இயல்பு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வோர் இயல்புண்டு. அதுபோல என்னுடைய இயல்பு... நான் வாசித்ததை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள நினைப்பேன். அப்படி நான் வாசித்த கதைகளை நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்களிடமும், கல்யாண வீடுகள் அல்லது வேறு எங்கென்றாலும் பகிர்ந்துகொள்வேன்.
நான் கதை சொல்லும்போது எதிரில் இருப்பவர்கள் ஈர்க்கப்பட்டார்கள். நான் சொல்வதை காது கொடுத்துக் கேட்டார்கள். நல்ல வரவேற்பு கிடைத்தது. அது தெரியத் தெரிய நான் உற்சாகமடைந்துகொண்டே வந்தேன்.
ஒரு கட்டத்தில் நண்பரொருவர் 'கதை கேட்க வாங்க' என்கிற நிகழ்ச்சியை ஆரம்பித்து, 'மைக்' முன்னால் கதை சொல்ல என்னை அழைத்தார்.
ஒருவேளை, மைக்கே இல்லாவிட்டாலும், நான் தெருவிலும் ஹோட்டல்களிலும் டீக்கடைகளிலும் நின்று கதை சொல்லிக்கொண்டேதான் இருந்திருப்பேன்.
என்னவொன்று, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் நான் கதை சொல்வது இணையத்தில் பகிரப்பட்டதால் யூடியூப்பில் வருகிறது. அவ்வளவுதான். கதை சொல்ல இதை விட ஒரு பிரத்தியேக காரணம் இல்லை.
இம்முறை இலங்கை பயணத்தில் உங்கள் கவனத்தை ஈர்த்த ஏதேனும் ஒன்றை, குட்டிக் கதையாக சொல்ல முடியுமா?
இது எனது இரண்டாவது பயணம். ஒரு தேசத்தின் பயணத்தில் அதன் இயற்கை சூழல்கள், வானுயர்ந்த கட்டடங்கள்... எல்லாவற்றையும் விட அங்கிருக்கும் மனிதர்கள்தான் எப்போதும் எனக்கு முக்கியமாக தெரிகிறார்கள். இம்முறை இலங்கை பயணத்திலும் நான் அதைத்தான் பார்த்தேன்.
குறிப்பாக, எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீஃபாவை இவ்வளவு காலம் சந்திக்கத் தவறிவிட்டோமே என்று நினைத்தேன். அவரது 'மக்கத்து சால்வை’ தொகுப்பு சமீபத்தில் வெளிவந்தது.
எதிரில் இருப்பவர் போலியான வாசகரா, நல்ல வாசகரா என்று இலகுவாக அடையாளம் கண்டுவிடலாம். நான் பார்த்ததில் அவர் மிக முக்கியமான வாசகர். அவருக்கு பேச்சிலேயே எழுத்து மொழி வந்துவிடுகிறது. அவருடைய துள்ளல், கூர்மையான ஆற்றல், மொழி வளம், உரையாடல் அவருக்கு மிக இலாவகமாக கைகொடுத்துவிடுகின்றன.
இந்த இலங்கை பயணத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் அவர்தான் எனக்கு ஆச்சரியமூட்டும் மனிதர். அவரை பற்றி வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். விரைவில் ஒரு கட்டுரையும் எழுதவிருக்கிறேன்.
பவா என்கிற எழுத்தாளனுக்குள் ஒரு 'கதை சொல்லி'யும், இந்த கதை சொல்லிக்குள் ஓர் எழுத்தாளனும் இருப்பதில் உள்ள சாதக, பாதகம் என்ன?
எல்லா எழுத்தாளர்களுமே கதை சொல்லிகள்தான். சிலர் கைகளால் கதை சொல்கிறார்கள். சிலர் வாயால் கதை சொல்கிறார்கள்.
என்னால் எழுத மட்டுமே முடியும், கதைகளை பற்றி பேசத் தெரியாது என்றால் அசோகமித்திரன், திலிப் குமார் போன்றவர்களை வரிசைப்படுத்தலாம். ஆனால், இவர்களில் யார் யார் உயர்ந்தவர்கள், யார் யார் அடுத்த படியில் இருப்பவர்கள் என்றெல்லாம் பிரிக்க வேண்டாமெனத் தோன்றுகிறது.
மௌனியின் கதைகளை தமிழில் மட்டுமல்ல, உலகில் வேறெந்த மொழியிலும் மொழிபெயர்த்து சொல்லவே முடியாது. ஆனால், மௌனி அடைந்த இடமென்ன?
ஜெயகாந்தன் சொல்வது போல் மௌனி எழுத்தாளர்களுக்கெல்லாம் எழுத்தாளராக இருந்திருக்கலாம். ஆனால், தமிழில் அவரை இருநூறு முந்நூறு பேர் வாசித்திருந்தால், பிரபஞ்சன், ஜெயகாந்தன், கி.ரா. போன்றவர்கள் சில லட்சம் பேரை அடைந்துவிட்டார்கள். அப்படியிருக்க, இவர்களுக்கு முதலாமிடம், மௌனிக்கு இரண்டாமிடம் என்று நம்மால் சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஆளுமை. ஒவ்வொரு விதத்தில் கதை சொல்லிகள்.
அதனால் பவா என்ற எழுத்தாளனுக்குள் ஒரு கதை சொல்லியும் இந்த கதை சொல்லிக்குள் ஒரு எழுத்தாளனும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறான்.
எனது 'நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை’ என்ற தொகுப்பில் ஐந்து கதைகள் உண்டு. ‘ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்’, ‘பச்சை இருளன்’, ‘வேட்டை’, ‘சத்ரு’ ஆகிய கதைகளை உலகத்தில் என்னால் மட்டுமே எழுத முடியும். என்னைத் தவிர யாராலும் எழுத முடியாது. இது பெருமிதமோ இறுமாப்போ அல்ல. ஏனென்றால், எனது நிலப்பரப்பின் தனித்துவமான கதைகள் இவை. அத்தனை கவித்துவமான மொழியிலோ அந்த வாழ்க்கை சித்திரத்தை எழுத்திலோ என்னால் மட்டுமே கொண்டுவர முடியும்.
ஒரு துரதிர்ஷ்டம் என்னவென்றால், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பலவிதமான கதைகளை சொல்லிச் சொல்லி, நான் எழுதிய அந்தக் கதைகளின் படைப்பூக்கமான நாட்களில் எனக்குள் கூடிய கவித்துவமான மொழி இப்போது மறுபடியும் கூடுமா என்பது சந்தேகமே.
ஆனால், சிறு வயதிலேயே நீச்சல் தெரிந்த ஒருவன், பல வருடங்கள் நீந்தாமல் இருந்தாலும், திடீரென அவன் கிணற்றில் தள்ளிவிடப்பட்டால், மறுபடியும் நீந்தக் கற்றுக்கொள்வான். அதைப்போல, நான் மறுபடியும் நாவல் எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஐந்து பகுதிகள் முடிந்து ஆறாவது பகுதிக்கும் வந்துவிட்டேன். இப்போதும் அதே மொழிநடை வருவதில் எனக்கு சந்தோஷம்.
சக எழுத்தாளர்களின் கதைகளை அதிகமாக சொல்கிற பவா, சொந்த கதைகளை (சுய படைப்பு) சொல்வதில் அத்தனை அக்கறை காட்டுவதில்லையே, ஏன்?
நம் கதைகளை மற்றவர்கள் சொல்ல வேண்டும்... நாமே சொல்லிக்கொள்ளக் கூடாது என்றொரு தன்னடக்கத்தில் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்களேன்.
ஆனால், 'வேட்டை', 'சத்ரு', 'ஓணான் கொடி சுற்றிய இராஜம்பாள் நினைவுகள்', 'ஏழுமலை ஜமா' என என்னுடைய சில கதைகளையும் நான் சொல்லியிருக்கிறேன். அவற்றை வாசித்து, என்னை போன்ற ஒரு 'கதை சொல்லி' சொல்லவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
அது மட்டுமல்ல, நான் எந்த கதையையும், இது என் கதை, இது இவர் கதை, இந்த சார்புள்ள கதை, இடது சாரி கதை... என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை.
வாசிக்கும்போது என்னை வசீகரிக்கிற, என்னை ஆதர்சிக்கிற, எந்த மொழியில் எழுதப்பட்ட கதையாயினும், அதைச் சொல்ல நினைப்பேன்.
வெறும் பொழுதுபோக்குக்காக அல்லாமல், எனது கதைகளை கூர்ந்து கவனிக்கக்கூடிய நுட்பமான ஒரு வாசகனின் கணிப்பில் நிற்பது என்னுடைய கதைத் தெரிவே. நான் தேர்ந்தெடுக்கும் கதைகள் மிகச் சிறந்தவையாக இருக்கும்.
'இந்த கதையை சொல்லுங்க, அந்த கதையை சொல்லுங்க' என்று எவ்வளவோ நிர்ப்பந்தங்கள் எனக்கு வந்தபோதும் அவற்றை நிர்தாட்சண்யமாக நான் மறுத்திருக்கிறேன்.
அப்படி நான் மறுத்ததால் அவை நல்ல கதைகள் அல்ல என்று அர்த்தமல்ல. அவை சொல்வதற்கான கதைகளாக இல்லாதிருக்கலாம் அல்லது அந்த கதைகளின் நுட்பங்களை என்னால் கொண்டுவர முடியாமல் இருக்கலாம்.
எழுத்தின்போது ஒரு எழுத்தாளன் எவ்வளவு போராட்டங்களை மனதோடும் எழுத்தோடும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதோ, அதற்கு நிகராக, கதை சொல்வதிலும் ஒரு கதை சொல்லி போராட வேண்டியிருக்கிறது. என்னை ஆதர்சிக்காத எந்த கதையையும் எந்த நிர்ப்பந்தத்தினாலும் நான் சொன்னதில்லை.
கதைகளை சொல்கிறபோது, நீங்கள் அவற்றின் கதைக்களங்களை தேடிச் சென்று, அதிலிருந்து ஒரு கதை, இன்னொரு கதையென எடுத்து உங்கள் பாணியில் புதிதாக ஒரு படைப்பை உருவாக்கிச் சொல்ல முயற்சித்ததுண்டா?
ஒருபோதும் முயற்சித்ததில்லை.
கதை சொல்வது, கிட்டதட்ட ஒரு நிகழ்த்துக் கலைக்கு ஈடானது. அதற்கு முன் நிமிடம் வரை அதற்கான தீர்மானங்கள் ஏதுமின்றி ஒரு காற்றடைத்த பலூன் தன்னந்தனியாக மேடையில் அலைமோதுவது மாதிரிதான் ஒரு ‘கதை சொல்லி’ மேடையில் அலைமோதுகிறான். நான் அப்படித்தான் ஒவ்வொரு மேடையிலும் அலைமோதுகிறேன்.
இதையெல்லாம் சொல்லிவிடவேண்டும் என்றோ இதை தவிர்த்துவிட வேண்டும் என்றோ இந்த தருணத்தில் இந்த கதையிலிருந்து இன்னொரு கதைக்கு சென்றுவிட வேண்டும் என்றோ ஒருபோதும் நான் தீர்மானித்ததில்லை.
அப்படி நான் கதை சொல்வது பல மேடைகளில் நிகழ்ந்திருக்கிறது. எல்லாமே அந்த மேடைகளில் எந்த தீர்மானமும் இல்லாமல் நிகழ்ந்தவை தான்.
நினைவில் நான் தேக்கி வைத்திருக்கிற நூற்றுக்கணக்கான கதை வரிசையில், மொழியின் லாவகத்தில் நான் சொல்கிற கதையே, இன்னொரு கதைக்கு இந்தக் கதை சொல்லியை சுலபமாக கொண்டு போய் சேர்த்துவிடுகிறது. அதிலிருந்து சொல்லப்படுவதுதான், இன்னொரு கதை.
ஆனால், இதிலிருந்து நாம் ஒரு படைப்பை உருவாக்கிவிட வேண்டும் என்றோ இந்த மாதிரி இந்த கதையை சொல்லிவிட வேண்டும் என்றோ நான் நினைத்ததில்லை.
ஒரு கதையை சொல்ல ஆரம்பிக்கிறபோது கதை சொல்வதற்கு முன்னரே அலை வந்து அடித்து அடித்து திரும்புவது போல் வேறு ஏதோ ஒரு கதையை பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கிய அனுபவமும் எனக்குண்டு.
ஆக, ஒரு கதை சொல்லியை ஒரு பட்டிமன்ற பேச்சாளருடனோ ஒரு தொழில்முறை பேச்சாளருடனோ ஒப்பிடக்கூடாது. இது முழுக்க முழுக்க படைப்புக்கு நிகரான இன்னொரு நிகழ்த்துக் கலை.
பிற மொழி இலக்கியங்களை - கதைகளை மொழிபெயர்த்து தமிழில் 'எழுதுவது' - 'கதையாக சொல்வது'... இந்த இரண்டில் எது சிரமமான விடயம்?
இரண்டுமே சிரமமல்ல. பிற மொழி படைப்பில் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு எவ்வளவு ஈடுபாடு இருக்கிறதோ அதேயளவு ஈடுபாடு ஒரு கதை சொல்லிக்கும் இருக்கும் பட்சத்தில் பிற மொழி இலக்கியங்களை இன்னொரு படைப்பாகவே மாற்றிவிட முடியும்.
ஒரே கதையை மூன்று பேரின் மொழிபெயர்ப்பில் நான் சிறு பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஆனால், ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒரு கதையை மொழிபெயர்ப்பதற்கும், ஒரு வாசகன் ஒரு கதையை மொழிபெயர்ப்பதற்கும், இன்னொரு படைப்பாளி அதே கதையை மொழிபெயர்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. 'ஒரு செவ்வாய்க்கிழமையின் பகல் தூக்கம்... அதை எப்படி நான் மறக்க முடியும்' என்கிற கதையை வண்ணநிலவன், அமரந்தா, பிரம்மராஜ் போன்றவர்கள் மொழிபெயர்த்தனர். இவர்களில் வண்ணநிலவனின் மொழிபெயர்ப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆக, மொழிபெயர்ப்புக் கதையில் உங்களுக்குள்ள ஈடுபாடு, அதை மொழிபெயர்க்கும்போது நீங்கள் அடைகிற அதே உத்வேகம், அதே படைப்பு மனநிலை ஒரு கதை சொல்லிக்கும் ஏற்படுகிறபோது, அந்த மூல ஆசிரியன் - மூல படைப்பாளி எந்தளவுக்கு அந்த கதையை படைத்தானோ அதேயளவு அந்த கதையை மொழிபெயர்த்துச் சொல்லவும் எழுதவும் முடியும்.
நீங்கள் இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை வாசித்திருக்கிறீர்களா? ஈழத்து இலக்கியங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் முதல் முதலாக சொன்ன கதையே ஷோபா சக்தியின் “விலங்குப் பண்ணை” கதைதான். ஷோபா சக்தி, அ.முத்துலிங்கம், சயந்தன், தீபச்செல்வன், அகர முதல்வன் என நான் வாசித்த இலங்கை எழுத்தாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
ஒரு போர் நிகழ்ந்தபோதும் போர் முடிவுற்ற போதும் அந்த மக்களின் வாழ்நிலையை, மனநிலையை திரும்பத் திரும்ப அவர்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ச்சியாக அந்த சூழலில் இல்லாமல் வேறு ஒரு நிலப்பரப்பில் உட்கார்ந்துகொண்டு அந்த கதைகளை படிக்கிற ஒரு வாசகனுக்கு, அவை ஒருவித சலிப்பை கூடத் தரலாம். ஆனால், அவர்கள் தம் வாழ்வை, நிலத்தை, வீட்டை, உறவினர்களை, நேசித்த பனைமரத்தை, ஆசையோடு வளர்த்த நாயை... எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்கள்.
அந்த இழப்பிலிருந்தே அவர்களுக்கு படைப்பு பீறிட்டுக் கிளம்புகிறது. அந்த படைப்பு ஒரு வாசகருக்கு சலிப்பை தருமென்றால், அவர் அதை வாழ்க்கையாக பார்க்காமல் வெறும் எழுத்தாக மட்டுமே பார்க்கிறார் என்று அர்த்தம். ஆனால், நான் அப்படிப் பார்க்கவில்லை.
இது ஈழத்து இலக்கியம், இது தலித் இலக்கியம், இது நல்ல இலக்கியம் என்று பிரித்துப் பார்ப்பவன் அல்ல, நான். எனக்கு எல்லாமே இலக்கியம்தான்.
நல்ல இலக்கியங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டாலும் எந்த மொழிபெயர்ப்பில் வந்தாலும் அதை உடனடியாக வாசிக்க வேண்டும் என்றே ஆசைப்படுவேன்.
இருந்தாலும், ஈழத்தின் பேரிலக்கியங்கள், மிக முக்கியமான நாவல்கள் பலவற்றை நான் தவறவிட்டிருக்கிறேன். இந்த காலங்களில் நான் அவற்றை வாசிக்கக்கூடும்.
அது மட்டுமல்ல, ஈழத்திலிருந்து எழுதப்பட்ட மிகப் பெரியதொரு நாவலை கொக்குவில்லிலோ அக்கரைப்பற்றிலோ யாழ்ப்பாணத்திலோ திருகோணமலையிலோ வைத்து பெருந்திரளான வாசகர்கள் மத்தியில் அவர்களுடைய வாழ்வை கண்ணீரும் கம்பலையுமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற பேராசை எனக்கிருக்கிறது. இது பேராசையுமல்ல; கனவின் ஆற்றில் ஒதுங்குகிற கனவுமல்ல. இதை நிறைவேற்ற இலங்கையில் நூற்றுக்கணக்கான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதை நிறைவேற்றித் தருவார்கள். விரைவில் இது நிகழும்.
எழுத்துச் சுதந்திரம் என்பதை இன்றைய எழுத்தாளர்கள் எப்படி அணுகுகிறார்கள்?
எழுத்து சுதந்திரத்தை இன்றைய எழுத்தாளர்கள் மிக நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அந்த சுதந்திரத்தின் எல்லைக்கோடுகளை தாண்டாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அப்படி தாண்டினாலும் கூட தவறில்லை என்றே ஒரு படைப்பாளியாக நான் நினைக்கிறேன்.
ஏனென்றால், இந்த எழுத்து சுதந்திரம் என்பதை எல்லாருக்கும் ஒரே மாதிரியாக ஒரே அளவோடு புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அது ஒவ்வொருவரிலும் வேறுபடும்.
நான் எழுத்து சுதந்திரத்தை புரிந்துகொண்டு எழுதுவதற்கும், சாரு தன் எழுத்து சுதந்திரத்தை புரிந்துகொண்டு, இதை மீறுவதற்கும் எல்லா உரிமைகளும் உண்டு.
இந்த எழுத்து சுதந்திரத்தின் வரையறைகள் அரசாங்கம் விதிக்கும் சட்டமல்ல. இது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் மாறுபடும். படைப்பு என்பது அளவில்லா சுதந்திரத்தை கோருவது. அதை ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தபடியே அணுக முடியும்.
எழுத்தாளர்கள் அதிகம் பேசக்கூடாது; பேச்சு எழுத்தை குறைத்துவிடுகிறது அல்லது இல்லாமல் செய்துவிடுகிறது என்றும் சொல்கிறார்களே... இந்த கூற்றில் ஏதேனும் உண்மையை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
எனது நீண்ட அனுபவத்தினூடாக சொல்வதானால், இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை.
பேசுபவர்களால் நன்றாக எழுத முடியாது என்று சொன்னால் ஜீவா, ஜெயகாந்தன் என்று ஆரம்பித்து பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நான் என்று ஒரு பெரிய பட்டியலில் இருப்பவர்கள் பேச்சாளர்கள் என்கிற பட்டியலில் வந்துவிடுவோம். இவர்கள் பேச்சு லாகிரியில் எழுத்துக்களை தவறவிட்டவர்கள் என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், பேசாமல் எழுத்தை மட்டுமே சுவீகரித்துக்கொண்ட அசோகமித்திரன், மௌனி மாதிரியான ஓரிரு எழுத்தாளர்களை தவிர மற்றவர்களை உங்களால் அடையாளம் காட்டவே முடியாது.
அசோகமித்திரன், மௌனி ஆகியோருக்கு மேடையில் மட்டுமல்ல, சக நண்பர்களிடம் இயல்பாக பேசுவது கூட கைவரவில்லை. அது ஒன்றும் பலகீனமான விடயமுமல்ல.
படைப்பு மனநிலை என்பது பேசுகிறவனுக்கும் பொருந்தும். ஒரு மணிநேரத்துக்குள் உங்கள் மனதில் திட்டமிட்டு ஒரு எழுத்தாக்கத்தை உருவாக்கிக்கொள்கிறீர்கள். அது கிட்டத்தட்ட இருபது பக்கங்களை கொண்டது என்றால் அதை எதிரில் இருப்பவர்களிடம் ஒரு மணிநேரம் பேசியாக வேண்டும்.
அதை நீங்கள் எவ்வளவு லாவகமாக, சுவாரஸ்யமாக கவித்துவமான மொழியில் பேசுகிறீர்கள், மேடைப்பேச்சிலிருந்து விலகி நின்று படைப்பு மொழியையே பேச்சு மொழியாக மாற்றுகிறீர்கள் என்பதெல்லாம் வெளிப்படும்.
ஆக, ஒரு எழுத்தாளனின் பேச்சு அவனுடைய எழுத்தை பழிவாங்கிவிடும் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சுந்தர ராமசாமி திரும்ப திரும்ப இதை பற்றி சொல்லிக்கொண்டே இருந்தார். அதை நானே பல முறை சொல்லியிருக்கிறேன்.
ஆக, உங்களது கூற்று எனக்குப் பொருந்தாது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
நூல் வாசிப்பு குறைய 'கதை சொல்லி'யும் ஒரு வகையில் காரணமாகிவிடுகிறார் என்றொரு கருத்து உலாவுகிறது... இதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
வாசகர்களை நாம் இரண்டு வகையினராக பிரித்துக்கொள்ளலாம்.
ஒரு வகையினருக்கு சிலவேளை கதை சொல்லிகள் தேவைப்படாமல் இருக்கலாம். என் அனுபவத்தில் இவர்களும் கதைகளை கேட்கிறார்கள். காரணம், தாம் வாசித்த கதையை செவி வழியாக கேட்கிறபோது அந்தக் கதை சரியாக சொல்லப்படுகிறதா என ஒரு திறனாய்வாளராக கதைகளை கேட்கக்கூடும்.
ஆனால், எல்லோரும் தீவிரமான வாசிப்புக்கு தங்களை ஆட்படுத்திக்கொள்வதில்லை.
காலங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. காலந்தோறும் மனிதர்கள், புத்தகங்கள், எழுத்துக்கள், வாசிப்புகள் எல்லாமே மாறுகின்றன. இந்த பரபரப்பான உலகத்தில் பொருள் தேடுவதற்காக மனிதர்கள் தமது வாழ்நாளில் எப்போதும் இல்லாத அளவுக்கு இடம்பெயர்வுகளை இந்த காலகட்டத்தில் சந்தித்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளுக்கு குடும்பம் குடும்பமாகவோ தனித்தோ சென்று தற்காலிகமாக வசித்து குடும்ப நினைவுகளோடும் ஊரின் ஞாபகத்தோடும் தவறவிட்ட நிலப்பரப்பின் வசீகரத்தோடும் ஏதோ ஒரு இடத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு கதை சொல்பவன் கதை எழுதுபவனை விட முக்கியமானவன் என்றே கருதுகின்றேன்.
ஏனென்றால், இவர்கள் அலுவலகத்துக்கு காரிலோ ஹெட்போனை போட்டுக்கொண்டு பேருந்திலோ செல்கிறபோதும் அல்லது வேலை பார்த்துக்கொண்டே காதுகளுக்கு மட்டுமே கதைகளை உள்வாங்கிக்கொண்டு ஒருவன் தன் நினைவுகளை மீட்டெடுக்கிறான் என்றால் அது சாதாரணமான விடயமல்ல.
நாம் எல்லாவற்றுக்கும் ஒருசில கற்பிதங்களை வைத்துக்கொள்கிறோம். இந்த உலக மக்கள் தொகையில் எழுதுபவர்கள் எத்தனை சதவீதம், வாசிப்பவர்கள் எத்தனை சதவீதம், கதை கேட்பவர்கள் எத்தனை சதவீதம், இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம் என்று கணக்கு போட்டால், இந்த பிரிவுகளில் மொத்த மனித எண்ணிக்கையில் 2 சதவீதம் பேர் கூட இருக்க மாட்டார்கள். ஆனால், இந்த இரணடு சதவீதத்துக்குள் எத்தனை கருத்து மோதல்கள், எத்தனை காழ்ப்புகள்! அதுதான் படைப்பு, அதுதான் மனித மனம்.
ஆக, கதை சொல்லிகள் என்போர் மனித ஜீவிதத்தில் எல்லா காலங்களிலும் தேவைப்படுவார்கள். எழுத்தாளர்கள் எல்லா காலங்களிலும் தேவைப்படுவார்கள். இதை தனித்தனியாக பிரிப்பது அபத்தம்.
கதை சொல்லிகள் எழுத்தாளனை மக்களுக்கு நெருக்கமாக கொண்டுசெல்கிறார்கள். எழுத்தாளனின் பெயரை வாசகரிடத்தில் விதைக்கிறார்கள். 'இந்த எழுத்தாளனை கண்டடைந்துகொள், சென்றடைந்துகொள்’ என்று அவர்களுக்கு திசைகாட்டுகிறார்கள். அப்படி திசை காட்டுகிற கதை சொல்லிகளை, இப்படி நீங்கள் எதையாவது சொல்லி அவர்களையும் இல்லாமல் செய்துவிடாதீர்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.
ஒரு வாசகனாக கூறுங்கள் பவா.... ஒரு பூரண வாசிப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
ஒரே வரியில் இதற்கு பதில் சொல்ல வேண்டுமென்றால், "ஒரு நல்ல வாசகன் என்பவன் சங்கீதம் கேட்பது மாதிரி வாசிக்க வேண்டும்."
சுந்தர ராமசாமியின் 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' புத்தக வெளியீட்டு விழாவில் ஜெயகாந்தன் சொன்ன இந்த வரி ஞாபகத்துக்கு வருகிறது.
துரதிர்ஷ்டவசமாக மிக மிக நல்ல வாசகர்கள் மிக குறைந்த சதவிகிதத்திலேயே எஞ்சியிருக்கிறார்கள். மற்ற எல்லோருக்கும் வாசிக்கிறபோதே ஒரு சார்பு வந்துவிடுகிறது.
இது யாருடைய புத்தகம்? அந்த எழுத்தாளர் என்ன வகையான அரசியலில் இருக்கிறார்? அவருடைய அரசியல் என்ன? மேடைகளில், நேர்காணல்களில் அவரது உளறல்கள் எப்படி இருக்கின்றன? இந்த எழுத்தாளனை எனக்கு நேரடியாக தெரியும்; இவன் தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு கீழ்மையானவனாக இருக்கிறான்; இந்த புத்தகத்தை வாசித்து ஒரு முகநூலில் பதிவிட்டால் அதற்கான எதிர்வினை என்னவாக இருக்கும்? இதற்கு யார் யாரெல்லாம் பின்னூட்டல் இடுவார்கள்? இப்படியான பல வித நெருக்கடிகள் மனதில் மோத மோதத்தான் ஒரு எழுத்தாளனை வாசிக்கவேண்டிய கட்டாயம் இன்றுள்ளது.
அவ்வாறன்றி, ஒரு தெளிந்த ஆற்றில் ஒரு கை நீர் அள்ளி பருகிவிட்டு அந்த ஆற்றங்கரை குளிர்ச்சியில் விரிந்திருக்கிற ஒரு நாகமரத்தின் கீழே அமர்ந்துகொண்டு ஒரு புத்தகத்தை, சங்கீதம் கேட்பது போல் ஒரு வாசகன் வாசிக்க ஆரம்பித்துவிட்டால், அவன் ஒரு முழுமையான வாசகன் என்றே நான் நினைக்கிறேன்.
இது என்னுடைய பார்வை மட்டுமே. இந்த பார்வையிலிருந்து இன்னொரு எழுத்தாளனோ இன்னொரு படைப்பாளியோ இன்னொரு கதை சொல்லியோ இன்னொரு வாசகனோ மாறுபடலாம். அதற்கான முழு உரிமையும் அவர்களுக்குண்டு.
ஆர்வம் இருந்தால்தானே நூல்களை வாசிக்க முடியும் என்று சொல்லக்கூடிய இளம் தலைமுறையினருக்குள் வாசிக்கும் ஆர்வத்தை தூண்ட ஏதாவது வழியுண்டா?
இது ஒரு முக்கியமான கேள்வி. ஆனால், இதற்கு எந்த எழுத்தாளனிடமும் எந்த ஆய்வாளனிடமும் எந்த மானுட ஆய்வாளனிடமும் கூட ஒற்றை வரியில் பதில் இல்லை.
மனித சமுத்திரத்தில் எந்த காலத்திலும் பெரும்பான்மையான மனிதர்கள் வாசித்ததே இல்லை. எழுத்தின் மீது ஆர்வம் கொண்டதேயில்லை. ஆனால், தனித்தனியே ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு நிலப்பரப்பிலும் வாசிப்பு ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
இலங்கையை எடுத்துக்கொண்டால், போருக்கு முன், முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் வாசித்தவர்களின் எண்ணிக்கையை விட போருக்குப் பின் வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
வாழ்க்கை அவர்களை எவ்வளவு சூறையாடியபோதும் மனிதர்களை கொத்து கொத்தாக அழித்தபோதும், இதெல்லாம் ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக அடுத்த தலைமுறையினர் மிகுந்த ஆர்வத்தோடு வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இன்று பலருக்கு, ஒரு வேளை சோறு என்பதே மிகப் பெரிய கனவாக மாறிவிட்ட சூழலும் இருக்கிறது. இந்த சூழலில் வாசிப்பின் மீது கவனமே செலுத்த முடியாதபடி பசி மனிதனை வாட்டி வதைக்கிறது. அதற்காக அவன் உழைத்தாக வேண்டியிருக்கிறது. இப்படி பல்வேறு மனிதர்களும் சிக்கல்களில் இருக்கிறபோது ஒரு சிலர் மட்டுமே வாசிப்பை நோக்கி நகர முடியும். அதனால் வாசிப்பில் ஆர்வம் கொள்ள ஓர் இளைஞனுக்கு எழுத்தாளன் வழி சொல்லவோ புத்தி சொல்லவோ கூடாது.
ஆனால், ஒவ்வொரு அரசாங்கமும் தன்னுடைய மக்களை வாசிப்பாளர்களாக மாற்ற நிறைய வேலைகளை செய்தாக வேண்டும்.
ஒரு படைப்பாளனாக நான் சொல்கிறேன்... இன்றைக்கும் தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் அதன் குடிமக்களை வாசிப்பதற்கு பல்வேறு விதங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒவ்வொரு ஊரிலும் புத்தக கண்காட்சி நடத்துவது, புத்தக கண்காட்சிக்கு நிதி ஒதுக்குவது, புத்தக கண்காட்சிகளில் எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்களை அழைத்துப் பேச வைப்பது, எழுத்தாளர்களோடு கலந்துரையாட வைப்பது, இலக்கிய மன்றங்கள் மற்றும் இலக்கிய திருவிழாக்களை நடத்துவது, சர்வதேச புத்தக கண்காட்சிகளை நடத்தி தமிழிலிருந்து வேறு மொழிக்கும் வேறு மொழிகளிலிருந்த பல நூல்களை தமிழுக்கும் மொழிபெயர்க்க வைப்பது.... என பல்வேறு பணிகளை தமிழக அரசு செய்கிறது.
இந்த பணிகள் ஒரு சராசரி இளைஞனை, அதுவரை வாசிக்கும் ஆர்வமற்றிருக்கும் இளைஞனை வாசிப்பின் பக்கம் திருப்பிவிடுமா அல்லது திருப்பிவிட்டதா என்ற கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை.
ஆனால், இந்த பதில் அவ்வளவு நேரடியானதும் உடனடியானதும் அல்ல. காலம் இதற்கான பதிலை சொல்ல காத்திருக்கிறது.
எங்கள் ஊரில் புத்தக கண்காட்சி நடந்தபோதுதான், எங்கள் ஊரில் முதல் முதலில் இந்த எழுத்தாளர் வந்து பேசியபோதுதான், எங்கள் இலக்கிய திருவிழாவுக்கு நான் முதல் முதலாக போனபோதுதான் நான் ஒரு வாசிப்பாளராக மாறினேன் என்று வாசகர்கள் சொல்லக்கூடிய, இன்னொரு எழுத்தாளன் சொல்லக்கூடிய, இன்னொரு படைப்பாளி சொல்லக்கூடிய காலம் மிக விரைவில் இருக்கிறது. அதுதான் இதன் விளைச்சல். இப்போது விதைக்கப்படுவதெல்லாம் விதைநெற்கள்!
மற்ற எழுத்தாளர்களின் கதைகளை சொல்கிறபோது சுவையை கூட்டுவதற்காக உங்கள் தனிப்பட்ட கருத்துக்கள், உதாரணங்களையும் புகுத்திக்கொள்கிறீர்கள்... இது அந்த கதையாசிரியர்களில் அல்லது அந்த கதைகளில் பாதிப்பை ஏற்படுத்திவிடாதா?
இதுவரை நான் சொன்ன எந்தவொரு கதையிலும் இப்படியான பாதிப்பு ஏற்பட்டதில்லை.
ஒரு கதையை சொல்கிறபோது என் நினைவின் அடுக்குகளிலிருந்து என் வாழ்க்கை அனுபவத்திலிருந்து அல்லது நான் வாசித்த இன்னொரு கதையிலிருந்து நான் வாசித்த இன்னொரு ழேn கiஉவழைnஇலிருந்து எனக்கு நினைவுக்கு வருகிற இன்னொரு நினைவை நான் கூட்டிக்கொள்கிறேன். இது எந்த வகையிலும் அந்த எழுத்தாளனுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஒருவேளை அந்த எழுத்தாளனின் கதையை புரிந்துகொள்வதற்கு படைப்பை மிக சுலபமாக அணுகுவதற்கு இது வழிகோலும் என்று நினைக்கிறேன். ஒருபோதும் இதை நான் தீர்மானித்துச் சொல்வதில்லை.
வண்ணநிலவனின் 'பலாபழம்’ கதையை சொல்கிறேன். அதை சொல்கிறபோது எனக்குத் தெரிந்த ஒரு காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நேரடியாக நான் பார்த்த அனுபவத்தை சேர்த்துக்கொள்கிறேன். இது சுவையை கூட்டுவதற்காக என்ற வார்த்தையை கூட நான் மறுக்கிறேன். இது நினைவின் அடுக்குகளிலிருந்து எடுக்கப்படுகிற இன்னொரு படைப்பு அவ்வளவுதான்.
எழுத்தாளர், கதை சொல்லி, நடிகர், பேச்சாளர்.... இப்படி பல அடையாளங்கள் உங்களுக்குண்டு பவா... இவர்களில் யாராக உங்களை அடுத்த தலைமுறையிடம் காலம் கொண்டுசேர்க்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?
எதிர்காலத்தில் பவா செல்லத்துரை என்கிற ஓர் எளிய விவசாயி திருவண்ணாமலையில் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து மறைந்திருக்கிறான் என்றும் அந்த விவசாயி எப்போதாவது கதைகளும் எழுதியிருக்கிறான் என்றும் அந்த எழுத்தாளன் எப்போதாவது கதைகளை சொல்லியும் இருக்கிறான் என்றும் அந்த கதைசொல்லி எப்போதாவது விருப்பமில்லாமலேயே திரைப்படங்களிலும் நடித்திருக்கிறான் என்றும் காலத்தால் நினைவுகூரப்படலாம்.
இந்த சொற்றொடர்கள் சிறப்பதற்கு காலத்துக்கு அதிக அவகாசம் தேவைப்பட்டால், காலத்துக்கு அவ்வளவு பொறுமை இல்லை என்றால் பவா செல்லத்துரை என்கிற ஓர் எளிய விவசாயி திருவண்ணாமலையில் வாழ்ந்து முடிந்தான் என்று மட்டும் இதை சுருக்கிக்கொள்ளலாம். எழுத்தாளன், கதை சொல்லி, திரைப்பட கலைஞன்... என எந்த அடையாளமும் தேவையில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM