நல்லாட்சி அரசை ஏற்படுத்துங்கள்  உங்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என எங்களது பிரதிநிதிகள் சொன்னார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை  எங்களால் உருவான நல்லாட்சி அரசும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டது என இரணைதீவு மக்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை (06) நாளாகவும் சொந்த நிலத்திற்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் இரணைதீவு மக்கள் தாங்கள் மீண்டும் ஊருக்குச் செல்லும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் கணவனை இழந்த  பெண் ஒருவர் கருத்து தெரிவித்த போது,

தாங்கள் ஊரில் (இரணைதீவில்) இருந்த காலத்தில் காலையில் ஆறு மணிக்கு கடலுக்குச் சென்றால் ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவோம், அதற்கிடையில் எங்களுக்கு கிடைக்கின்ற வருமானம் வாழ்க்கைச் செலவை கொண்டு நடத்த போதுமானதாக இருக்கும், நான்கு வகையான தொழிலை செய்து வந்தோம். ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை  மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழ்கின்றோம். சாப்பாட்டுக்கே போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

வளமாக வாழ்ந்த ஊருக்கு செல்ல வேண்டும் மீண்டும் வளமான வாழ்க்கையை வாழ வேண்டும் எங்களது வாழ்க்கைதான் கடைசி காலத்தை எட்டிவிட்டது எங்களது பிள்ளைகளின் வாழ்ககையாவது நிம்மதியானதாக அமைய வேண்டும் அதற்கு நாங்கள் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்றார்.

இரணைதீவு மக்கள் 1992 ஆம் ஆண்டு தங்களின் சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இன்றுவரை இரணைமாதாநகர் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் சுமார் 340 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் சொந்த நிலத்திற்குச் செல்லவும், தங்கி நின்று தொழில் செய்யவும் கோரியே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.