அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது, அமெரிக்கர்கள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தங்களது ஜனாதிபதியை தெரிவு செய்கிறார்கள்.
குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுமே பிரதான வேட்பாளர்கள். இருவருக்கும் இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை இறுதி நேரம் வரை கூறமுடியாமல் இருக்கிறது.
ஜனாதிபதி ஜோ பைடன் இரண்டாவது பதவிக்காலத்துக்கு போட்டியிடவிருந்தார். ஆனால் அவரது வயது மூப்பு மற்றும் வேறு காரணங்களினால் அவரை ட்ரம்ப் இலகுவாகத் தோற்கடித்துவிடக்கூடிய சாத்தியம் இருந்த நிலையில் அவர் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஸரிஸ் களமிறங்கினார்.
அதையடுத்து இலகுவாக வெற்றி பெறுவதற்கு ட்ரம்புக்கு இருந்த வாய்ப்பு பெரும்பாலும் இல்லாமல் போனது. பிரசாரங்களின் போது ட்ரம்புக்கு கமலா ஹரிஸுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுவதாகவே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறின.
குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் ஏறத்தாழ சம அளவிலான மக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகின்ற ஏழு மாநிலங்களில் (Swing States) அதிகமானவற்றில் வெற்றியடைபவரே தேர்தல் மன்ற ( Electoral College ) வாக்குகளில் அதிகமானவற்றைக் கைப்பற்றி ஜனாதிபதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த மாநிலங்களில் இருவருக்கும் இடையில் மிகவும் நெருக்கமான போட்டி நிலவுவதாகவே கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுடன் சேர்த்து ஜனப்பிரதிநிதிகள் சபைக்கும் செனட்சபைக்கும் ( இரு வருடங்களுக்கு ஒரு தடவையான) தேர்தல்கள் நடைபெறும். நான்கு வருடங்களுக்கு பதவியில் இருக்கப் போகும் ஜனாதிபதியுடன் சேர்த்து ( ஆறு வருடங்களுக்கு பதவியில் இருக்கும் ) 100 செனட்டர்களில் மூன்றில் ஒரு பங்கினரையும் ( இரு வருடங்களுக்கு பதவியில் இருக்கும் ) சகல 435 ஜனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களையும் அமெரிக்கர்கள் தெரிவு செய்வார்கள்.
தனது முன்னைய பதவிக்காலத்தில் (2016 -- 20 ) தான்தோன்றித் தனமாக ட்ரம்ப் எடுத்த முடிவுகள் சர்வதேச அரசியலில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. மீண்டும் அவர் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு வருவாரேயானால் சர்வதேச அரசியல் மிகவும் குழப்பநிலைக்கு உள்ளாகும் என்று அஞ்சப்படுகிறது. அதுவும் குறிப்பாக மத்திய கிழக்கில் காசா போர் காரணமாக நிலவும் பதற்றம், ரஷ்ய - உக்ரெயின் போர் ஆகியவை காரணமாக ஏற்கெனவே சர்வதேச அரசியல் நிலைவரம் நெருக்கடி நிறைந்ததாகவே இருக்கிறது.
இந்த நிலைவரங்களில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து சில தினங்களுக்கு முன்னர் லண்டன் கார்டியன் பத்திரிகை எழுதிய ஆசிரிய தலையங்கம் ஒன்று சிந்தனையை தூண்டுவதாக அமைந்திருக்கிறது. அதை கேசரி வாசக்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
ஐரோப்பா போர் ஒன்றுக்கு தயாராக வேண்டியிருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு விவகார தலைவர் ஜோசப் பொறெல் அண்மையில் வெளிப்படையாவே எச்சரிக்கை செய்திருந்தார்." வாஷிங்டனில் யார் ஆட்சி செய்யப்போகிறார் என்பதில் இது தங்கியிருக்கலாம்.
நாம் அமெரிக்க ஆதரவிலோ அல்லது எம்மை பாதுகாப்பதில் அமெரிக்காவின் ஆற்றலிலோ தங்கியிருக்க முடியாது" என்று அவர் கூறினார். அதற்கு சில வாரங்கள் முன்னதாக ட்ரம்ப் அமெரிக்காவுக்கு மிகவும் குறைந்தளவு பணத்தைச் செலுத்தும் வடஅத்திலாந்திக் ஒப்பந்த நாடுகளை ( நேட்டோ ) தாக்குமாறு ரஷ்யாவுக்கு ஊக்கங்கொடுக்கப் போவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் பாதுகாப்பு செலவினங்கள் அதிகரித்துவிட்டன.வடகொரியாவிடமிருந்து வரக்கூடிய அணுவாயுத அச்சுறுத்தலை தடுப்பதற்கு இனிமேல் அமெரிக்காவில் தங்கியிருக்காமல் தங்களது சொந்தத்தில் சுயாதீனமாக அணுவாயுத அச்சுறுத்தல் ( Nuclear deterrent ) தடுப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் கோரிக்கை தென் கொரியாவில் அதிகரித்துவருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையுமோ என்று அமெரிக்காவின் நேச நாடுகள் அமைதியிழந்துபோயிருக்கின்றன. ட்ரம்ப் பாராட்டும் எதேச்சாதிகாரிகள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் சமவளவு ஆதரவுடைய மாநிலங்களின் இலட்சக் கணக்கான மக்கள் எவ்வாறு வாக்களிக்கப் போகிறார்கள் என்பது உலகின் ஏனைய பாகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
ட்ரம்ப் வெற்றிபெறக் கூடும் என்ற ஊகம் உக்ரெயினில் கடுமையாக உணரப்படுகிறது. விளாடிமிர் புட்டின் மீதான ட்ரம்பின் அனுதாபம் வெளிவெளியாக தெரிந்த ஒன்று. ரஷ்யாவுடன் போரை ஆரம்பித்ததாக உக்ரெயின் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கியை ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். அவரின் துணை வேட்பாளரான ஜே.டி. வான்ஸ் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவிகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கை நெருக்கடியை பொறுத்தவரை, கூடுதலான அளவுக்கு பாலஸ்தீனர்களுக்கு அனுதாபம் காட்டும் கமலா ஹரிஸ் ஜோ பைடனையும் விட இஸ்ரேலை குற்றம் காண்கிறவராக இருக்கிறார். ஆனால் கொள்கையில் பெருமளவுக்கு மாறுபடுவார் என்பதற்கான அறிகுறியைக் காணவில்லை. அராபிய அமெரிக்கர்கள் மத்தியிலான ஆதரவில் திடீரென்று ஏற்பட்ட குறைவு இஸ்ரேலுக்கு ஆயுதக்களை அனுப்புவது குறித்து மீள்பரிசீலனை செய்வதற்கு உந்துதல் அளித்திருப்பதாக தெரியவில்லை.
இருந்தாலும், தனக்கு வெகுமதி அளித்து இஸ்ரேலிய வலதுசாரிகளை ஊக்கப்படுத்தக்கூடிய ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் மீள் வருகைக்காக பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு ஆவலுடன் காத்திருக்கிறார். தனது முதலாவது பதவிக்காலத்தில் ஈரானுடனான அணு உடன்படிக்கையில் ( அதை ஈரான் ஒழுங்காக கடைப்பிடித்து வந்தது) இருந்து வெளியேறிய ட்ரம்ப் முடிவற்ற போர்கள் மீதான தனது வெறுப்பின் விளைவாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்தார். ஆனால் அதே நிலைப்பாடு இனிமலும் தொடருமா?
ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது உலகம் பெருமளவுக்கு ஆபத்தானதாக இருந்தது. ஜனாதிபதி கிம் ஜொங் -- உன்னை ட்ரம்ப் வீம்புத்தனமாக தவறாக கையாண்டதால் வடகொரியா அதன் அணுவாயுத திட்டத்தை துரிதப்படுத்தியதுடன் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருக்கமாகவும் சென்றது.
பைடன் நிருவாகம் ட்ரம்பின் பதவிக் காலத்தின் சகல அம்சங்களையும் நிராகரிக்கவில்லை. சீனா தொடர்பில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதில் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையில் இருந்த இருதரப்பு கருத்தொருமிப்பு தொடர்ந்து நிலவியது.
முரட்டுத்தனமான முறையில் ட்ரம்ப் கடைப்பிடித்த பொருளாதார தேசியவாதத்தில் இருந்து பைடனின் அணுகுமுறை வேறுபட்டதாக இருந்தது. சீனாவுடனான வர்த்தப் போட்டியில் பைடன் குறிப்பிட்ட இலக்குகளை மையமாக வைத்தே நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால்,ட்ரம்ப் சீன உற்பத்திகள் மீது 60 சதவீத தீர்வையும் சகல இறக்குமதிகள் மீதும் 20 சதவீதம் வரையான தீர்வையையும் விதிக்கப்போவதாக அச்சுறுத்துகிறார். அதனால் உலகளாவிய வர்த்தகப் போர் ஒன்று மூளக்கூடும்.
தொடக்கத்தில் தாய்வானுக்கு ஆதரவாக நடந்துகொண்ட ட்ரம்ப் இப்போது பாதுகாப்புக்காக அமெராக்காவுக்கு அந்த நாடு பணம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார். இது அவரது குறுகிய கால நலன்களை அடிப்படையாகக் கொண்டதும் அப்பட்டமான கொடுக்கல் வாங்கலின் அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டதுமான ஒரு வெளியுறவுக் கொள்கையை பிரதிபலிக்கிறது. அவர் உள்நாட்டு அரசியல் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்.
ஜனநாயக கட்சியினரும் கமரா ஹரிஸும் குடிவரவை பொறுத்தவரை சரியான அணுகுமுறையை கடைப்பிடிக்கின்ற அதேவேளை " பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பறித்த " ட்ரம்ப் பெருமளவில் ஆட்களை நாடுகடத்தப் போவதாக உறுதியளித்திருக்கிறார். குடியேற்றவாசிகள் அமெரிக்க " இரத்தத்தை நச்சாக்குகுகிறார்கள்" என்ற ட்ரம்பின் பாசிசத்தனமான பேச்சுக்கள் இனவெறியை நியாயப்படுத்தி பரப்புகின்றன. சர்வதேச ரீதியில் பெண் வெறுப்பாளர்களுக்கும் தீவிர வலதுசாரிகளுக்கும் பலம்பொருந்திய எதேச்சாதிகாரிகளுக்கும் ட்ரம்ப் துணிச்சலைக் கொடுத்திருக்கிறார்.
பைடனைப் போன்று கமலா ஹரிஸ் இஸ்ரேலுடனோ அல்லது ஐரோப்பாவுடன் ஐரோப்பாவுடன் உணர்ச்சிபூர்வமான பிணைப்பைக் கொண்டவராகவோ அல்லது ஜனநாயக நாடுகளுக்கும் அவற்றின் எதிரிகளுக்கும் இடையிலான ஒரு நாகரிக மோதல் பற்றிய கருத்தைக் கொண்டராகவோ கருதப்படவில்லை. உக்ரெயினுடன் " உறுதியாக நிற்பேன் " என்று கூறும் அவர் ரஷ்ராவுடன் உடன்படிக்கை ஒன்றுக்கு செல்லுமாறு வற்றபுறுத்துவதில் பைடனைவிடவும் கூடுதலான அளவுக்கு நாட்டம் கொண்டவராக இருப்பார்.
கமலா ஹரிஸின் நிருவாகமும் பைடன் நிருவாகத்தின் ஒரு பரந்தளவிலான தொடர்ச்சியாக அமையும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கின்ற அதேவேளை, பதவிக்கு வந்ததும் ஒரு வேட்பாளர் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதை திட்டவட்டமாக எதிர்வு கூறுவது சாத்தியமில்லை.
ஆனால், வெளியுறவு கொள்கையில் அவர் எப்போதும் சரியான நிலைப்பாடுகளை எடுக்கப்போவதில்லை என்கிற அதேவேளை அவர் ட்ரம்பின் நெறிபிறழ்ந்த, முரட்டுத்தனமான, தன்னையே முன்னிலைப்படுத்துகின்ற அணுகுமுறைக்கு முரணாக ஒரு உறுதிப்பாட்டை, பொறுப்பை, அர்ப்பணிப்பைக் கொண்டுவருவார் என்பது எமக்கு நிச்சயம்.
காலநிலை மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அவசியமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைளை போதுமானளவுக்கு கமலா ஹரிஸின் ஒரு நிருவாகம் எடுக்காமல் விடக்கூடும். ஆனால் ட்ரம்ப் தற்போதைய உலகளாவிய உடன்படிக்கைகளை வேண்டுமென்றே சீர்குலைத்துவிடுவார். இந்த சகல காரணங்களுக்குமாக, இரண்டாவது ட்ரம்ப் நிருவாகத்தை உலகம் தாங்கமாட்டாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM