“சைட்டம் குறித்த பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு அரசு முயற்சி எடுத்து வரும் வேளையில், சுய அரசியல் லாபத்துக்காக வேலை நிறுத்தங்களை முடுக்கி விடச் சிலர் முயற்சிப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது” என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (5) நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசியதாவது:

“மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசியல் சூழ்ச்சிகளுக்கு இரையாகக் கூடாது. அவர்களுக்கு நிச்சயமாக நியாயமான தீர்வு வழங்கப்படும். மாணவர்கள் தங்களது கல்வியை முறைப்படி கற்றுத் தேற வேண்டும். அது அவர்களின் தனிப்பட்ட நன்மைக்கு மட்டுமல்லாது, அவர்களது சேவை தேவைப்படும் இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும். 

“சைட்டம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சில முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது. மருத்துவ ஆய்வுகளைக் கட்டாயப்படுத்துவது, மருத்துவ கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பன நடத்தும் பரீட்சைகளில் பங்கேற்பது, மருத்துவக் கல்விக்கான குறைந்தபட்ச தகுதிகள், தனிப்பட்ட ஒருவரின் உரிமையில் இயங்கும் தனியார் வைத்தியசாலைகளின் உரிமையைப் பகிர்ந்தளிப்பது, அவற்றைக் கண்காணிக்க ஒரு சபையை நிறுவுவது எனப் பல நடவடிக்கைகளை அரசு எடுக்கவிருக்கிறது.

“வேலை நிறுத்தங்களாலும், வகுப்பு பகிஷ்கரிப்புகளாலும் மிகச் சிரமத்தின் கீழ் மருத்துவக் கல்வி கற்கும் மாணவர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். எந்தப் பிரச்சினையாக இருப்பினும் அது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண்பதற்கு போதிய வாய்ப்புகள் உள்ளன. எந்தவொரு தொழிற்சங்கமும் தாராளமாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

“மேலும், அத்தியாவசிய சேவை வழங்கும் மருத்துவர்கள் உட்பட வேறு பல தொழிற்சங்கங்களும் இணைந்து வேலை நிறுத்தங்களை நடத்திவருவதால் பொதுமக்கள் கடும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. அத்துடன், இலங்கையில் வெசாக் திருவிழாவை ஐக்கிய நாடுகள் சபை நடத்தவிருக்கும் இந்தச் சூழலில் வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்படுவது வருத்தத்திற்குரியது.

“இந்தியப் பிரதமர் மோடியின் வருகையின்போது கருப்புக்கொடி ஏற்றச் சிலர் முயற்சிப்பதாகத் தெரிகிறது. இலங்கைக்கு பௌத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் இலங்கை - இந்திய உறவுகள் நெருக்கம் மிகுந்ததாக விளங்குகிறது. அதைத் தொடர்ந்து பேணவே அரசு முயற்சிக்கிறது. இதை, இந்தியாவுக்குத் தலைவணங்குவதாக யாரும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாகாது.

“நாட்டின் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டது நாட்டு மக்களின் உரிமையை ரத்துச் செய்வதற்காகவோ அல்லது நாட்டைக் கூறுபோட்டு வெளிநாடுகளுக்கு விற்பதற்காகவோ அல்ல. எனவே, நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் நான் கையொப்பமிடப்போவதில்லை.”