கலாநிதி ஜெகான் பெரேரா
பொருளாதாரத்தை கையாளுகின்ற விடயமாக இருந்தாலென்ன, பயண அறிவுறுதல்கள் அல்லது நல்லிணக்கச் செயன்முறையைக் கையாளுகின்ற விடயமாக இருந்தாலென்ன அரசாங்கம் அதன் நடவடிக்கைகளில் மிகவும் அறிவார்ந்த முறையில் செயற்படுகின்றது.
அதன் விளைவான பயனையும் அனுபவிக்கிறது. அதிகாரத்தில் ஒரு மாதகாலம் இருந்த பிறகு அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கு தொடர்ந்து அதிகரிக்கின்றது என்பதன் அறிகுறியே தெற்கில் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் அதற்கு கிடைத்த வெற்றியாகும்.
அந்த செலாவாக்கு அதிகரிப்பு ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லாமல் தேசிய மக்கள் சக்திக்கும் விரிவடைகிறது.
இந்த தடவை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் வித்தியாசம் கடந்த தடவை அது இத்தகைய உள்ளூராட்சி தேர்தலை எதிர்நோக்கியபோது காணப்பட்ட வித்தியாசத்தையும் விட மிகவும் பெரிதாக இருக்கிறது.
முன்னர் 2019 ஆம் ஆண்டில் எல்பிட்டிய பிரதேச சபைக்கு நடைபெற்ற தேர்தலில் அதற்கு இரு ஆசனங்களே கிடைத்தன.
இப்போது 15 ஆசங்களை அது கைப்பற்றியிருக்கிறது. அப்போது ஆறு சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்ற தேசிய மக்கள் சக்தி இப்போது 48 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்தும் அதற்கு வாக்களிப்பதே தங்களுக்கு நன்மை பயக்கும் என்ற வாக்காளர்களின் கணிப்பீட்டின் விளைவே இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி வித்தியாசத்தின் அதிகரிப்பாகும்.
புதிய அரசாங்கம் அதன் பணிகளை உருப்படியான முறையில் செய்கிறது என்ற பொதுவான திருப்தியின் விளைவாகவும் இந்த வெற்றி அமைகிறது.
படுமோசமான பொருளாதார நெருக்கடியின்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய அதே பொருளாதாரக் குழுவையே புதிய அரசாங்கம் தொடர்ந்தும் வைத்திருப்பது மிகவும் அறிவார்ந்த ஒரு அணுகுமுறையாகும்.
அந்த குழு சர்வதேச நாணய நிதியத்தினதும் அதன் சர்வதேச ஆதரவாளர்களினதும் நம்பிக்கையைப் பெற்றதாகும்.
சர்வதேச நாணய நிதியத்தூடன் முரண்பாடு ஏற்படக்கூடும் என்றும் அதன் விளைவாக மீண்டும் நாடு பொருளாதார குழப்பநிலையை எதிர்நோக்கவேண்டி வரலாம் என்றும் வெளியிடப்பட்ட அச்சத்தை அரசாங்கம் அதன் அணுகுமுறையின் மூலமாக பொய்யாக்கியிருக்கிறது.
இலங்கையில் முதலீடு செய்வதன் சர்வதேச சமூகம் அதன் திருப்தியை வெளியிட்டிருக்கிறது. இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதினொரு திட்டங்களை ஜப்பான் மீண்டும் ஆரம்பித்திருப்பதன் மூலம் இதை தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது.
புலனாய்வு அறிக்கைகளுக்கு பிறகு பயங்கரவாத அச்சுறுத்தல் ஒன்று தொடர்பாக அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்குலக நாடுகளினால் வெளியிடப்பட்ட பயண அறிவுறுத்தல்களை அடுத்து தோன்றிய எதிர்பாராத சவாலையும் அரசாங்கம் தகுதிவாய்ந்த முறையில் கையாண்டிருக்கிறது." அறுகம்பேயில் பிரபல்யமான சுற்றுலா பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப்படுவதாக தூதரகத்துக்கு நம்பகமான தகவல்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
இந்த அச்சுறுத்தலினால் தோன்றியிருக்கும் பாரதூரமான ஆபத்தின் விளைவாக தூதரக அதிகாரிகள் அறுகம்பே பிரதேசத்துக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
உடனடியாக நடைமுறைக்கு வரும் இந்த தடை மறு அறிவித்தல்வரை தொடர்ந்து நீடிக்கும். மறு அறிவித்தல்வரை அறுகம்பேக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள் " என்று அமெரிக்க தூதரகத்தின் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து இஸ்ரேலிய அரசாங்கமும் இலங்கையில் இருக்கும் அதன் பிரஜைகளுக்கு தனியான அறிவுறுத்தலை வெளியிட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு அல்லது கூடுதர் பாதுகாப்புடைய கொழும்புக்கு நகருமாறு வலியுறுத்தியது.
இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளுக்கு எதிராக வன்முறை மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் இருப்பதை இது வெளிக்காட்டியது.
இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளில் சிலர் தங்களது விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியிருந்து கிழக்கு பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
பாரம்பரியமாக முஸ்லிம்களை பெரும்பான்மையாக வாழும் அந்த பகுதியில் இஸ்ரேலியர்கள் பிரார்த்தனை மண்டபங்களையும் நிர்மாணித்திருக்கிறார்கள்.
வெளிநாட்டு சுற்றுலா பயணாகளின் வருகை உச்சமாக இருக்கும் ஒரு நேரத்தில் பயண அறிவுறுத்தல்களை வெளியிட்ட தூதரகங்களை குற்றஞ்சாட்டுவதற்கு பதிலாக அரசாங்கம் எந்த ஆரவாரமும் இன்றி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்காள்வதில் அதன் பணியை முறையாக செய்திருக்கிறது.
அறிவார்ந்த சிந்தனை
அண்மைய எச்சரிக்கைகளை தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல் தகுதிவாய்ந்த முறையில் கையாளப்பட்டிருப்பதாக தோன்றுகின்ற அதேவேளை, கிழக்கிலும் நாட்டின் வேறு பகுதிகளிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளினால் நடத்தப்படுவதாக கூறப்படும் பதிவுசெய்யப்படாத ஒழுங்கமைக்கப்படாத வரத்தக நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடு்க்கவேண்டியதும் முக்கியமானதாகும்.
இஸ்ரேலியர்கள் மாத்திரமல்ல, வேறு பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களது விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர்கள் பணத்தை வெளிநாடுக்களுக்கு அனுப்புவதற்கு வசதியாக வெளிநாட்டு வங்கி கணக்குகளையும் வெளிநாட்டு கடன் அட்டை இயங்திரங்களையும் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் வெளிநாட்டு நாணயங்களில் பணப்பரிமாற்றத்தைச் செய்வதற்கான வசதிகளையும் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய ஒழுங்கமைக்கப்படாத வர்த்தக நடவடிக்கைகள் உள்நாட்டு சுற்றுலாத் தொழில்துறைக்கு பாரிய அச்சுறுத்தலை தோற்றுவிக்கிறது.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக புதிய அரசாங்கம் எந்த விதமான அரசியல் அனுசரணையும் காட்டாமல் நிதித்துறை மற்றும் குடிவரவுத்துறையுடன் சேர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
பெருமளவில் முஸ்லிம் சனத்தொகை ஒன்று வாழ்கின்ற இலங்கையின் கிழக்கில் பள்ளிவாசல்களுக்கு அண்மையாக யூதவழிபாட்டு தலங்களை அமைப்பது குறிப்பாக, அண்மைக்கால உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில் சிலரால் உண்மையில் ஒரு ஆக்கிரமிப்பாக அல்லது ஆத்திரமூட்டும் செயலாக கருதப்படலாம்.
உள்ளூர் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால், அந்த பகுதிகளில் உள்ள உள்ளூர் சனத்தொகையின் பிரதிபலிப்பு அறிவுபூர்வமானதாக --- நிதானமானதாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பகுதிகளின் மக்கள் இஸ்ரேலியர்களினாலும் ஏனைய சுற்றுலா பயணிகளினாலும் கொண்டுவரப்படுகின்ற வர்த்தகங்களை வரவேற்றிருப்பதுடன் அவற்றை ஆபத்தாக பார்க்கவுமில்லை.
2022 பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு நாடுபூராவும் மக்கள் குறிப்பாக பொருளாதார விவகாரங்களில் அறிவுபூர்வமாகவும் பெருமளவில் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காத முறையிலும் நடந்து கொள்கிறார்கள்.
இதே போன்ற ஒரு தோற்றப்பாட்டை நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்ட அண்மைய கருத்தரங்கு ஒன்றிலும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
அவர்கள் சகல இன, மத சமூகங்களையும் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். மற்றைய சமூகங்களை அல்லது மதங்களை பரஸ்பரம் சந்தேகத்துடன் அல்லது அவநம்பிக்கையுடன் அவர்கள் நோக்கவில்லை என்பது அவர்களுக்கு இடையிலான ஊடாட்டங்களின் முக்கியமான அம்சமாகும்.
இலங்கைச் சமூகத்தின பன்முகத்தன்மையை சுற்றியுள்ள பிரச்சினைகளும் இந்த பல்வகைமையை இசைவுபடுத்துவதற்கு தேவையான அரசியல் கட்டமைப்புகளும் குறித்து ஒரு அறிவார்ந்த முறையில் கருத்தரங்கில் ஆராயப்பட்டது.
இந்த சவாலுக்கு புதிய அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டியது அவசியமாகும். தேசிய நல்லிணக்கத்துக்கும் இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வுக்கும் அவசியமான அடிப்படை கட்டுமானங்கள் கைக்கெட்டிய தூரத்தில் இருப்பதாக தோன்றுகிறது.
மாகாணங்களின் ஆளுநர்களையும் வேறு அதிகாரிகளையும் அழைத்து அவர்களின் ஆட்சிமுறை வகிபாகங்களை மேம்படுத்துவது குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க நீண்டகாலமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தல்களை அடுத்த வருடம் நடத்தப் போவதாகவும் அறிவித்தார்.
ஜனாதிபதி எடுத்திருக்கும் இந்த நிலைப்பாடு குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களினால் வரவேற்கப்படும் சாத்தியம் சாத்தியம் இருக்கிறது.
மாகாணசபை முறை என்பது ஆட்சிமுறையை பன்முகப்படுத்துவதை பற்றியது மாத்திரமல்ல, மாகாண மட்டத்தில் மக்களினால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் தீர்மானங்களை எடுப்பதற்கு வழிசெய்யும் ஒரு பரவலாக்கப்பட்ட ஆட்சிமுறையுமாகும்.
இந்த தர்க்க நியாயத்தின் பிரகாரம் நோக்கும்போது மத்திய அரசாங்கத்திடம் இருந்து வருகி்ற அறிவுறுத்தர்கள் மாகாணசபை முறையின் நோக்கங்களை பூர்த்திசெய்வது சாத்தியமில்லை.
ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற அதிகாரிகளை வைத்து நிருவகிப்பது அல்ல மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற உள்ளூர் பிரதிநிதிகளுக்கு அதிகாரமளிப்பதே அவசியமாகும்.
அவசரத்தேவை
மாகாணசபை முறை பெரும் செலவுபிடிக்கிற ஒன்றாக இருக்கிறது என்பது அதற்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற பொதுவான விமர்சனங்களில் ஒன்றாகும். ஆட்சிமுறையின் மேலதிகமான ஒரு அடுக்கான மாகாணசபைகள் ஏற்கெனவே நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கும் தேசிய பட்ஜெட்டுக்கு ஒரு நிதிச்சுமையாக இருக்கிறது என்று வாதிடப்படுகிறது.
ஆனால், செலவைக் கட்டுப்படுத்திச் செயற்படவேண்டும் என்பது ஒரு நியாயபூர்வமான அக்கறையாக இருக்கின்ற அதேவேளை, நிதி சம்பந்தப்பட்ட காரணிகளில் மாத்திரம் கவனத்தைக் குவிப்பது அரசியல் அதிகாரமளித்தல் மற்றும் பொருளாதார ஒப்புரவு தொடர்பிலான ஆழமான மதிப்பை மலினப்படுத்தும் ஆபத்தை கொண்டிருக்கிறது.
அரசியல் மற்றும் பொருளாதார மத்தியமயப்படுத்தலை உன்னிப்பாக நோக்கும்போது அது பொருளாதார அசமத்துவத்தை நீடித்திருக்கச் செய்யும் கணிசமான ஏற்றத்தாழ்வுக்கு வழி வகுத்திருப்பதையும் மிகவும் முக்கியமாக மூன்று தசாப்தகால உள்நாட்டுப்போருக்கு இட்டுச்சென்ற அரசியல் புறக்கணிப்பு உணர்வுக்கும் காரணமாக விளங்கியதை புரிந்துகொள்ள முடியும்.
சர்வதேச பின்புலத்தில் நோக்கும்போது பன்முகப்படுத்தப்பட்ட ஆட்சாமுறையின் மூலமான அதிகாரப் பகிர்வு பரப்பளவில் பெரிய இந்தியா மற்றும் இலங்கையைப் போன்ற சிறிய பரப்பளவைக் கொண்ட சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் உட்பட பல்கலாசார -- பல்லின் சமூகங்களில் நியமமாகிவிட்டதை காணமுடியும்.
சுவிட்சர்லாந்து கணிசமான சுயாட்சியுடன் கூடிய 26 கன்ரோன்களை கொண்டிருக்கிறது. இந்த கட்டமைப்பு சுகாதாரம், கல்வி மற்றும் பொலிஸ் போன்ற துறைகளில் சுயாட்சியுடன் கன்ரோன்களுக்கு அதிகாரளிக்கிறது.
சமஷ்டி அரசாங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை சுவிஸ் அரசியலமைப்பு விபரிக்கின்ற அதேவேளை, ஏனைய சகல அதிகாரங்களும் கன்ரோன்களுடன் உள்ளன. தீர்மானங்களை மேற்கொள்வதில் கன்ரோன் நிருவாகங்களுக்கு ( உள்ளூராட்சி அரசாங்கங்கள் ) கணிசமான சுதந்திரம் இருக்கிறது.
இலங்கையில் ஒருபுறத்தில், மத்திய அரசாங்கம் பெரும்பாலான செயற்கடமைகள் தொடர்பில் கணிசமான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.
பாதுகாப்பு, நிதித்துறை, தேசியக் கொள்கை போன்ற விவகாரங்கள் மிகவும் இறுக்கமாக மத்தியமயப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதேவேளை மாகாணசபைகள் விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற உள்ளூர் விவகாரங்களில் ஓரளவு அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால், சுவிஸ் கன்ரோன்களுடன் ஒப்பிடும்போது எமது மாகாணசபை மிகவும் மடடுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன.
இலங்கைக்கு அதுவும் குறிப்பாக " முறைமை மாற்றம் " ஒன்றுக்கான கோரிக்கை மக்களிடம் இருந்து வந்திருப்பதுடன் இனத்துவ சிறுபான்மைச் சமூகங்கள் அதிகாரப் பரவலாக்கத்தை வேண்டிநிற்கின்ற நிலையில் பன்முகப்படுத்தப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்கான தேவை முன்னெப்போதையும் விட பெருமளவுக்கு அவசியமாகிறது.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் வெளியேறிய பிறகு ஆட்சிவழக்கில் இருந்துவரும் மத்தியமயப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை வகைமாதிரி கணிசமான அரசியல் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வை தோற்றுவித்துவிட்டது.
வளர்ச்சியினதும் நவீனமயமாக்கத்தினதும் சந்தடிமிக்க மையமாக கொழும்பு அபிவிருத்தியடைந்திருக்கும் அதேவேளை, பல மாகாணங்கள் பொருளாதார ரீதியில் ஓரங்கட்டப்பட்டிருப்பதுடன் உள்ளூர்ப் பிரச்சினைகளை செயல்விளைவுடன் கையாளுவதில் மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலுடன் அரசியல் ரீதியாக அதிகாரமற்றவையாகவும் இருக்கின்றன.
மத்தியமயப்படுத்தப்பட்ட தீர்மானம் எடு்க்கும் செயன்முறை நாடுபூராவுமுள்ள பல்வகைப்பட்ட இனத்துவ மற்றும் பிராந்திய சமூகங்களின் தேவைகளைக் கையாளுவதற்கு போதுமானதாக இல்லை என்பது பெரும்பாலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதன் விளைவாக பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து சமூக அமைதியின்மைக்கு தூண்டுதலளிக்கிறது.
உதாரணமாக, விவசாயம், உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட கொள்கைகள் உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் மாகாணத்துக்கு மாகாணம் பொருத்தப்பாட்டிலும் அவசியத்திலும் பெருமளவுக்கு வேறுபடுகின்றன.
மலையகத்தின் தேவைகள் கரையோரப் பகுதிகளின் தேவைகளில் இருந்து வேறுபடுகின்றன என்பது தெளிவானது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற ஆளுநர்கள் செயற்திறன் மிகுந்த நிருவாகிகளாக இருக்கலாம்.
ஆனால் அவர்களிடம் உள்ளூர்ப் பிரச்சினைகள் தொடர்பில் மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளுக்கு இருக்கின்ற நுண்ணயமான புரிந்துணர்வும் ஆழமான பற்றுறுதியும் இல்லை.
மாகாணசபை முறையின் நோக்கம் உள்ளூரில் மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளே தீர்மானங்களை எடுப்பதற்கு அனுமதிப்பதேயாகும்.
மாகாணசபை முறைக்கு புத்துயிர் கொடுத்து நிதி மற்றும் நிரவாக சுயாட்சியுடன மாகாணங்களுக்கு அதிகாரமளித்தால் இலங்கையின் ஆட்சிமுறை புதிய யுகமொன்றுக்குள் பிரவேசிக்கமுடியும்.
அது சகல சமூகங்களினதும் அபிலாசைகளை நிறைவுசெய்வதாகவும் பிராந்திய அபிவிருத்தியை ஊக்குவிப்பதாகவும் அமையமுடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM