கந்த சஷ்டி என்பது முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த வரலாற்றையும் பெரும் தத்துவத்தையும் விளக்கும் விரதமாகும்.
ஷஷ்டி என்றால் ஆறு. ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் ஷஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி விரத காலமாகும். இந்த ஆறு நாட்களிலும் சைவர்கள் கந்தப்பெருமானின் இன்னருள் வேண்டி விரதம் இருப்பர்.
இவ்வருடம் கந்த சஷ்டி விரதம் இன்று சனிக்கிழமை (02) ஆரம்பமாகி, தொடர்ந்து 7 நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது.
கந்தன் வரலாறு
சூரனால் சிறைபிடிக்கப்பட்டு பல இன்னல்களை அனுபவித்த அமரர்களான தேவர்கள், முழு முதற் கடவுளான ஈசனை வேண்டி தவமிருந்தனர்.
அவர்களின் தவத்தால் சிவபெருமான் தன்னுடைய ஆறு திருமுகங்களான சத்யோஜாதம், தற்புருஷம், வாமதேவம், ஈசானம், அஹோரம், திருவதனம் ஆகிய முகங்களிலிருந்து ஆறு தீப்பொறிகளை சரவணப்பொய்கை எனும் பொய்கையில் ஆறு பொற்றாமரைகளில் ஒளிரச் செய்தார். அதன் பயனாக ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகள் அவதரித்தன. ஆறு குழந்தைகளையும் ஆறு திருக்கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர்.
ஈசன் குறிப்பிட்ட நன்னாளில் சக்தியாகிய பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக கட்டியணைக்க அது ஒரு குழந்தையானது. அவரே கந்தப்பெருமான்!
யௌவனப் பருவமாகிய வாலிப வயதை கந்தப் பெருமான் அடைகின்ற தருணத்தில் சக்திதேவி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி "சக்திவேல்" எனும் வேலாயுதத்தை கந்தனுக்கு வழங்கினாள்.
சூரனுடன் போர் தொடுக்க ஐப்பசித் திங்கள் பிரதமையன்று நாள் குறிக்கப்பட்டது. சக்தி வேலுடன் தேவர்களை காக்கும் நோக்குடன் சமருக்கு புறப்பட்டார் கந்தன். இதனால் "தேவசேனாபதி" (தேவர் படைக்கு சேனாதிபதி) என்றும் போற்றப்பட்டார்.
முருகனுக்குத் துணையாக சிவனின் அம்சத்தில் அவதரித்த வீரபாகுவும் சில வீரர்களும் கந்தனுடன் போருக்குச் சென்றனர். ஆறு நாட்கள் நடைபெற்ற சூரசம்ஹாரத்தின் முடிவில் முருகன் மாமர வடிவில் நின்ற சூரபத்மனை தன் சக்திவேலினால் இரண்டாகப் பிளந்தார்.
பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமானது. சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார்.
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரை சைவ சித்தாந்தம் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என குறிக்கிறது.
ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவ மலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூரசம்ஹார தத்துவம்.
கந்த சஷ்டி விரதம்
கந்த சஷ்டி அனுஷ்டிக்கப்படும் ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர்.
பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் உணவருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
ஷஷ்டியின் மகத்துவத்தினையும் முருகப்பெருமான் ஆற்றிய லீலைகளையும் கந்தபுராணம் மிக அழகாக சொல்கிறது.
கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு
முருகப்பெருமான் புகழ் பாடும் பாடல்கள் பல்லாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது "கந்த சஷ்டி கவசம்".
பாலதேவராய சுவாமிகளே கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கினார்.
ஒரு முறை அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.
வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு சென்றார். அவர் அங்கு சென்ற நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.
ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை செய்துகொள்ளலாம் என்று நினைத்தார்.
கந்தப்பெருமானை வேண்டி சஷ்டி விரதம் அனுஷ்டித்தார்.
முதல் நாள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி அமர்ந்து தியானம் செய்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சியளித்து அருள் புரிந்தார்.
அப்போது கந்தன் பாலதேவராய சுவாமிகளுக்கு சஷ்டி கவசம் பாடும் திறமையையும் வல்லமையையும் அளித்தார்.
அவ்வேளை உதித்த வரிகள் இவை...
சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்....
கலியுக வரதனான கந்தப்பெருமானின் பேரருள் வேண்டி சஷ்டி விரத நாட்களில் அறுபடை வேலவனை சரணடைந்து நற்பேறு பெறுவோமாக!
- எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்,
கம்பளை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM