தயாரிப்பு : ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் & சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்
நடிகர்கள் : சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ், புவன் அரோரா, கீதா கைலாசம் மற்றும் பலர்.
இயக்கம் : ராஜ்குமார் பெரியசாமி
மதிப்பீடு : 3/5
'உலகநாயகன்' கமல்ஹாசனின் தயாரிப்பில், சிவ கார்த்திகேயனின் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உருவான 'அமரன்' திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாரான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த முகுந்த் வரதராஜன் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அன்று காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஷோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது வீர மரணம் அடைந்தார்.
அவரின் சொந்த வாழ்க்கை மற்றும் ராணுவத்தில் அவர் ஆற்றிய பணிகள் ஆகியவற்றை அவரின் மனைவியான இந்து மூலமாக பார்வையாளர்களுக்கு நனவோடை உத்தி மூலம் திரை மொழி மற்றும் காட்சி மொழி வழியாக சொல்லப்பட்டிருக்கும் அவரின் வீர செறிந்த வாழ்க்கை தான் இந்த 'அமரன்'.
இதுபோன்ற சுயசரிதை திரைப்படங்களின் கதை பார்வையாளர்களுக்கு தெரியும் என்பதால் அவர்களை பட மாளிகையில் அமர்ந்து ரசிக்கும் வகையில் தொய்வடையாமல் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதையாக சொல்வதில் கடும் சவால் இருக்கிறது.
இந்த சவாலை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி 50 : 50 சதவீத அடிப்படையில் சொல்லி ரசிகர்களை ஆறுதல் அடைய செய்திருக்கிறார்.
முகுந்த் வரதராஜனின் இளமைக்கால வாழ்க்கையையும் அவர் சொந்த வாழ்க்கையில் காதலில் வெற்றி பெறுவதற்காக நடத்திய போராட்டத்தையும் நேர்த்தியாகவும், சுவாரசியமாகவும் திரைக்கதையாக்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஆனால் முகுந்த் வரதராஜனின் லட்சியமான ராணுவ பணி குறித்த விடயங்களை விவரிக்கும் போது பார்வையாளர்களுக்கு போதுமான புரிதல் ஏற்படவில்லை.
இருந்தாலும் அந்த காட்சிகள் அனைத்தும் உணர்வு பூர்வமானவையாகவும், தேசப்பற்றுடனும் அமைக்கப்பட்டதால் ரசிக்க வைக்கிறது. ராணுவம் தொடர்பான விடயங்கள் விரிவாகவும், துல்லியமாகவும் காட்சிப்படுத்தப்படாததற்கு இந்த கதை முகுந்த் வரதராஜனின் மனைவியின் பார்வை மூலமாக வழங்குவதால் கூட இருக்கலாம்.
ஏனெனில் ராணுவம் தொடர்பான விடயங்களை ராணுவ வீரரான முகுந்த் அவர் மனைவியிடம் எந்த அளவிற்கு பகிர்ந்து கொள்ள முடிந்திருக்குமோ அந்த அளவிற்கு தான் இயக்குநர் ரசிகர்களுக்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.
இருப்பினும் பார்வையாளர்களுக்கு காஷ்மீரில் ராணுவம் தொடர்பான விடயங்களை விட அம்மாநிலத்தில் வாழும் மக்களின் உணர்வு நாளாந்த வாழ்க்கை சுதந்திரத்திற்கான வேட்கை தீவிரவாத செயலான கல்லெறிதல் சம்பவம் தீவிரவாதிகள் இது தொடர்பான காட்சிகள் அதிகம் இடம் பிடித்திருப்பதால் தேச பக்திக்கு எதிரான ஒருவகையான எதிர்மறை உணர்வையும் ஏற்படுத்துகிறது.
முகுந்த் வரதராஜனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தன்னுடைய அனுபவமிக்க நடிப்பையும், கம்பீரமான உடல் மொழியையும் அளித்து அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார்.
இவரை விட கதையின் நாயகியாக நடித்திருக்கும் சாய் பல்லவி கதையை தாங்கி பிடித்து நடித்திருப்பது பாராட்டத்தக்கது.
உண்மையில் ஒரு ராணுவ வீரனின் வீரம் செறிந்த சுயசரிதையை அவரது மனைவியைத் தவிர வேறு எவராலும் உணர்வு பூர்வமாகவும் தேசப்பற்றுடனும் விவரிக்க இயலாது என்பதனை தனது நடிப்பால் நிரூபித்திருக்கிறார் சாய் பல்லவி.
ராணுவம் தொடர்பான எக்சன் காட்சிகளிலும் , சிவகார்த்திகேயன் , சாய் பல்லவி இடையேயான காதல் காட்சிகளிலும், காஷ்மீர் தொடர்பான நிலவியல் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் சாய் திறமையான தொழில்நுட்பக் கலைஞர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
அதேபோல் உணர்வு பூர்வமான காட்சிகளையும், எக்சன் காட்சிகளையும் தன்னுடைய பின்னணி இசையால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஜீவி பிரகாஷ் குமார்.
ராணுவ வீரனின் சுயசரிதையை உணர்வுபூர்வமாக வழங்கியதற்காக படக்குழுவினரை பாராட்டலாம்.
அமரன்- ராயல் சல்யூட்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM