முற்போக்கு இலக்கிய ஆளுமை தலாத்து ஓய கே.கணேஷின் நூற்றாண்டு விழாவும் நூல் வெளியீடும் - ஒரு பார்வை

Published By: Nanthini

30 Oct, 2024 | 05:11 PM
image

(மா.உஷாநந்தினி)

படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்  

“மணிக்கொடி எழுத்தாளர்” என மணிமகுடம் சூடிக்கொண்ட மலையகத்தின் முற்போக்கு இலக்கிய ஆளுமை தலாத்து ஓய கே.கணேஷ்.

இவர் எழுத்தை வாழ்வியலோடும் மானுடத்தின் உயரிய கொள்கைகளோடும் இணைத்து, மனித உணர்வுகளை அதிகமாக எழுத்தில் பதிவுசெய்தது மட்டுமன்றி, மார்க்சிய கருத்துக்களையும் பல கோணங்களில் வெளிப்படுத்திய முன்னோடி சிந்தனையாளர்.

1920ஆம் ஆண்டு கண்டியில் பிறந்து, பின்னாட்களில் சர்வதேசத்தின் பார்வையில் எழுத்தாளராக, இலக்கிய, சமூக செயற்பாட்டாளராக மிளிர்ந்து, 2004இல் மறைந்த பின்னரும், இன்றளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் பன்முக வித்தகர் கே.கணேஷின் நூற்றாண்டு விழாவும் அவரது தொகுப்பு நூல் வெளியீடும் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.

தலாத்து ஓய கே.கணேஷின் புதல்வியான ஜெயந்தி ஆனந்தின் தலைமையில் பி.பி. தேவராஜ் அறக்கட்டளையின் தலைவரும் முன்னாள் இந்து கலாசார இராஜாங்க அமைச்சருமான பி.பி. தேவராஜ் நெறியாள்கையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் துணைத்தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே பிரதம விருந்தினராக இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.

அத்துடன், “ஞானம்” சஞ்சிகையின் ஆசிரியர் தி.ஞானசேகரன், மலையக இலக்கியவாதி மு.சிவலிங்கம், கவிஞர் மேமன் கவி, பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை முதுநிலை விரிவுரையாளர் முனைவர் எம்.எம்.ஜெயசீலன், வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன், மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம், மலையக மகளிர் சங்கத் தலைவி பிரியா கார்த்திக், கே.கணேஷின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் தலைமை உரையினை எழுத்தாளர் கே. கணேஷின் புதல்வி ஜெயந்தி ஆனந்த் ஆற்றியதை தொடர்ந்து, கே.கணேஷின் கொள்ளுப்பெயரன் அவிணாஷ் வேலாயுதம் ஆங்கில உரையினை வழங்கினார். 

தொடர்ந்து, இந்நூற்றாண்டு விழாவில் பேராசிரியர் சபா. ஜெயராசா மெய்நிகர் வழியாக வழங்கிய வாழ்த்துரையில்,

“கே. கணேஷ் இலங்கை முற்போக்கு இயக்கத்துக்கு வலுவூட்டிய சோசலிச நடப்பியல் எழுத்தாளர். கருத்தியல் நிலையிலும் படைப்பு மலர்ச்சி நிலையிலும் எழுத்துப் பணியை வினைப்பாட்டுக்கு இட்டுச் சென்றவர். இயங்கியல் தர்க்கத்தோடு ஒன்றித்தவர்.

மலையகத் தளத்தில் நின்று முற்போக்கு உலகை தரிசிக்கும் ஆற்றல் கொண்டவர். இளம் தலைமுறையினருக்கு அவர் அமைத்துத் தந்த செம்மையுறு ஆற்றுப்படுத்தல் என்றும் உள்ள தமிழாய் நிலைத்து நிற்கும்.

'அழகுக்காக மட்டும் எழுதாதீர்கள்; சமூக ஆக்கத்துக்கும் ஒடுக்குமுறையை விடுவிக்கும் விடுதலைக்காகவும் எழுதுங்கள்' என்ற அவரது அழைப்பு செவ்வழி நனவுடையது. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை முதலான எழுத்துத்துறைகளில் அவர் பதித்த தடங்கள் நீடித்து நிலைத்து நிற்பவை” என தெரிவித்தார்.  

“ஞானம்” சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன் தனது வாழ்த்துரையின்போது கே.கணேஷை நேர்காணல் செய்த தனது அனுபவத்தையும் கணேஷ் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளில் சிலவற்றையும் தொட்டுச் சென்றார்.

“1946இல் நண்பர் இராமநாதனோடு இணைந்து ‘பாரதி’ என்ற சிற்றிதழை வெளிக்கொணர்ந்தார் கே.கணேஷ். வெறும் ஆறு இதழ்கள் மட்டுமே வெளியாகின. ஆனால், அந்த சிற்றிதழில் கணேஷ் ஒரு கதையை கூட எழுதவில்லை” என்று சொன்னது வியப்பை ஏற்படுத்தியது.

மலையக இலக்கியவாதி மு. சிவலிங்கம் உரையாற்றுகையில்,

“தற்போது பிழையான மொழிபெயர்ப்பு காரணமாக எத்தனையோ இலக்கியங்கள் அழிந்துவிட்டன. சேதமாகிவிட்டன. இலக்கியங்களை மொழிபெயர்க்கிறபோது வெறுமனே வசனங்களையும் கவிதைகளையும் மொழிபெயர்க்காமல், கோபம், ஆத்திரம், சந்தோஷம் போன்ற மனித உணர்வுகளையும் மொழிபெயர்க்க வேண்டும் என கணேஷ் சொல்கிறார்...” என்றார்.

தி.ஞானசேகரன் ஒரு முறை கே.கணேஷை நேர்கண்டபோது, மலையக எழுத்தாளராக இருந்தபோதிலும் மலையகத் தொழிலாளர்கள் பற்றி எழுதவில்லை என்கிற கணேஷ் மீதான விமர்சனத்தை கேள்வியாக முன்வைத்தார். அதற்கு கணேஷ்,

“நான் இருக்கும் இடம் சுற்றுச் சார்புகள் சிங்களக் கிராமமாக இருக்கிறது. இந்நிலையில், தேயிலைத் தோட்டம் தொலைநோக்கிச் செல்ல நேர்ந்ததால் தேயிலைச் செடிகள் கண்ட வாய்ப்பே எமக்கு அறிய முடிந்தது. அங்கு வசித்த தொழிலாளிகளை பற்றியோ தேயிலை பயிர்ச்செய்கை சூழ்நிலைகள் குறித்து அறிய எனக்கு பெரிதும் வாய்க்கவில்லை.

நான் வாழ்ந்த கண்டிய சூழ்நிலையில் மலையகத்து மக்களது வாழ்வு குறித்து ஆக்கங்கள் படைக்க தகுதியற்றவனாக இருந்த நிலையில் கற்பனையில் கதைகளோ கவிதைகளோ புனைய நான் விரும்பவில்லை. ஒரு ஓட்டம் பார்த்து வந்து அவர்களது உள்ளாத்மாவையே உணர்ந்துவிட்டதாகப் பம்மாத்து புரிய மனம் வரவில்லை. இதுவே மலையகத்தை குறித்து நான் கவனம் செலுத்த முடியாமைக்கான காரணம்.

மலைநாடு என்று நான் தனியாக நோக்கவில்லை. சமத்துவநிலை ஏற்படும்போது பெரு வெள்ளம் வந்து சிறுகுப்பை கூழங்களை அழித்துச் சமநிலையாக்கிவிடும் என்று நினைத்தேன்” என்று பதிலளித்தார். இதையும் சற்றே வருத்தத்தோடு மு.சிவலிங்கம் சபையில் நினைவுபடுத்தினார்.

தொடர்ந்து, மேமன் கவி தனது வாழ்த்துரையில், “ஓநாய்களை ஒழிப்பதற்காய் முயல்களுக்கு ஆயுதம் அளித்தால்....” என தொடங்கும் கே.கணேஷின் “முயல்கள்” என்ற மொழிபெயர்ப்புக் கவிதையினை வாசித்துக் காட்டினார்.

கே.பொன்னுத்துரை தொகுத்த “முற்போக்கு இலக்கிய ஆளுமை - கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்” நூலின் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை கே.கணேஷின் புதல்விகளான ஜெயந்தி ஆனந்த், திருமதி மாரிமுத்து, திருமதி பாலசுப்ரமணியம் ஆகியோர் பி.பி.தேவராஜுடன் இணைந்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் துணைத்தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேக்கு வழங்கிவைத்தனர்.

அதை தொடர்ந்து, கலாநிதி சத்யஞ்சல் பாண்டே தனது உரையில்,

“கே.கணேஷ் ஓர் இலக்கியவாதியாக, எழுத்தாளராக, கவிஞராக மட்டுமன்றி, சமூக செயற்பாட்டாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த விடயம் இந்திய சுதந்திர இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை முன்னிறுத்திக் காட்டுகிறது.

கே.கணேஷ் எமக்கும் இலங்கை தமிழ் சமூகத்தினருக்கும் இடையேயான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறார். இங்கு நாம் ஒரு தனிநபரை கொண்டாடுவதை விடுத்து, உலகளாவிய புவிசார் அரசியலில் தமிழர் பங்களிப்பு, தமிழர் வாழ்வு, தமிழ் சமூகத்தின் வளர்ச்சியை கொண்டாடுபவர்களாக இருக்கிறோம்” என்றார்.

எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, மௌனி வரிசையில் தனது “ஆசாபாசம்”, “மகாசக்தி” போன்ற சிறுகதைகளை மணிக்கொடியில் எழுதிய கே.கணேஷ், இலங்கையில் வீரகேசரி, சுதந்திரன் என சில பத்திரிகைகளில் பணியாற்றியும் இருக்கிறார்.

குறிப்பாக, 1949இல் வீரகேசரி பத்திரிகையுடன் இணைந்து பணியாற்றியபோது, இவரது “சத்திய போதிமரம்” என்ற சிறுகதை வீரகேசரியில் வெளியானது.

“நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து வெளிவந்த வீரகேசரி சுதந்திரமலர் தயாரிக்கும் பொறுப்பும் அப்போது எனக்கு கிடைத்தது...” என ஒரு நேர்காணலில் கே.கணேஷ் குறிப்பிட்டிருந்தார்.

“பால்காரப் பழனி”, “சட்டமும் சந்தர்ப்பமும்”, “ஆகஸ்ட் தியாகி ஆறுமுகம்” முதலான சிறுகதைகளை 1930 - 50 காலகட்டத்தில் எழுதியுள்ளார்.

முல்க்ராஜ் ஆனந்தின் 'Untouchable' நாவலை “தீண்டாதான்” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். குவாஜா அகமது அப்பாஸின் “குங்குமப்பூ”, “ஹோசிமின் சிறைக் குறிப்புகள்” என இவரது மொழிபெயர்ப்பில் 22 நூல்கள் வெளியாகின.

இருப்பினும், கே.கணேஷின் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் பேசப்படும் அளவுக்கு அவரது சுய படைப்புகள் கவனிக்கப்படவில்லை என்கிற குறை இலங்கை தமிழ் இலக்கிய சமூகத்தினரிடையே நிலவி வருகிறது. அவரது சுய படைப்புகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படாமையே இதற்கு காரணம் என்றொரு கருத்து கே.கணேஷின் நூற்றாண்டு நிகழ்வில் முன்வைக்கப்பட்டது.

“மறைந்த முற்போக்கு இலக்கிய ஆளுமை தலாத்து ஓய கே.கணேஷ் பற்றிய ஆய்வுகளை நோக்குகிறபோது, அவரது தொடக்ககால பங்களிப்புகளே அவரது மொத்த பங்களிப்பாக முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால், அவரிடம் கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் நிறைய இருக்கின்றன. அதற்கு, அவர் வழங்கிய நேர்காணல்களே ஆதாரங்கள். இருப்பினும், கே.கணேஷை விரிவாக ஆய்வு செய்வதற்கு தகுந்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை.

கணேஷின் மொழிபெயர்ப்புகள் மட்டுமே நூல்களாக வெளிவந்துள்ளனவே தவிர, அவரது சுய படைப்புகளான கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் முதலிய எவையும் இதுவரை தொகுத்து ஆவணப்படுத்தப்படவில்லை.  

மொழிபெயர்ப்புகள் மட்டுமன்றி, கே.கணேஷ் எழுதிய அனைத்துப் படைப்புகளும், அவரது இலக்கிய, சமூக செயற்பாடுகளும், அவரது வரலாறும் கால வரிசைப்படி முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு ஆவணப்படுத்தும் பணிகளை நிறைவேற்ற வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் மிகப் பெரிய கடமை. அதுதான் கே. கணேஷுக்கு நாம் செலுத்தக்கூடிய அதி உயர்ந்த மரியாதை. இதுவே, கே.கணேஷின் சிந்தனைகளையும் படைப்புகளையும் உரிய முறையில் அடுத்த தலைமுறைக்கு கையளிப்பதாக அமையும்” என்கிற எதிர்பார்ப்பை சிறப்புரை ஆற்றிய முனைவர் எம்.எம்.ஜெயசீலன் அரங்கத்தில் முன்வைத்தார்.

உண்மையே. பாரம்பரிய இலக்கியவாதிகளின் படைப்புக்களை பாதுகாப்பதும், அந்த படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதும் காலக்கண்ணாடியாக விளங்கும் இலக்கியங்களின் நிலைபேறுக்கு மிக அவசியம்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2024-11-11 11:28:32
news-image

சப்த ஸ்வர லய இசை விழா...

2024-11-11 21:27:07
news-image

கந்த சஷ்டியை முன்னிட்டு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2024-11-11 11:09:18
news-image

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் மரித்த ஆத்மாக்களுக்கு...

2024-11-11 10:42:19
news-image

கொழும்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வு 

2024-11-10 19:13:21
news-image

பார்வைக்குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான இலவச சவூதி...

2024-11-10 15:59:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர்...

2024-11-10 15:45:38
news-image

உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் பெண்...

2024-11-09 21:18:50
news-image

கொழும்பு, வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி...

2024-11-09 18:11:53
news-image

முன்பள்ளி ஆசிரியர்களை தயார்ப்படுத்தல் தொடர்பான கருத்தரங்கு 

2024-11-09 18:05:54
news-image

மன்னார் மாவட்டத்தில் முதல்முறையாக வுஷூ விளையாட்டு...

2024-11-09 19:48:33
news-image

கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி...

2024-11-09 10:55:58