சி.சிவகுமாரன்
‘எனது முன்னோர்கள் தேயிலைத்தோட்டங்களில் உழைப்பதற்காகவே வந்தார்கள். நான் அதிலிருந்து விடுபட்டு வேறு தொழிலை இலக்காகக் கொண்டு எனது கல்வியைத் தொடர்ந்தேன். இன்று எனது முன்னோர்களும் பெற்றோர்களும் பணியாற்றிய தோட்டத்தில் பொறுப்பான ஒரு பதவியில் இருக்கின்றேன்’ இதற்கு எனது முயற்சியும் பெற்றோரின் தியாகங்களும் நான் தற்போது கடமையாற்றும் தோட்ட முகாமைத்துவத்தின் ஊக்குவிப்புமே காரணம்’ என நுவரெலியா பீட்று தோட்டத்தின் தேநீர் நிலைய உத்தியோகத்தராகவும் உல்லாசப்பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் விளங்கும் சிவகவி கலைவாணி தெரிவிக்கின்றார்.
களனிவெளி பிளாண்டேஷன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நுவரெலியா பீட்று தோட்டம், தேயிலைத் தொழிற்சாலை, தேநீர் விருந்தக நிலையம் (Tea Centre) என்பன தினந்தோறும் உல்லாசப்பயணிகள் வருகை தரும் இடமாக உள்ளது.
தேயிலை பதனிடம் மற்றும் அரைத்தல் செயற்பாடுகள், அழகிய இயற்கை சூழலில் அமைந்த தேயிலைத் தோட்டம் ஆகியவற்றை சுற்றிக்காட்டி அதன் வரலாற்றை எடுத்துக் கூறும் பணிகள் மாத்திரமின்றி, பாரம்பரிய சிலோன் டீ வர்த்தக நாமத்தை உலகெங்கும் கொண்டுச் சென்ற நுவரெலியா பிரதேச தேநீரை சுவைத்துப் பருகும் இடமாக விளங்கும் பீட்று தேநீர் விருந்தக நிலையத்தின் உத்தியோகத்தராகவும் கடமையாற்றுகிறார் கலைவாணி.
உயர்தரம் கற்ற சில பெண்கள் தோட்டங்களை விட்டு தலைநகர் சென்று உழைத்து வரும் நிலையில் தான் வாழ்ந்த தோட்டத்திலேயே எவ்வாறு வருமானம் தரும் ஒரு நிரந்தர தொழிலைப் பெற்றுக்கொண்டேன் என தனது அனுபவங்களை இங்கு அவர் பகிர்ந்து கொள்கிறார்.
உயர்கல்வி
எனது பெற்றோர்கள் இதே தோட்டத்தில் தொழிலாளர்களாக பணியாற்றியவர்கள். அவர்களின் பெற்றோர்களும் அவ்வாறே இந்தத் தோட்டத்துக்கு வந்தவர்கள். எனது குடும்பத்தில் ஆறு பேர். நான் ஐந்தாவது பிள்ளை. நான் வேறு தொழிலை இலக்கு வைத்து படித்தேன்.
நுவரெலியா புனித திரித்துவ கல்லூரியில் உயர்தரம் வரை கற்றேன். கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் அளவுக்கு உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றேன். ஆசிரிய தொழிலுக்கு விண்ணப்பிக்கும் காலம் வரை ஏதாவது கற்கலாம் என யோசித்தேன்.
எனது நண்பர்களின் ஆலோசனைக்கு அமைய நுவரெலியா காமினி திசாநாயக்க தொழில்நுட்ப தொழிற்கல்வி நிலையத்தில் கணணியும் ஆங்கிலமும் கற்றேன். ஒரு வருட பயிற்சி நெறியின் பின்னர் அடுத்த கட்டத்துக்கு ஆயத்தமாகையில் எமது தோட்டத்தின் டீ சென்டரில் வேலை வாய்ப்பு இருப்பதாக தந்தை மூலம் அறிந்தேன். உயர்தரம் மற்றும் மேலதிக கணணி, ஆங்கில தகைமை சான்றிதழ்களுடன் நேர்முகத்துக்கு சென்றேன். என்னை தோட்ட முகாமைத்துவம் தெரிவு செய்தது.
எனக்கு சுமார் ஆறு மாத காலம் மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டன. தலைநகரிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தோட்ட முகாமையாளரிலிருந்து தொழிற்சாலை அதிகாரி வரை அனைவரும் எனக்கு பல நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தனர்.
இப்போது 20 வருடங்கள் இந்த நிலையத்தில் உத்தியோகத்தராக எந்த வித இடையூறுகளும் இல்லாது பணிபுரிகின்றேன். நிறைவான ஊதியம், உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்பு, நான் பிறந்து வளர்ந்த மண், எனது குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியான சூழலை அனுபவிக்கின்றேன்.
வழிகாட்டி
உயர்தரக் கல்வி மற்றும் ஆங்கில பயிற்சி சான்றிதழைப் பெற்றாலும் ஆரம்பத்தில் ஓரளவுக்கே ஆங்கிலம் பேச முடிந்தது. ஆனால் பயமிருக்கவில்லை. பணியில் இணைந்ததும் எனக்கு ஆங்கில உரையாடல்கள் பற்றி பயிற்சி வழங்கினர். நான் ஆர்வமாகக் கற்றுக்கொண்டேன்.
இப்போது எந்த நாட்டிலிருந்து உல்லாசப்பயணிகள் வந்தாலும் அவர்களை வரவேற்று உபசரிப்பது மாத்திரமின்றி எமது தோட்டம் மற்றும் தொழிற்சாலையை சுற்றிக்காட்டும் வழிகாட்டியாகவும் பணி புரிகின்றேன்.
மும்மொழி அறிவு என்னை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளது என்பேன். மேலும் சரியான வழிகாட்டல்கள் இருந்தால் பெண்கள் தமது பிரதேசத்திலேயே கெளரவமான தொழில்களை தேடிப் பெறலாம். அதற்கு நான் ஒரு உதாரணம். எனது கணவர் காய்கறி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு குழந்தை உள்ளது. பிள்ளையை எனது தாயாரின் பராமரிப்பில் விட்டு பணிக்கு வருகின்றேன். எனது சகோதரர் ஒருவர் ஆசிரியராக இருக்கின்றார். சகோதரிகள் திருமணம் முடித்து சென்று விட்டனர்.
எமது தோட்டத்துக்கு வருகை தரும் உல்லாசப்பயணிகள் மாத்திரமின்றி பல்கலைக்கழக மாணவர்கள் , விரிவுரையாளர்கள்,துறைசார்ந்தோர் என்னிடம் மிகவும் சிநேகபூர்வமாக உரையாடி எனது கதையை கேட்டு என்னை பாராட்டிச் செல்வர். நான் கூடுதலாக என்னைப் பற்றி பெருமை பாட விரும்பவில்லை. அடிப்படை கல்வியும் முயற்சியும் நேர்மையும் இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM