திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை கிறேக்கிலி மற்றும் பொரஸ்கிறிக் ஆகிய தோட்டங்களில் நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர்கள் மர்மமான முறையில் வீடுகளுக்கு நுழைந்து நித்திரையில் ஆழ்ந்திருந்த பெண்களிடம் தங்க சங்கிலிகளை கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான மர்மமான முறையில் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் தாம் கொண்டு வந்த டோச் லைட்டை விட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்யும் அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை மலையக பிரதேசங்களில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஆலயங்கள், வீடுகள் என பல்வேறுப்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்தமை தெரிந்த விடயமாகும்.

ஆனால் இக் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்ட கொள்ளையர்களை கைது செய்ய முடியாமல் உள்ளது.

சமீப காலமாக கொள்ளை நடவடிக்கைகள் தடைபெற்று இருந்த நிலையில் மீண்டும் கொள்ளை சம்பவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நள்ளிரவு பத்தனை கிறேக்கிலி தோட்டத்திலும் மற்றும் பொரஸ்கிறிக் தோட்டத்திலும் கொள்ளை சம்பங்கள் இரண்டு பதிவாகியுள்ளன.

அதேவேளையில் கிறேக்கிலி தோட்டத்தில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஒரு வீட்டில் பெண் ஒருவரின் தங்க சங்கலியை அபகரித்த போது அப்பெண் கூச்சலிட்டதால் தப்பியோடும் நிலையில் சங்கிலியின் பாதி துண்டை அறுத்துச் சென்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் மலையகத்தில் தொடராமல் இருப்பதற்கு  கொள்ளையர்கள் விட்டுச் சென்ற அடையாள பொருளின் கைரேகைகளை பதிந்து கைது நடவடிக்கையில் பொலிஸார் ஈடுப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.