மட்டக்களப்பு கிராமங்களில் ஆண்கள் அதிகமானோர் பொருளாதர கஷ்டம் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றிருப்பதை அறிந்த திருடர்கள் பகல்வேளைகளில் வீட்டில் பொருட்கள் விற்பதைப் போன்று அல்லது வீதியோரம் தமது வாகனங்கள் பழுதடைந்து திருத்துவதை போன்று வீதியிலுள்ள வசதியான பாதுகாப்பற்ற வீடுகளை அவதானித்துக் கொண்டு இரவுநேரங்களில் திட்டமிட்டு தமது திருட்டுத்தனங்களை அரங்கேற்றுகின்றமை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியான அசம்பாவிதமொன்று இன்று அதிகாலை உயிராபத்தின்றி  ஏறாவூரில் அரங்கியேறியுள்ளது.

ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதிக்கும் ஓடாவியார் வீதிக்கும் இடையிலான வீதியிலுள்ள வீடொன்றில் (பொலிஸ் உத்தியோகத்தரான  ஐி வஹாப்  வீட்டுக்கு அண்மையில்) இன்று அதிகாலை 2.30 மணியளவில் கூரை ஓடுகள் அகற்றப்பட்டு  வீட்டினுள் உட்பிரவேசித்து  தங்க ஆபரணம், பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

நீளக்காற்சட்டை அணிந்து வந்த இருவரே இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும். வீட்டின் பின்புறமாகவுள்ள பாலத்தினூடாக வந்து மதில் மேல் ஏறி ஓடுகள் கழற்றப்பட்டு உள்ளிறங்கியிருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

வீட்டு உரிமையாளரான தாரீக் என்பவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில் அவரது மனைவியும் மகளுமே வீட்டில் இருந்துள்ளனர். பேர்ஸில் இருந்த 40 ஆயிரம் ரூபா பணமும். தங்கச் சங்கிலி இரண்டும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

கத்தியை காட்டி மிரட்டித்தான் கழுத்திலிருந்த சங்கிலியை அறுத்தெடுத்ததாக ஏறாவூர் பொலிசாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த குடும்பப்பெண் சத்தமிட்டு கதறியழுதபோது கத்தியால் அவரது கைகயை வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். காயமடைந்த தாரீக் ரேனுகா என்பவர் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளார்.

தமது மகளின் கழுத்திலிருந்த சங்கிலி இழுத்து பறிக்கப்பட்டதால் கழுத்தில் காயங்களும் விரலொன்றில் கத்தி வெட்டிய காயமும் உள்ளதாக தகப்பனாரின் வாக்குமூலத்திலிருந்து அறியமுடிகிறதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.