ரி.விரூஷன்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2011.11.25 அன்று குற்றச்சாட்டு சம்பமொன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சிறிகந்தராசா சுமணனன் என்பவரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பில், யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட சித்திரவதை வழக்கில் ஆறு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கும் பத்தாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த வழக்கின் இறுதி தொகுப்புரைக்காக இன்றைய தினம் பிற்பகல் யாழ்.மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ் தீர்ப்பை வழங்கினார். 

இதன்படி வழக்கின் தீர்ப்பானது இன்று மாலை 4.35 மணியளவில் வழங்கப்பட்டது. இவ் தீர்ப்பில் குற்றவாளியான ஆறு பொலிஸ் அதிகாரிகளுக்கும் பத்தாண்டு கடுழிய சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், கட்டத்தவறின் ஒரு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், ஒவ்வொரு எதிரியும் தலா 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும், கட்டத்தவறின் ஒரு ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.