(எம்.ஆர்.எம்.வசீம்)
மக்களின் வாழ்வாதார செலவை குறைத்து நிவாரணம் வழங்குவதாகவும் வட் வரியை குறைப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. அரச வருமானத்துக்கான வழிவகைகள் இல்லாமையே இதற்கு காரணமாகும் என புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் வரி அழுத்தங்களில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவும் வருமான வரி எல்லையை அதிகரிப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி வழங்கி இருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்வதாக இருந்தால், எமக்கு கடன் வழங்கிய 18 நிறுவனங்கள் மற்றும் 3 நாடுகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டப்பட்டாலே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்ள முடியும்.
ஒரு இலட்சம் வருமானம் பெறுபவர்களிடம் வருமானவரி அறவிடும் எல்லையை இரண்டு இலட்சமாக மாற்றுவதாக இவர்கள் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கடந்த மாதம் இலங்கைக்கு வந்திருந்தபோது, இது தொடர்பில் கலந்துரையாட அரசாங்கம் சார்ப்பாக சிலர் சென்றார்கள்.
அதில் நிதி அமைச்சின் அதிகாரிகளோ மத்திய வங்கி அதிகாரிகளோ கலந்துகொண்டிருக்கவில்லை. இவர்களின் இந்த கோரிக்கைக்கு நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்தார்கள். ஆனால் இதனால் இழக்கப்படும் வருமானத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இருக்கவில்லை.
அதேபோன்று வட்வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் இவர்கள் நாணய நிதியத்துடன் கலந்துரையாடினார்கள். அதற்கும் நாணய நிதிய பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஆனால் வட் வரியை குறைப்பதால் அரசாங்கத்துக்கு இல்லாமல்போகும் வருமானத்தை எந்த வழியில் பெற்றுக்கொள்வது என்ற கேள்வி்க்கு இவர்களிடம் பதில் இருக்கவில்லை.
நாணய நிதியத்துடன் கலந்துரையாடலுக்கு சென்றவர்கள் எந்த தயார் படுத்தலும் இல்லாமலே சென்றிருந்தார்கள். அநுரகுமாரவின் கட்சியில் இருக்கும் புத்திஜீவிகள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இதனை வெற்றிகரமாக பேசி முடிப்பார்கள் என்றே நினைத்தார்கள்.
இறுதியில் நாணய நிதியத்துடன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எட்டிய இணக்கப்பாட்டை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அநுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு வழங்கிய முதலாவது வாக்குறுதி தோல்வியடைந்துள்ளது.
அதேபோன்று அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 55ஆயிரம் ரூபா வரை அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். அதனை வெறும் வாக்குறுதியாக தெரிவிக்கவில்லை. அரச வருமானம் ஏனைய செலவுகளை திட்டமிட்டே தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகரிப்பதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த வருடம் வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கவனம் செலுத்துவதாகவே தற்போது ஜனாதிபதி தெரிவிக்கிறார். இந்நிலையில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அரச ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்க இருந்த சம்பள அதிகரிப்பை இழந்த நிலையிலேயே வாக்களிக்கப்போகிறார்கள்.
எனவே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். அந்த வேலைத்திட்டத்தை மாற்றியமைத்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகிறோம்.
அது தற்போது உண்மையாகியுள்ளது. அதனால்தான் அநுரகுமார திஸாநாயக்க, பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மாற்றியமைப்பதாக தெரிவித்தபோதும் இதுவரை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வழியிலேயே செல்கிறார்.
விவசாயிகளுக்கான உர நிவாரண தொகை மற்றும் மீனவர்களுக்கான நிவாரணம் ரணில் விக்ரமசிங்க வழங்குவதாக தெரிவித்த விடயமாகும். அதுவும் விவசாயிகளுக்கு நிவாரண அடிப்படையில் உரம் வழங்குவதாகவே ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் பணமாக வழங்கி இருக்கிறது. இதன் பெறுபேற்றை எதிர்வரும் 4 மாதங்களுக்கு பின்னரே பார்த்துக்கொள்ள முடியுமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM