(எம்.வை.எம்.சியாம்)
இணையவழி பணப்பரிமாற்றங்களின்போது ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்புகொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிரப்படும் போலி இணையத்தள இணைப்புக்களை அணுகுவதைத் தவிர்த்துக்கொள்ளும் அதேவேளை வங்கிக்கணக்குகளின் பாதுகாப்பு நிமித்தம் வழங்கப்படும் கடவு எண்ணை மூன்றாம் தரப்பினருடன் பகிர்வதை தவிர்த்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகின்றது.
அதிகரித்துள்ள சம்பவங்கள்
ஏனென்றால் நாட்டின் பல பாகங்களிலும் இந்த மாதத்துக்குள் மாத்திரம் இணையவழி நிதி மோசடி தொடர்பில் அதிக எண்ணிக்கையான வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி கண்டி மற்றும் எத்துல்கோட்டே பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்குமிடங்களைப் பெற்றிருந்த 31 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கண்டி - பல்லேகல - நத்தரன்பொத்த பகுதியில் 126 சீன பிரஜைகளும் 02 வியட்நாம் பிரஜைகளும் தாய்லாந்து பிரஜையொருவரும் கடந்த 12ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
2 நாட்களில் மாத்திரம் இந்த பகுதிகளில் கைது செய்யப்பட்ட 161 வெளிநாட்டவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் 6ஆம் திகதி ஹங்வெல்லவில் இரு வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனிடையே நாவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில் 19 சீனப்பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும், பாணந்துறையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 20 சீனப்பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இங்கு மாத்திரமல்லாமல் இலங்கையில் இருந்துகொண்டு வெளிநாடுகளில் உள்ளவர்களிடமும் இணையவழியில் நிதி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தமை விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
உங்களுக்கு தெரியுமா?
சமகால உலகில் சிறியதொரு தகவல் என்பது கூட பாரிய சக்தியாகவே பார்க்கப்படுகிறது. 1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா நிறுவனம் நிலவுக்கு விண்கலத்தை அனுப்புவதற்கு பயன்படுத்திய கணினியை விட தற்போது மக்களின் கைகளிலுள்ள ஸ்மார்ட் தொலைபேசி கோடி மடங்கு சக்தி வாய்ந்தது.
அத்தகையதொரு அதிநவீன உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு காலகட்டத்தில் உலகப்போர்கள் ஆயுதங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. இன்னுமொரு காலப்பகுதியில் இரசாயணத்தை பயன்படுத்தி தாக்குதல் இடம்பெற்றது.
தற்காலத்தில் இவை சைபர் வழித்தாக்குதல்களாக மாற்றமடைந்து கொண்டு வருகின்றன. அதாவது ஒரு தரவு என்பது அதனைப் பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு அது வெறும் தகவல் மாத்திரம் அல்ல. அதுவொரு பலமான ஆயுதமாகவே உள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, “நிகழ்நிலை வங்கி பணப் பரிமாற்றத்தின் போது வங்கிக்கணக்குகளின் பாதுகாப்புக்காக வழங்கப்படும் கடவு எண்ணை மூன்றாம் தரப்பினரிடம் பகிர்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்” என்று கோரியுள்ளார்.
இணையவழியை பயன்படுத்தி நிகழ்நிலையில் வங்கிப் பண பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்போது வாடிக்கையாளரை அடையாளம் காணப்பதற்காகவும் ஒரு முறை மாத்திரமே வங்கியிலிருந்து கடவு எண் (ஒ.டி.பி. இலக்கம்) வழங்கப்படுகின்றது.
“தற்போது பிரபலமான நிறுவனங்களை மையப்படுத்தி வங்கி கணக்குகளில் பண மோசடிகள் இடம்பெறுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலி இணையத்தளங்களை அணுகி பரிசில்களுக்காக பொதுமக்கள் வங்கி கடவு எண்ணை பதிவிட்டு மோசடிகளுக்கு ஆளாகியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது” என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிடுகின்றார்.
இணையவழியில் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றங்களின் போது ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
மேலும் சமூக வலைத்தளம் வாயிலாக பகிரப்படும் போலி இணையத்தள இணைப்புகளை அணுகுவதை தவிர்க்குமாறு அனைத்து பொதுமக்களிடத்திலும் பொலிஸார் மற்றும் தகவல்தொடர்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடியாளர்கள் நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு தங்குமிட வசதிகளை பெற்றுக்கொடுப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
வாடகைக்கு வீடுகளையும் குத்தகை அடிப்படையில் ஹோட்டல்களையும் வழங்குபவர்கள் இடைக்கிடையே அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.
இக்காலத்து திருடனுக்கு எமது வீட்டு சாவி தேவையில்லை. எம்மைப் பற்றிய சின்னதொரு தகவல் போதுமானதாகும். உதாரணமாக, எவராவது எமது தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து வங்கியிலிருந்து கதைப்பதாகவும் கடன் பெற்றுத் தருவதாகவும் அல்லது உங்களுக்கு பரிசில்கள் வழங்குவதாகவும் குறிப்பிட்டால் அதனை உறுதி செய்யாமல் எமது கணக்கு இலக்கத்திலிருந்து தேசிய அடையாள அட்டை இலக்கம், வரவு அட்டை இலக்கம், அதன் கடவு இலக்கம் என்று அனைத்து தகவல்களையும் வழங்கிவிடுகிறோம்.
அதேபோல எமது தொலைபேசியில் எந்த புதிய செயலியை பதிவிறக்கம் செய்யும் போதும் இறுதியில் கேட்கப்படும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று வினப்படும் குறியீட்டை நிபந்தனைகளை வாசிக்காமல் ‘ஆம்’ என்பதை கொடுக்கிறோம்.
அதனால் தொழில்நுட்ப புரட்சியின் நவீனத்தைக் கொண்டிருக்கின்ற தொலைபேசி ‘ஸ்மாட்டாக’ மாறுகிறது. சாதாரண பொதுமக்கள் முட்டாள்களாக மாறுகின்றனர். இவற்றில் உள்ள பாரதூரத்தை நாம் அறிவதில்லை. ஆனால், இணையவழி திருடர்களுக்கு அது மூன்றாவது கண்ணாகவே உள்ளது.
இணைவழி பயணர்களுக்குத் தெரியாமலே அவர்களின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள். பிக்பொஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மாதிரி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. எனவே, மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகிறது.
இதேநேரம், இணைவழி மோசடிகள் சம்பந்தமான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களில் அதிகமானவர்கள் சீனர்களாக இருப்பதன் காரணத்தினால் சீனத் தூதரகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இலங்கையில் சீனப்பிரஜைகள் மோசடிகளில் ஈடுபட்டுள்ளமையானது, சீன நாட்டின் அபிமானத்தை மதிப்பிழக்கச் செய்வதாக கவலை வெளியிட்டுள்ள தூதரகம், இலங்கையுடன் இணையவழி மோசடிகளுக்கு எதிராக சட்ட அமுலாக்கத்துக்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM