ஆலன் - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

18 Oct, 2024 | 05:09 PM
image

தயாரிப்பு : 3 எஸ் பிக்சர்ஸ்

நடிகர்கள் : வெற்றி, மதுரா, அனு சித்தாரா, ஹரிஷ் பெராடி, 'அருவி' மதன் குமார், விவேக் பிரசன்னா, கருணாகரன் மற்றும் பலர்.

இயக்கம் : ஆர். சிவா

மதிப்பீடு :  2.5 / 5

சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஆர். சிவா எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீவிர ஆர்வம் கொண்டவர். அதனால் எழுத்தாளர் ஒருவரின் வாழ்வியலை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என விரும்பி, 'ஆலன்' என்னும் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். 

எழுத்தையும், எழுத்தாளரையும் கொண்டாடும் வகையில் தயாராகி இருக்கும் இந்த 'ஆலன்' எனும் திரைப்படம் எல்லா தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

மேற்குத் தொடர்ச்சி மலை கிராமம் ஒன்றில் நான்கு சகோதரர்கள் கூட்டு குடும்பமாக வசிக்கிறார்கள். 

இவர்களில் மூத்த சகோதரரின் மகன் தியாகு. இவருக்கு புத்தகங்களை வாசிப்பதும், எழுதுவதும் பிடிக்கும். இவரது தாத்தாவின் ஊக்கத்தால் எழுதத் தொடங்குகிறார். 

ஆனால் இவரது சித்தப்பாக்களின் சூழ்ச்சி காரணமாக விபத்தில் தனது பெற்றோரை இழக்கிறார். தன் மீது பிரியம் வைத்திருக்கும் தாமரையும் இறந்து விட்டதாக கருதுகிறார். அந்த விபத்து அவருக்கு கடுமையான மன அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

இதனால் இலக்கில்லாமல் பயணித்து காசியை வந்தடைகிறார். காசியில் வசிக்கும் சாமியார் ஒருவர் ‌வளரிளம் பருவத்தில் இருக்கும் தியாகுவிற்கு ஆதரவு கரம் நீட்டுகிறார். 

பத்து ஆண்டுகளாக இந்த லௌகீக வாழ்க்கையில் இருந்து விலகி பற்றற்ற நிலையில் வாழ்வதற்கான பயிற்சியிலும் ஈடுபடுகிறார். 

ஆனால் அவரால் முழுமையான துறவியாக முடியவில்லை. இதனை உணர்ந்த சாமியார் 'உமக்கு பிடித்தது எழுத்து. அதனால் இந்த உலகத்தை வலம் வந்து கிடைக்கும் அனுபவத்தை எழுத்தால் எழுது. அதன் பிறகு தான் உன் மனம் ஒரு முகப்படும். 

அதன் பிறகு என்னிடம் வா' என அவரை அனுப்பி விடுகிறார். அவர் அங்கிருந்து புறப்படும் போது ஒரு புகையிரத பயணத்தில் ஜேர்மனியிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா பயணியாக வருகை தந்திருக்கும் ஜனனி தாமஸ் எனும் இளம் பெண்ணைச் சந்திக்கிறார். 

அவர்களின் சந்திப்பு பேச்சு காதலாக மாறுகிறது. 'கதை ஒன்றை எழுது. நான் ஐந்து தினங்களுக்குள் என்னுடைய கலாநிதி பட்டத்திற்கான பயிற்சியினை முடித்துவிட்டு வருகிறேன்' என்று செல்கிறார். 

ஆனால் அவள் காமுகர்களின் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உயிரிழக்கிறார். இதனால் மீண்டும் வாழ்க்கையில் வெறுமையை சந்திக்கிறார் தியாகு. அதன் பிறகு ஜனனி தாமஸ் என்ற பெயரில் எழுதத் தொடங்குகிறார். 

அவர் எழுதிய புத்தகம் பிரபலமாகிறது. அவர் எழுதிய புத்தகத்தை தேடி சென்னையில் உள்ள நூலகத்திற்கு வருகை தருகிறார். அங்கு எதிர்பாராத விதமாக தாமரையை சந்திக்கிறார். 

அதன் பிறகு அவர்களுக்குள் மீண்டும் காதல் பூத்ததா? இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதை கவிதை நயத்துடன் விவரிக்கும் கதைதான் ஆலன்.

ஆலன் என்றால் ஆலகால விடத்தை அருந்திய சிவன் என பொருள். எழுத்தை உயிர் மூச்சாக கருதும் ஒரு எழுத்தாளர்  காசிக்கு சென்று சன்னியாசம் மேற்கொண்டாலும் அவர் எழுத்தின் மீது கொண்ட பற்று காரணமாக அவரால் துறவியாக முடியாது. 

ஏனெனில் எழுத்து. எழுதுவதும் ஆன்மீகத்தின் அடையாளம் என்பதை இயக்குநர் அவருக்குத் தெரிந்த திரை மொழி மற்றும் காட்சி மொழியில் விளக்கி இருக்கிறார். இது சுவாரசியமாக இருந்ததா? என்றால் இல்லை என பளிச்சென்று பதில் சொல்லலாம்.

திரைக்கதையை சுவராசியமாக சொல்கிறோம் என நான் லீனியர் பாணியில் சொல்ல முயற்சித்திருப்பது பார்வையாளர்களை குழப்புகிறது.  

காட்சிப்படுத்த வேண்டிய பல விடயங்களை கதாபாத்திரங்கள் உரையாடல் மூலம் கடந்து செல்வதும் இயக்குநரின் அனுபவ குறைவை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.‌

இருந்தாலும் தியாகு கதாபாத்திரத்தை இயக்குநர் முடிந்த வரை நிறைவாக எழுதியிருக்கிறார். தியாகுவின் வாழ்க்கையில் குறுக்கிடும் ஜனனி தாமஸ் மற்றும் தாமரை ஆகிய இரண்டு பெண்களின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான கலைஞர்களை,  நடிகைகளை தெரிவு செய்து நடிக்க வைத்திருப்பதற்கு பாராட்டு தெரிவிக்கலாம்.  

மதுரா , அனு சித்தாரா எனும் இரண்டு நடிகைகளும் திரையில் அழகாகவும், இளமையாகவும், கவர்ச்சியாகவும் தோன்றி ரசிகர்களை திணறடிக்கிறார்கள். கிறங்கடிக்கிறார்கள்.

நாயகன் காவி உடை அணிந்திருந்தாலும் சண்டைக் காட்சியை வைத்திருப்பது, திணித்திருப்பது வணிக சமரசம்  என்பதும் அப்பட்டமாக தெரிகிறது.

தியாகுவாக நடித்திருக்கும் நடிகர் வெற்றி , அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் தன்னாலான நடிப்பை வழங்கி இருக்கிறார். 

'ஓம் நமச்சிவாய..' எனும் பாடலில் அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா தன் இசைத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவனிக்க வைக்கிறார்.

காசி நகரத்தின் கழுகு பார்வை காட்சியை கதையோட்டத்துடன் இணைத்து இரவு ,பகல் ,அதிகாலை, என காசியின் அழகை கண்களுக்கு விருந்தளிக்கிறார் ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின்.  படத்தில் சில இடங்களில் வசனங்களும் நச்.

எழுத்தையும், எழுத்தாளரையும் கொண்டாட வேண்டும் என நினைத்த படக்குழு அதற்கு ஏற்ற வகையில் திரைக்கதையை உருவாக்காதது தான் பெரும் சோகம்.

ஆலன் - ரசிகர்களுக்கு காலன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right