தனது உடல் பருமனைக் காரணம் காட்டி தன்னைக் கைவிட்ட முன்னாள் காதலருக்கு பதிலடி கொடுக்க தனது சொந்த உடல் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட சவர்க்காரத்தை அந்தக் காதலருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெண்ணொருவர் அனுப்பி வைத்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

ஹெனான் மாகாணத்திலுள்ள ஸெங்ஸொயு எனும் இடத்தைச் சேர்ந்த ஸியவோ என்ற மேற்படி பெண், தனது காதலர் கைவிட்டு சென்றதையடுத்து உடல் பருமனைக் குறைப்பதற்கான அறுவைச் சிகிச்சையொன்றுக்கு உட்பட்டார்.

இதன்போது அகற்றப்பட்ட தனது உடல் கொழுப்பைப் பயன்படுத்தி சவர்க்காரமொன்றைத் தயாரித்து தன்னை அவமானப்படுத்திய காதலரான யாங் ஸியவோலெயிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அவர் இணையத்தளம் மூலம் தனது காதலருக்கு அனுப்பி வைத்த செய்தியில், "யாங் ஸியவோலெயி, கடந்த வசந்த காலம் உனக்கு ஞாபகம் உள்ளதா? இந்த வருடம் என்னால் உன்னுடன் இணைந்து அதில் பங்கேற்க முடியாதுள்ளது. அதனால் நான் உனக்கும் உனது தாயாருக்கும் எனது கொழுப்பால் தயாரிக்கப்பட்ட சவர்க்காரமொன்றை தருகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.