(நெவில் அன்தனி)
ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (15) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் தனது சுழல்பந்துவீச்சாளர்களைக் கொண்டு மேற்கிந்தியத் தீவுகளை திணறச் செய்த இலங்கை 73 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 1 - 1 என இலங்கை சமப்படுத்தியது.
இடதுகை சுழல் பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே தனது ரி20 அறிமுகப் போட்டியில் முன்வரிசை வீரர்கள் மூவரின் விக்கெட்களைக் கைப்பற்றி மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆட்டங்காணச் செய்தார்.
அவருக்கு பக்கபலமாக செயற்பட்ட மற்றைய சுழல்பந்துவீச்சாளர்களான அணித் தலைவர் சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன ஆகியோர் 6 விக்கெட்களைப் பகிர்ந்தனர். வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண எஞ்சிய விக்கெட்டைக் கைப்பற்ற மேற்கிந்தியத் தீவுகள் இரட்டை இலக்க மொத்த எண்ணிக்கைக்கு சுருண்டது.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 163 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 16.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
முதல் போட்டியில் பவர் ப்ளேயில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த மேற்கிந்தியத் தீவுகள் இன்றைய போட்டியில் பவர் ப்ளேயில் 3 விக்கெட்களை இழந்து 21 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
அணித் தலைவர் ரோவ்மன் பவல் (20), அல்ஸாரி ஜோசப் 16 ஆ. இ.) ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் (14) ஆகிய மூவரே மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சரித் அசலன்க 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஸ் தீக்ஷன 3.1 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கையின் ஆரம்பம் ஆக்ரோஷமாக இருந்தபோதிலும் 13 ஓவர்களுக்கு பின்னர் ஓட்ட வேகம் சிறிது மந்தமடைந்தது.
பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 10 ஓவர்களில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் பெரேராவும் 2ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் குசல் பெரேரா 24 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த பெத்தும் நிஸ்ஸன்க 54 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
முதலாவது போட்டியில் அரைச் சதங்கள் பெற்ற கமிந்து மெண்டிஸ் 19 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் சரித் அசலன்க 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் தலா 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் ரொமாரியோ ஷெப்பர்ட் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த இப் போட்டியில் அரைச் சதம் குவித்த பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டநாயகனாகத் தெரிவானார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM