(நா.தனுஜா)
தேர்தல் பிரசார செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் அவர்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது ஒரு வாக்காளருக்காக செலவிடக்கூடிய அதியுச்ச தொகையை நிர்ணயிப்பதற்கான ஆலோசனை கலந்துரையாடல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் நடாத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் அதியுத்த தொகை குறித்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்தனர்.
பொதுத்தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுத்தாக்கல் என்பன கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் பிரசார செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனுத்தாக்கல் முடிவுக்குவந்து 5 நாட்களுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவானது அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஒவ்வொரு வாக்காளருக்கும் செலவிடவேண்டிய அதியுச்ச தொகை எவ்வளவு என்று நிர்ணயித்து, அதனை வர்த்தமானியில் வெளியிடவேண்டும்.
அதேபோன்று அத்தொகையை நிர்ணயிப்பதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களிடமிருந்து இவ்விடயம் தொடர்பில் ஆணைக்குழு ஆலோசனை பெற்றுக்கொள்ளவேண்டும்.
அதற்கமைய ஒவ்வொரு மாவட்ட வாரியாக தேர்தல் பிரசார செலவினம் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பரிந்துரைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே திரட்டியிருந்தது.
அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் ஒவ்வொரு வாக்களாளருக்கும் செலவிடப்படவேண்டிய அதியுச்ச தொகை குறித்த பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவானது நேற்று செவ்வாய்கிழமை எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. இச்சந்திப்பின்போது பிரசார செலவினங்கள் தொடர்பில் அக்கட்சிகளின் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
இவ்வாறு நாட்டின் சகல தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு, அந்தந்த மாவட்டங்களின் சனத்தொகை, பூகோள அமைவிடம் மற்றும் செலவினங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கும் செயன்முறை ஊடாக ஒரு வாக்காளருக்கு செலவிடப்படவேண்டிய அதியுச்ச தொகை கணிப்பிடப்படும். இத்தொகையானது மேற்கூறப்பட்ட காரணிகளின் அடிப்படையில் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும்.
அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் பிரசார நடவடிக்கைகளின்போது ஒரு வாக்காளருக்காக செலவிடவேண்டிய அதியுச்ச தொகையின் சராசரியானது பெரும்பாலும் 109 - 110 ரூபா என்ற மட்டத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தொகை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வேறுபடும் என்பதால், கொழும்பு உள்ளிட்ட சனத்தொகை மற்றும் செலவினங்கள் கூடிய தேர்தல் மாவட்டங்களுக்கான அதியுச்ச தொகை அண்ணளவாக 110 - 120 ரூபா வரையும், வன்னி போன்ற சனத்தொகை மற்றும் செலவினங்கள் குறைந்த தேர்தல் மாவட்டங்களுக்கான அதியுச்ச தொகை அண்ணளவாக 80 - 100 ரூபா வரையும் நிர்ணயிக்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM