செப்டெம்பர் மாதத்திற்கான அதிசிறந்த ஐசிசி வீரர் விருதை கமிந்து மெண்டிஸ் வென்றெடுத்தார்

14 Oct, 2024 | 03:53 PM
image

(நெவில் அன்தனி)

செப்டெம்பர் மாதத்திற்கான அதிசிறந்த ஐசிசி வீரர் விருதை டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த இலங்கையின் கமிந்து மெண்டிஸ் வென்றெடுத்துள்ளார்.

ஐசிசியின் அதிசிறந்த மாதாந்த வீரருக்கான விருதை கமிந்து மெண்டிஸ் வென்றெடுத்தது இது இரண்டாவது தடவையாகும். கடந்த மார்ச் மாதம் அவர் தனது முதலாவது ஐசிசி விருதை வென்றிருந்தார்.

அத்துடன் அடுத்தடுத்த   மாதங்களில் இலங்கையர்   மூவர் இந்த விருதை வென்றிருப்பது சிறப்பம்சமாகும்.

ஆகஸ்ட் மாதத்திற்கான அதிசிறந்த ஐசிசி வீரர் விருதை துனித் வெல்லாலகேயும் அதிசிறந்த ஐசிசி வீராங்கனைக்கான விருதை ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் வென்றிருந்தனர்.

செப்டெம்பர் மாதத்திற்கான ஐசிசி விருதுக்கு அவுஸ்திரேலியாவின் ட்ரவிஸ் ஹெட், இலங்கையின் ப்ரபாத் ஜயசூரிய ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கமிந்து மெண்டிஸ் கடந்த மாதம் 4 போட்டிகளில் 90.20 என்ற சராசரியுடன் 451 ஓட்டங்களை மொத்தமாக பெற்றிருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அரைச் சதம் குவித்து இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கமிந்து மெண்டிஸ், அதன் பின்னர் நியூஸிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் 114 ஓட்டங்களையும் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களை யும்   குவித்தார். இதன் மூலம் டெஸ்ட் அறிமுகம் பெற்றதுமுதல் தான் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளிலும் 50 அல்லது 50க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனைக்கு  கமிந்து மெண்டிஸ்  உரித்தானார். கடந்த 75 வருங்களில் மிகவேகமாக 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார். அத்துடன் கிரிக்கட் மேதை சேர் டொன் ப்றட்மனின் 13 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்கள் என்ற சாதனையையும் கமிந்து மெண்டிஸ் சமப்படுத்தினார்.

இதேவேளை மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீராங்கனை விருதை இங்கிலாந்தின் டெமி போமன்ட் வென்றெடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right