மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட முதலாவது அணியாக அவுஸ்திரேலியா தகுதி; முக்கிய போட்டியில் இந்தியா 9 ஓட்டங்களால் தோல்வி

Published By: Vishnu

13 Oct, 2024 | 11:45 PM
image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு நடைபெற்ற  ஏ குழு போட்டியில் இந்தியாவை 9 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியா முதலாவது அணியாக ஒன்பதாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

ஏ குழுவில் தான் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா 9ஆவது நேரடித் தடவையாக மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு பாகிஸ்தானின் கைகளில் தங்கியிருக்கிறது.

பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் நாளை நடைபெறவுள்ள ஏ குழுவுக்கான கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் தலைகீழ் வெற்றியை ஈட்டினால் இந்தியா அரை இறுதியில் விளையாடத் தகுதிபெறும். பாகிஸ்தான் தோல்வி அடைந்தால் நியூஸிலாந்து அரை இறுதிக்கு முன்னேறும்.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதும் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைக் குவித்தது.

வழமையான அணித் தலைவி அலிசா ஹீலி உபாதை காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக தஹிலா மெக்ரா பதில் தலைவியாக செயற்பட்டார்.

அலிசா ஹீலிக்குப் பதிலாக ஆரம்ப வீராங்கனையாக விளையாடிய க்றேஸ் ஹெரிஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடினார்.

மொத்த எண்ணிக்கை 17 ஓட்டங்களாக இருந்தபோது பெத் மூனி (2), ஜோர்ஜியா வெயாஹாம் (0) ஆகிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.

க்றேஸ் ஹெரிஸ், தஹிலா மெக்ரா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

தஹிலா மெக்ரா 32 ஓட்டங்களையும் க்றேஸ் ஹெரிஸ் 40 ஓட்டங்களைப் பெற்று சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து ஏஷ்லி கார்ட்னர் 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எலிஸ் பெரி (32), ஃபோப் லிச்பீல்ட் (15 ஆ.இ.) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அனாபெல் சதஃபீல்ட் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ரேனுகா சிங் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

152 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முன்வரிசை விராங்கனைகள் ஷபாலி வர்மா (20), ஸ்ம்ரித்தி மந்தனா (6), ஜெமிமா ரொட்றிக்ஸ் (16) ஆகிய மூவரும் ஆட்டம் இழக்க இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 6.5 ஓவர்களில் 47 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர், தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

ஆனால் தீப்தி ஷர்மா 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததுடன் அவரைத் தொடர்ந்து ரிச்சா கோஷ் ஒரு ஓட்டத்துடன் வெளியேறியது இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

18 ஓவர்கள் நிறைவில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் கடைசி 2 ஓவர்களில் அதன் வெற்றிக்கு மேலும் 28 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

19ஆவது ஓவரில் பூஜா வஸ்த்ராக்கரும் ஹாமன்ப்ரீத் கோரும் 14 ஓட்டங்களைப் பெற்றனர்.

கடைசி ஓவரில் மேலும் 14 ஓட்டங்கள் இந்தியாவின் வெற்றிக்கு தேவைப்பட்டது.

ஆனால், அனாபெல் சதர்லண்ட் வீசிய கடைசி ஓவரில் இந்தியாவின் 4 விக்கெட்கள் சரிய இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் 6 பவுண்டறிகள் உட்பட 54 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அனாபெல் சதர்லண்ட் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சொஃபி மொலினெக்ஸ் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: சொபி மொலினொக்ஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11