பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரும் இந்தியாவை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண்ணும் காதல் வயப்பட்ட நிலையில் தனது காதலனை பாகிஸ்தானுக்கு தேடிச்சென்று அவரை கரம் பற்றியுள்ளார்.

இஜஸ்கான் என்ற குறித்த பாகிஸ்தான் இளைஞனும் மெகருன்னிசா என்ற இந்திய பெண்ணும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளனர். முதலில் நண்பர்களாக பழகியுள்ள இவர்கள் பின்னர் காதல் வயப்பட்டுள்ளனர். இஜஸ்கானை மறக்க முடியாத மெகருன்னிசா அவரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்துள்ளார். இஜஸ்கானால் இந்தியாவுக்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் மெகருன்னிசா 2 மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு சுவாத் மாவட்டத்தில் கலாம் பள்ளத்தாக்கில் உள்ள இஜஸ்கானை கண்டுப்பிடித்துள்ளார். 

சமீபத்தில் இஜஸ்கானும், மெகருன்னிசாவும் முறைப் படி திருமணம் செய்து கொண்டனர். 

இந் நிலையில் மெகருன்னிசாவின் 2 மாத சுற்றுலா விசா இன்றுடன் முடிவடைகின்றது. ஆனால் இந்தியா திரும்பி செல்ல பயமாக இருப்பதாக தெரிவித்துள்ள மெகருன்னிசா, இஜஸ்கானுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதால் மனிதாபிமான அடிப்படையில் தன் சுற்றுலா விசாவை நீடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். 

ஆனால் நேற்று வரை மெகருன்னிசா வேண்டுகோளை பாகிஸ்தான் ஏற்கவில்லை. அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.