ப்றூக் முச்சதம், ரூட் இரட்டைச் சதம்; பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து சாதனைகளுடன் ஆதிக்கம்

Published By: Vishnu

10 Oct, 2024 | 10:41 PM
image

(நெவில் அன்தனி)

முல்தான் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹெரி ப்றூக், ஜோ ரூட் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் சாதனைகள் பொழிந்த இங்கிலாந்து ஆட்டத்தின் பிடியை தனதாக்கிக்கொண்டு பாகிஸ்தானை தோல்வியின் விளிம்பிற்கு தள்ளிவிட்டுள்ளது.

இரண்டு அணிகளும்  முதல் இன்னிங்ஸில்   கணிசமான மொத்த எண்ணிக்கைகளைப் பெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் நான்காம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று தோல்வியின் விளிம்பில் இருக்கிறது.

இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து மீள்வதற்கு 4 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க மேலும் 115 ஓட்டங்களை பாகிஸ்தான் பெறவேண்டியுள்ளது.

கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில் முதல் இரண்டு தினங்கள் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில், அப்துல்லா ஷபிக் (102), அணித் தலைவர் ஷான் மசூத் (151), சல்மான் அகா (104) ஆகியோர் பெற்ற சதங்களின் உதவியுடன் 556 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து போட்டியின் நான்காம் நாளன்று ஹெரி ப்றூக் குவித்த முச்சதம், ஜோ ரூட் குவித்த இரட்டைச் சதங்களின் உதவியுடன் சாதனைகள் பொழிந்து ஆட்டத்தின் பிடியை தனதாக்கிக்கொண்டது.

யோர்க்ஷயர் பிராந்திய அணி வீரர்களான அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 454 ஓட்டங்களின் பலனாக இங்கிலாந்து தனது முதலாவது இன்னிங்ஸை 7 விக்கெட்களை இழந்து 823 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் நிறுத்திக்கொண்டது.

ஹெரி ப்றூக் 317 ஓட்டங்களைக் குவித்து தனது அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையைப் பதிவுசெய்தார்.

ஜோ ரூட் 262 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரது தனிப்பட்ட அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையாகும். ஜோ ரூட் குவித்த 6ஆவது இரட்டைச் சதம் இதுவாகும்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதராக அதிகூடிய மொத்த எண்ணிக்கையை இங்கிலாந்து பெற்று வரலாறு படைத்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் பெறப்பட்ட நான்காவது அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

இந்தியாவுக்கு எதிராக 1997இல் இலங்கை 6 விக்கெட்களை இழந்து குவித்த 952 ஓட்டங்களே ஓர் இன்னிங்ஸில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

அடுத்த அதிகூடிய மொத்த எண்ணிக்கைகள் வருமாறு:

1938 தி ஓவல் மைதானம் இங்கிலாந்து 903 - 7 விக். எதிர் அவுஸ்திரேலியா.

1930 கிங்ஸ்டன் மைதானம் இங்கிலாந்து 849  எதிர்   மேற்கிந்தியத் தீவுகள்.

இதேவேளை, இங்கிலாந்து சார்பாக அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை நேற்று நிலைநாட்டிய ஜோ ரூட், 147 டெஸ்ட் போட்டிகளில் 12664 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார். அதிக டெஸ்ட் ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் (15921), ரிக்கி பொன்டிங் (13378), யக் கலிஸ் (13289), ராகுல் ட்ராவிட் (13288) ஆகியோருக்கு அடுத்ததாக ஜோ ரூட் 5ஆவது இடத்தில் உள்ளார்.

இதனிடையே இன்னும் பல சாதனைகளை இங்கிலாந்து நிலைநாட்டியது.

சாதனைகள் - மைல்கற்கள்

1. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 800 ஓட்டங்களுக்கு மேல் குவித்த முதலாவது அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுக்கொண்டது. இதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சொந்தமாக இருந்த 66 வருட சாதனையை இங்கிலாந்து முறியடித்தது. கிங்ஸ்டன் மைதானத்தில் 1958இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்களை இழந்து 790 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

மேலும் இங்கிலாந்து குவித்த மொத்த எண்ணிக்கை பாகிஸ்தானில் டெஸ்ட் இன்னிங்ஸில் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய  எண்ணிக்கையாகும். இலங்கைக்கு எதிராக கராச்சியில் 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் 6 விக்கெட்களை இழந்து 765 ஓட்டங்களைப் பெற்றிருந்ததே இதற்கு முன்னர் பாகிஸ்தான் மண்ணில் இன்னிங்ஸ் ஒனறில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக  இருந்தது.

2. ஜோ ரூட், ஹெரி ப்றூக் ஆகியோரிடையே நான்காவது விக்கெட்டில் பகிரப்பட்ட 454 ஓட்டங்களானது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கான அதிகூடிய இணைப்பாட்டமாகும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 67 வருடங்களுக்கு முன்னர் 1957இல் பீட்டர் மே, கொலின் கௌட்றி ஆகிய இருவரும் பகிர்ந்த 411 ஓட்டங்களே 4ஆவது விக்கெட்டுக்கான இங்கிலாந்தின் முன்னைய அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

3. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜோ ரூட், ஹெரி ப்றூக் ஆகியோரின் இந்த இணைப்பாட்டமானது மஹேல - சங்கக்கார (624 எதிர் தென் ஆபிரிக்கா), சனத் - மஹநாம (576 எதிர் இந்தியா), மார்ட்டின் குறோ - ஜோன்ஸ் (467 எதிர் இலங்கை) ஆகிய ஜோடியினரின் இணைப்பாட்டங்களுக்கு அடுத்ததாக நான்காவது சிறந்த இணைப்பாட்டமாகும்.

எவ்வாறாயினும் விருந்தாளிகள் என்ற வகையில் ஜோ ரூட், ஹெரி ப்றூக் ஜோடியினரின் இந்த இணைப்பாட்டம் அந்நிய மண்ணில் குவிக்கப்பட்ட அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டமாக பதிவானது. இதற்கு முன்னர் தி ஒவல் மைதானத்தில் 1934இல் டொன் ப்றட்மன், பில் பொன்ஸ்போர்ட் ஆகியோர் பகிர்ந்த 451 ஓட்டங்களே விருந்தாளி ஜோடியினரால் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது.

4. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓரே இன்னிங்ஸில் 250 ஓட்டங்களுக்கு மேல் இருவர் (ஜோ ரூட், ஹெரி ப்றூக்) குவித்த 3ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். அவர்களை விட பாகிஸ்தானுக்கு எதிராக 1958இல் கொன்ரட் ஹன்ட் - கார்பீல்ட் சோபர்ஸ் ஜோடியினரும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2006இல் மஹேல ஜயவர்தன - குமார் சங்கக்கார ஜோடியினரும் இந்த அரிய மைல்கல் சாதானையை நிலைநாட்டியிருந்தனர்.

இங்கிலாந்து சார்பாக இரட்டைச் சதங்கள் குவித்த இரண்டாவது ஜோடியினர் ஜோ ரூட், ஹெரி ப்றூக் ஆவர். இந்தியாவுக்கு எதிராக 1985இல் க்ரேம் பௌலரும் மைக் கெட்டிங்கும் இரட்டைச் சதங்கள் குவித்த முதலாவது இங்கிலாந்து ஜோடி ஆவர்.

5. பாகிஸ்தானுக்கு எதராக பாகிஸ்தானில் விளையாடிய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் சதங்கள் குவித்த முதலாவது இங்கிலாந்து வீரர் ஹெரி ப்றூக் ஆவார். பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு டெஸ்ட்களில் தொடர்ச்சியாக சதம் குவித்தவர்கள் வரிசையில் ப்றயன் லாரா, யக் கலிஸ், டேவிட் வோனர், கேன் வில்லியம்ஸன் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் ஹெரி ப்றூக் இடம்பெறுகிறார்.

முதலாவது டெஸ்ட் போட்டி எண்ணிக்கை சுருக்கம்

பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 556 (ஷான் மசூத் 151, சல்மான் அகா 104, அப்துல்லா ஷபிக் 102, சவூத் ஷக்கீல் 82, ஜெக் லீச் 160 - 3 விக்., ப்றைடன் காஸ் 74 - 2 விக்., கஸ் அட்கின்சன் 99 - 2 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: 823 - 7 விக். டிக்ளயார்ட் (ஹெரி ப்றூக் 317, ஜோ ரூட் 262, பென் டக்கட் 84, ஸக் க்ரோவ்லி 78, சய்ம் அயூப் 101 - 2 விக்.), நசீம் ஷா 157 - 2 விக்.)

பாகிஸ்தான் 2ஆவது இன்: 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 152 - 6 விக். (சல்மான் அகா 41 ஆ.இ., சவூத் ஷக்கீல் 29, ஆமிர் ஜமால் 27 ஆ.இ., சய்ம் அயூப் 25, கஸ் அட்கின்சன் 28 - 2 விக்., ப்றைடன் காஸ் 39 - 2 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41