(நெவில் அன்தனி)
மியன்மார், யங்கூன் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (10) பிற்பகல் நடைபெற்ற சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் மியன்மாரிடம் 0 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.
பின்கள வீரர்களான ஜூட் சுபன், சலன சமீர ஆகியோரின் தவறுகளாலும் கோல்காப்பாளர் சுஜான் பெரேராவின் கவனக்குறைவாலும் இலங்கை தோல்வியைத் தழுவியது.
ஒரு மாதத்திற்கு முன்னர் கம்போடியாவுக்கு எதிராக இலங்கையிலும் பின்னர் கம்போடியாவிலும் சிறந்த புரிந்துணர்வு, நுட்பத்திறனுடன் விளையாடிய இலங்கை வீரர்களின் திறமை யங்கூன் போட்டியில் வெளிப்படவில்லை.
போட்டியின் 16ஆவது நிமிடத்தில் மியன்மார் வீரர் தான் பெய்ங் பந்தை (Than Paing - No.9) வலப்புறமாக நகர்த்திச் சென்றபோது பின்கள வீரர் ஜூட் சுபனினால் அவரை தடுக்க முடியாமல் போனது.
அந்த சந்தர்ப்பத்தில் கோல் காப்பாளர் சுஜான் பெரேரா முன்னோக்கி நகர்ந்து பந்தை காலால் தடுக்க முற்பட்டார்.
அதேநேரம், தான் பெய்ங் பந்தை எல்வின் மோ ஆங்கிற்கு (Lwin Moe Aung - No. 7) நகர்த்தினார். உடனடியாக செயற்பட்ட எல்வின் மோ ஆங் 18 யார் கட்டத்துக்குள் இருந்தவாறு பந்தை தரையோடு கோலினுள் புகுத்தி மியன்மாரை முன்னிலையில் இட்டார்.
இந்தப் போட்டியில் மியன்மார் 70 வீதம் ஆதிக்கம் செலுத்தியதெனக் கூறலாம்.
இலங்கை வீரர்களிடம் வேகம் காணப்படவில்லை. பின்கள வீரர்கள் மந்த கதியில் விளையாடியதுடன் மத்திய கள வீரர்களால் முன்கள வீரர்களுக்கு பந்து பரிமாற்றங்களை செய்ய முடியவில்லை.
இடைவேளையின் பின்னரும் இதே நிலைதான் காணப்பட்டது.
போட்டியின் 52ஆவது நிமிடத்தில் இலங்கையின் பின்களத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக மற்றொரு கோல் மியன்மாருக்கு கிடைத்தது.
அப்போது மியன்மாரின் மத்திய கள வீரர் ஸாவ் வின் தெய்னை (Zaw Win Thein) விதிகளுக்கு முரணான வகையில் சலன சமீர வீழ்த்தியதால் மியன்மாருக்கு ப்றீ கிக் வழங்கப்பட்டது.
போட்டியின் 53ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் எம்ஜி எம்ஜி எல்வின் (Mg Mg Lwin - No. 11), பெனல்டி எல்லையின் இடப்புறத்திலிருந்து உதைத்த பந்து நேராக கோலினுள் புகுந்தது.
கம்போடியாவுக்கு எதிரான போட்டியில் அற்புதமாக செய்ற்பட்டு, 2 பெனல்டிகளைத் தடுத்து நிறுத்திய சுஜான் பெரேரா, மியன்மாருக்கு எதிரான போட்டியில் கவனக்குறைவாக செயற்பட்டதால் இரண்டாவது கோல் இலங்கைக்கு எதிராக போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஓரிரு சந்தர்ப்பங்களில் மியன்மார் கோல் எல்லையை இலங்கை வீரர்கள் ஆக்கிரமித்தபோதிலும் அவை பலனளிக்கவில்லை.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததாலும் இது சிநேகபூர்வ போட்டி என்பதாலும் இரண்டாவது போட்டியில் மொஹமத் அமான், மொஹமத் ஆக்கிப், ஷெனால் சந்தேஷ் ஆகியோருக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு சர்வதேச அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்க பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரி முன்வருவது வரவேற்கத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM