சட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்த வெளிநாட்டவர்களை நாளைய (02) தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பில்  நேற்று (30) மதியம்  சட்டவிரோதமாக நுழைந்த 32 வெளிநாட்டுப் பிரஜைகளில், மியன்மார் பிரஜைகள் 30 பேரும் 2 இந்தியர்களும் உள்ளடங்குவதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

குறித்த படகு காங்கேசன்துறையிலிருந்து 12 கடல் மைல் தூரத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. சிறிய படகில் மிகவும் ஆபத்தான முறையில் இவர்கள் பயணித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் 9 சிறுவர்கள் காணப்படுவதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கைக் கடற்பரப்பினூடாக வேறுநாடுகளுக்கு சட்டவிரோதமாகத் தப்பிச் செல்ல முயற்சித்திருக்கலாம் எனவும் இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தெல்லிப்பளை வைத்தியாசலையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். வைத்தியசாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்ட மல்லாகம் பதில் நீதவான் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் நாளையதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.