(நெவில் அன்தனி)
துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (09) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் இந்தியாவிடம் சரணடைந்த ஆசிய சம்பியன் இலங்கை முதல் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாயிற்று.
இந்தப் போட்டியில் இலங்கையை விஞ்சும் வகையில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இந்தியா 82 ஓட்டங்களால் வெற்றியீட்டிய போதிலும் அதன் அரை இறுதி வாய்ப்பு ஊசலாடிய வண்ணம் இருக்கிறது.
இந்தியாவின் கடைசிப் போட்டி, 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரானதாகும். அதேவேளை இலங்கையையும் பாகிஸ்தானையும் 2 புள்ளிகள் பெற்றுள்ள நியூஸிலாந்து எதிர்த்தாடவுள்ளது. இன்றைய வெற்றியுடன் இந்தியா 4 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கையுடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தியாவின் முன்வரிசை வீராங்கனைகள் அனைவரும் சிறந்த பங்களிப்பை வழங்கி மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.
ஷபாலி வர்மா, ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 76 பந்துகளில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
எனினும் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.
ஸ்ம்ரித்தி மந்தனா 38 பந்துகளில் 50 ஓட்டங்களையும் ஷபாலி வர்மா 40 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர், ஜெமிமா ரொட்றிக்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரொட்றிக்ஸ் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அதன் பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாமன்ப்ரீத் கோர் 27 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 52 ஓட்டங்களை விளாசினார். ரிச்சா கோஷ் 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 20 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பந்துவீச்சில் அமா காஞ்சனா 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சமரி அத்தபத்து 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மிகவும் கடினமான 173 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 90 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இந்த வருட ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் 100 ஓட்டங்களைப் பெறத் தவறியது.
இலங்கை துடுப்பெடுத்தாடியபோது இந்தியாவின் வழமையான அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் களத்தடுப்பில் ஈடுபடவில்லை. அவருக்கு பதிலாக உதவி அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா தலைவர் பதவியை பொறுப்பேற்று அணியை சிறப்பாக வழிநடத்தினார்.
ஹாமன்ப்ரீத் கோருக்குப் பதிலாக ராதா யாதவ் களத்தடுப்பில் ஈடுபட்டார். அவர் மிகவும் சிரமமான பிடி ஒன்று உட்பட மூன்று பிடிகளை எடுத்தார்.
இந்தப் போட்டியிலும் இலங்கையின் ஆரம்பம் மோசமாகவே இருந்தது.
விஷ்மி குணரட்ன (0) இரண்டாவது பந்திலும் சமரி அத்தபத்து (1) இரண்டாவது ஓவரிலும் ஹர்ஷித்தா சமரவிக்ரம (3) மூன்றவாது ஓவரிலும் ஆட்டம் இழக்க இலங்கையின் மொத்த எண்ணிக்கை வெறும் 6 ஓட்டங்களாக இருந்தது.
இந் நிலையில் துணிச்சலுடன் எதிர்த்தாடுவதே சிறந்தது என்ற கோட்பாட்டிற்கு அமைய கவிஷா டில்ஹாரியும் அனுஷ்கா சஞ்சீவனியும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 43 ஓட்டங்களாக உயர்த்தினர்.
அந்த சந்தர்ப்பத்தில் சற்று அவசரப்பட்ட அனுஷ்கா சஞ்சீவனி 20 ஓட்டங்களுடன் ஸ்டம்ப் செய்யப்பட்டு விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து நிலக்ஷிகா சில்வா (8) ஆட்டம் இழந்தார். (57 - 5 விக்.)
மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த கவிஷா டில்ஹாரி 21 ஓட்டங்ளைப் பெற்ற நிலையில் பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் சுகந்திகா குமாரி (1), இனோஷி ப்ரியதர்ஷனி (1) ஆகிய இருவரும் விரைவாக ஆட்டம் இழந்தனர். (65 - 5)
மறுமுனையில் ஓரளவு திறமையாக துடுப்பெடுத்தாடிய அமா காஞ்சனா 19 ஓட்டங்களைப் பெற்றார். உதேஷிக்கா ப்ரபோதனி 9 ஓட்டங்களுடன் கடைசியாக ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆஷா சோபனா 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரேணுகா சிங் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: ஹாமன்ப்ரீத் கோர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM