வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் 300ற்கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் “தங்களுக்கான வேதனத்தை உரிய நேரத்தில் தோட்ட நிர்வாகம் வழங்கப்பட வேண்டும்” என கோரி அடையாள இன்று காலை பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

பண்டிகை காலங்களில் தங்களுக்கான சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படுவதில்லை. இத்தோட்டம் ஜனவசம நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படுவதனால் தொழிலாளர்களுக்கான சலுகைகள் உரிய வேளையில் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருவதை ஆட்சேபித்து இந்த பணிபகிஷ்கரிப்பு இன்று காலை முன்னெடுக்கபட்டுள்ளது.

இவ்விடயத்தை அறிந்த மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவருமான ராஜாராம் இத்தோட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அங்கு தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுத்த ராஜாராம் கருத்து தெரிவித்ததாவது,

ஜனவசம தோட்டத்தின் கீழ் இயங்கும் மவுன்ஜீன் தோட்ட தொழிலாளர்களும் மனிதர்கள். ஏனைய கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளும் இவர்களுக்கும் உண்டு. எனவே இத்தோட்ட தொழிலாளர்களுக்கு பண்டிகை காலம் மற்றும் மாதாந்த வேதனம் கொடுக்கப்படும் காலங்களில் தோட்ட நிர்வாகத்தினால் முறைகேடான செயல்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இதனை இந்த தோட்ட நிர்வாகம் தவிர்த்துக்கொண்டு எதிர்காலத்தில் இவர்களின் உரிமைகளை சரிவர செயல்படுத்த வேண்டும்.

அதேவேளை 300ற்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதனால் தான் நிர்வாகத்திற்கு எதிராக பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

எனவே எதிர்வரும் காலங்களில் இவர்களுக்கான சலுகைகள் உரிய வேளையில் இடம்பெற தொழிற்சங்க ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மக்களுக்கு தெரிவித்திருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)