(மா.உஷாநந்தினி)
படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்
ஆவர்த்தனா நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் பங்கேற்பில் ஏற்பாடான “நாத பரதம் -2024” நிகழ்வு கடந்த 5ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ய. அநிருத்தனன் மற்றும் கௌரவ விருந்தினராக கர்நாடக இசைக் கலைஞரும் கட்புல அரங்கேற்றக்கலைகள் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான கலாநிதி ஆரூரன் அருணந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி சுகந்தி ராஜகுலேந்திரா, சட்டத்தரணி நடராஜா காண்டீபன், இசைக்கலைஞர் நந்தினி விஜயரட்ணம், வீரகேசரி பத்திரிகையின் தலைமை ஆசிரியர் எஸ். ஸ்ரீகஜன், வைத்திய கலாநிதி சிவாஜினி பீஷ்மர், மக்கள் வங்கியின் முன்னாள் முகாமையாளர் எஸ். சிவக்கொழுந்து, கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் அருந்ததி இராஜவிஜயன் முதலானோர் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.
ஆவர்த்தனா நுண்கலைக் கல்லூரியில் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், வீணை, வயலின், மிருதங்கம், தபேலா, கீபோர்ட், கிற்றார், ஓவியம், யோகா ஆகிய கலைப்பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.
இக்கல்லூரியில் கற்பிக்கும் கர்நாடக சங்கீத ஆசிரியர்களான இசைக்கலைமணி T. கருணாகரன் மற்றும் முதுகலைமாணி சந்திரிகா ரபிக்குமார், பரதநாட்டிய ஆசிரியர்களான பரதசூடாமணி ஜீவா ரெட்ணராஜா மற்றும் முதுகலைமாணி துவாரகா ஜெய்சங்கர், வீணை ஆசிரியர் முதுகலைமாணி காயத்திரி சுந்தரமோகன், வயலின் ஆசிரியரான இசைக்கலைமணி பிரஷாந்தி ராஜ்குமார், மிருதங்கம் - தபேலா ஆசிரியரான விஷாரத ரட்ணம் ரட்ணதுரை, கீபோர்ட் - பியானோ ஆசிரியரான கின்னஸ் உலக சாதனையாளர் அன்டன் டயஸ், ஓவிய ஆசிரியரான மயூரி லிகிதரன், யோகா கலையை பயிற்றுவிக்கும் அஷ்டாங்க யோகா மந்திர் பயிற்சி நிறுவனத்தினர் ஆகியோரின் வழிநடத்தலில் மாணவர்களின் கலைஞானம் இந்நிகழ்வில் வெளிப்பட்டது.
இசையும் பாட்டும்
முதல் நிகழ்வாக தோன்றிய கனிஷ்ட மாணவர்களின் 'வீணாம்ருதம்' மேடையையும் அரங்கையும் நிறைத்தது.
இதன்போது கர்நாடக பாடல்களுக்கு மத்தியில் தெய்வீக திரையிசைப் பாடல்களும் வீணைகளால் இசைக்கப்பட்டபோது சபையில் பலர் தலையசைத்து தாளமும் போட்டனர்.
அடுத்து, சிரேஷ்ட மாணவர்களின் வீணையிசையும் சிறப்பாக அமைந்தது.
கனிஷ்ட மாணவர்களின் மழலை மொழி கலந்த குரலிசைக் கச்சேரி பலர் கவனத்தை ஈர்த்தது.
சிரேஷ்ட மாணவர்களின் குரலிசை மற்றும் வயலின் இசைக் கச்சேரிகளை தொடர்ந்து தாளதரங்கம் நிகழ்த்தப்பட்டது.
வாத்திய இசைக் கச்சேரிகளாயினும், வாய்ப்பாட்டுக் கச்சேரிகளாயினும், தாளப்பிசகின்றி பாடல்கள் வெளிப்பட ஆசிரியர்கள் மேடையோரம் நின்று தாளம் தட்டி மாணவர்களுக்கு பலம் சேர்த்ததை காண முடிந்தது.
தாளதரங்கம் நிகழ்த்திய மாணவர்களின் முகங்களில் வாத்தியக்காரர்களுக்கே உரிய பாவனை வெளிப்பட்டது. திரை மூடப்படும்போது தாள ஓட்டமும் வாசிப்பு வேகமும் கூடியது. இன்னும் சில நிமிடங்கள் தொடர்ந்திருக்கலாம்!
கீபோர்ட் இசை குழுக்களாக நிகழ்த்தப்பட்டது. இடைக்கால மற்றும் புதிய திரைப் பாடல்களை மாணவர்கள் கீபோர்ட்டில் 'ஃப்ரீ ஸ்டைல்' பின்னணி இசைக்கலவையில் வாசித்தபோது அரங்கமே ஒருநிலைப்பட்டு ரசித்தது.
சினிமாப் பாடல்களோடு ஒன்றிப்போன ரசிகர்களுக்கு கீபோர்ட் வாத்தியத்தினூடாக மாணவர்கள் மிகச் சிறந்த இசை விருந்தளித்தனர்.
அதேயளவு, கர்நாடக சங்கீத ஸ்வர, சாகித்தியங்களை ரசிகர்களிடத்தில் கொண்டுசேர்ப்பதும் இசைக்கலைஞர்களின் கடமை என்பதை தற்காலத்தில் இசை பயிலும் மாணவர்கள் உணரவேண்டிய ஒன்றாகிறது.
சிறு வயதிலேயே வாத்தியங்களின் தன்மைகள், இசைக்கருவிகளின் தந்திகள், அவற்றை கையாளும் நுணுக்கம் அறிந்து, பாடல்களையும் லயம், தாளம், சொற்களின் உச்சரிப்பு முறைகளையும் உணர்ந்து, ஒரு கலையாக வெளிப்படுத்தும் திறமை இந்த மாணவர்களுக்கு கைகூடியிருக்கிறது.
இந்த விழாவில் வீணை, வயலின், வாய்ப்பாட்டு கச்சேரிகளுக்கு அணிசேர் கலைஞர்களாக மிருதங்க வித்துவான் V. வேணிலான் (மிருதங்கம்), ரட்ணம் ரட்ணதுரை (தபேலா), V. செந்தூரன் (கீபோர்ட்) ஆகியோர் இசைப் பங்களிப்பு வழங்கினர்.
பரதநாட்டிய ஆற்றுகைகள்
அத்துடன், நாதமும் பரதமும் சேர இரு நாட்டியங்கள் மேடையேற்றப்பட்டன.
முருகப்பெருமானின் அரும்பெருமை காட்டும் விதத்திலான நாட்டியத்தை நடன ஆசிரியை துவாரகா ஜெய்சங்கரின் நெறியாள்கையில் கல்லூரி மாணவர்கள் சிறப்பாக ஆடினர்.
குறிப்பாக, அழகு முருகனாக வேடமணிந்து ஆடிய சிறுவர்கள் சபையினரை ஈர்த்தனர்.
அடுத்து, நடன ஆசிரியை 'பரதசூடாமணி' ஜீவா ரெட்ணராஜாவின் நெறியாள்கையில் 'ஆண்டாள் ஷரிதம் - சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்' நாட்டிய நாடகம் ஆடப்பட்டது.
இந்நாட்டிய நாடகத்துக்கு நடன ஆசிரியை ஜீவா ரெட்ணராஜா நட்டுவாங்கம் இசைக்க, நிகழ்வுக்கு கௌரவ விருந்தினராக வருகைதந்த இசைக் கலைஞர் கலாநிதி ஆரூரன் அருணந்தி (பாடல்), எஸ். திபாகரன் (வயலின்), அபிணவ் ரட்ணதுரை (மிருதங்கம்), ரட்ணம் ரட்ணதுரை (தாளதரங்கம்), ஏ. செந்தூரன் (கீபோர்ட்) ஆகியோர் இசைப் பங்காற்றினர்.
வைணவ ஆழ்வார்களில் ஒருவராக விளங்கும் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான கோதை என்கிற ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட தெய்வீகக் காதல் நாட்டியத்தினூடாக அழகுபட காண்பிக்கப்பட்டது.
ஓவியம்
அத்துடன், கல்லூரியில் ஓவியம் பயிலும் மாணவர்கள் மற்றும் ஓவிய ஆசிரியரின் கைவண்ணத்தில் தீட்டப்பட்ட அழகிய ஓவியங்கள் விழா மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
விருந்தினர் உரை
இந்த நிகழ்வில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய.அநிருத்தனன் தனது உரையின்போது, 'இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி வரும் சிறுவர்களுக்கு கலைகள் மிக உதவியாக இருக்கின்றன.
கலை பயில்வதால் சிறுவர்கள் ஆளுமைகளாகவும் பல குழு செயற்பாடுகளில் திறமையாக செயற்படக்கூடியவர்களாகவும் கல்விச் செயற்பாடுகளில் தெளிவான சிந்தனை கொண்டவர்களாகவும் விளங்க முடியும்.
பொதுவாக கலைகள் சைவத்துக்கும் தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவை. பழங்காலத்தவர்கள் முத்தமிழ் எனப்படும் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றிலும் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். கலைகள் அருகிவரும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற கலை நிகழ்வுகள் மிக அவசியமாகின்றன" என்றார்.
இசைக் கலைஞர் ஆரூரன் அருணந்தி உரையாற்றுகையில், 'சிறுவர்களுக்குள் இயல்பான கலைஞர்கள் இருப்பதை நாம் அவதானிக்கிறோம்.
சிலர் குளிக்கும்போது விசிலடிப்பார்கள், ஒரு தோசையை சாப்பிட்டுவிட்டு அடுத்த தோசை வரும் வரை மேசையில் தாளம் போடுவார்கள். பெண்பிள்ளைகள் கண்ணாடி பார்த்துக்கொண்டே ஆடுவார்கள்.
ஆக, அவர்களுக்கு எந்த கலை வருகிறதோ, அந்த கலைக்கு அவர்களை ஆற்றுப்படுத்துவது பெற்றோரின் கடமை. அதன் மூலம் வெற்றிகரமான கலைஞர்களை இந்த சமுதாயத்துக்கு வழங்க முடியும்" என்றார்.
மேலும், இந்த நிகழ்வில் விருந்தினர்கள், ஆவர்த்தனா நுண்கலைக் கல்லூரி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM