(நெவில் அன்தனி)
கிரிக்கெட் அரங்கில் சகலமும் தன்னம்பிக்கை, மற்றையவர் மீதான நம்பிக்கை, கொஞ்சம் அதிர்ஷ்டம் என்பனவாகும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநராக நியமிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
'நான் எப்போதும் கூறுவது என்னவென்றால், தன்னம்பிக்கை, மற்றவர் மீது நம்பிக்கை வைத்தல் என்பதாகும். இதனை அணிக்குள் ஏற்படுத்தியுள்ளேன். அது மிகவும் முக்கியமாகும். இதில் கொஞ்சம் அதிர்ஷ்டம் அடங்கியிருக்கிறது என நான் நினைக்கிறேன். நாம் எவ்வளவு கடினமாகவும் உழைக்கலாம். ஆனால், சிலவேளைகளில் அதிர்ஷ்டமும் நமக்கு தேவை' என அவர் குறிப்பிட்டார்.
'வீரர்கள் அனைவரும் திறமையாக விளையாடவேண்டும் என்பதில் அர்ப்பணிப்படன் இருக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் அவர்கள் எதை எதிர்கொண்டனர் என்பதை அறிவர். அவர்கள் துவண்டு போயிருந்தனர். இதனால் இலங்கை வீரர்களை ஆதரிக்குமாறு பொது மக்களைக் கேட்டுக்கொண்டேன். அவர்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் குழுவினராவர். அவர்களிடம் திறமை இருக்கிறது. அவர்களுக்கு நான் நம்பிக்கை ஊட்டினேன். நான் அவர்களுடனேயே இருக்கிறேன். அவர்கள் என்னோடு எதையும் கலந்துரையாடலாம்' என சனத் ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.
'உள்ளூர் பயிற்றுநர் என்ற வகையில் வீரர்களுடன் இலகுவகாக கலந்துரையாட முடியும் என்பது முக்கிய விடயமாகும். அவர்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் என்னுடன் சுதந்திரமாக பேசலாம். அதனைத் தீர்த்துவைப்பது சுலபமானது. அதனை செய்வதற்கான தன்னம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. நான் என்னவகையான கிரிக்கெட் விளையாடினேன் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே நான் முன்வைக்கும் பெறுமதியான விடயங்களை அவர்கள் அறிவார்கள்,
'உள்ளூர் பயிற்றுநர் என்ற வகையில் எனக்கென்று பொறுப்பு இருக்கிறது. எனக்கு விருப்பமானர்கள் என யாரும் இல்லை. பாரபட்சம் எதுவும் என்னிடம் இல்லை. சுயாதீனமாக செயற்படுவதையே விரும்புகிறேன். எனக்கு பின்னர் உள்ளூர் பயிற்றுநர் ஒருவருக்கு இந்த பதவி கிடைக்கும் என்பதை நான் அறிவேன்' என்றார் அவர்.
பயிற்சிகளின்போது நாங்கள் வித்தியாசமானவற்றை முயற்சி செய்வோம். அவர்கள் ஆர்வமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வோம் எனவும் அவர் கூறினார்.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறுவதற்கு இலங்கைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக சனத் ஜயசூரிய தெரிவித்தார்.
ஆனால், தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 3இல் வெற்றிபெற்றாக வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.,
'இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இன்னும் நான்கு போட்டிகள் மீதம் உள்ளன. தென் ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகளும் இலங்கையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டிகளும் உள்ளன. இந்த நான்கு போட்டிகளில் 3இல் வெற்றிபெற்றால் இலங்கையினால் இறுதிப் போட்டிக்கு முன்னேறக்கூடியதாக இருக்கும்.
'தென் ஆபிரிக்காவுக்கு எதிராக டேர்பனிலும் போர்ட் எலிஸபெத்திலும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. அந்த இரண்டு மைதானங்களும் இலங்கைக்கு சாதகமானவையாகும். எனவே இலங்கை அணி முழு த் திறமையுடன் விளையாடி வெற்றிபெற முயற்சிக்கும். அதற்காக இலங்கை அணியை தயார்படுத்தவுள்ளேன். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் எமது சொந்த நாட்டில் நடைபெறவுள்ளன. எனவே இலங்கை அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது' என்றார்.
இது இவ்வாறிருக்க, தலைமைப் பயிற்றுநர் பணியானது சவால்மிக்கது என அவர் குறிப்பிட்டார்.
'இந்தப் பதவியை நான் எனது வாழ்நாளில் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு சவால் மிக்க பணி என்பதை நான் அறிவேன். அது ஒரு இலகுவான தொழில் அல்ல. ஆனால், அந்த சவாலை ஏற்று இலங்கை அணியினருடன் முன்னோக்கி நகர்வேன்' என சனத் ஜயசூரிய தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, 'வெளிநாட்டுப் பயிற்றுநர்களுக்கு போன்றே சனத் ஜயசூரியவுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இப் பதவிக்கு பலர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், கடந்த 3 தொடர்களில் இலங்கைக்கு சனத் ஜயசூரிய சிறந்த பெறுபேறுகளை ஈட்டிக்கொடுத்துள்ளதால் அவரையே முழு நேரப் பயிற்றுநராக நியமிப்பதற்கு எமது நிறைவேற்றுக்குழு தீர்மானித்தது' என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார்.
இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான மூவகை கிரிக்கெட் தொடர்களின்போது இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்றுநராக சனத் ஜயசூரிய கடமையாற்றி இருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM