“இஸ்லாமிய யதார்த்தமும் தற்கால சவால்களும்” என்ற சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள சவுதி அரேபிய பிரதிநிதிகள் சமய நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்த ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களைப் பாராட்டியுள்ளனர்.

சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் இஸ்லாமிய உலக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு உயர் மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து ஜனாதிபதி மாநாட்டில் ஆற்றிய உரைக்கும் கலந்துகொண்டமைக்கும் நன்றி தெரிவித்தனர்.

முரண்பாடுகளைத் தீர்த்து உலகில் சமாதானத்தை நிலைபெறச் செய்வதற்கு சமயத்தலைவர்கள் ஒரு செயற்திறனான பங்களிப்பை வழங்கவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். மக்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில் அவர்கள் சமயத்தலைவர்களை மதிக்கின்றனர். மக்களை நல்வழிப்படுத்துவதில் சமயத்தலைவர்கள் ஒரு முக்கிய செல்வாக்கைக் கொண்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைத்துத்தின் கீழ் இலங்கை சமய நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் ஒரு சிறந்த முன்மாரிதிரியாக திகழ்வதாக சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சரின் ஆலோசகரான அப்துல் அஸீஸ் அல் அம்மாரா தெரிவித்தார்.

இலங்கைக்கும் இஸ்லாமிய உலகிற்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகள் உதவும் என உலக முஸ்லிம் இளைஞர்களுக்கான சர்வதேச பேரவையின் பொதுச்செயலாளர் சாலிஹ் நஸீர் முஹம்மத் அல் சாலிஹ் தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு சவுதி அரேபியா முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் என சவுதி அரேபிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, எம்.எச்.ஹலீம் இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் எம்.ஹூசைன் மொஹமட் பணிப்பாளர் எம்.பி.எம்.சரூக் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.