கலாநிதி ஜெகான் பெரேரா
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துக்கொண்டு வருகிறது. அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகள் மக்களினால் பெரிதும் வரவேற்கப்பட்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் அம்பலப்படுத்தப்பட்டு அவர்களின் வாகனங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டமை, விசா மற்றும் பாஸ்போர்ட் சர்ச்சைகள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டமையும் அந்த நடவடிக்கைகளில் அடங்குகின்றன.
தேர்தலுக்கு பிறகு கொண்டாட்டங்கள் மிகவும் அமைதியாக இடம்பெற்றமையும் முன்னர் அதிகாரத்தில் இருந்தவர்களை பழிவாக்கும் நோக்கில் எந்த சம்பவமும் இடம்பெறாதமையும் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்கள். இந்த புதிய போக்கு வெற்றி பெற்றவர்கள் தங்களது அரசியல் எதிரிகளுக்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட கடந்த காலத்தில் இருந்து ஒரு விலகலாக அமைந்திருக்கிறது.
நிரந்தரமாக அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் நிரந்தரமாக அதிகாரத்துக்கு வெளியில் இருந்தவர்களுக்கும் இடையிலான ஒரு போட்டியாக ஜனாதிபதி தேர்தல் அமைந்ததால் அதில் உள்ள வரக்கத்தன்மை காரணமாக தேர்தலுக்கு பின்னர் வன்முறைகள் மூளும் என்ற அச்சம் பலமானதாக இருந்தது. மேலும், தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தொடர்ந்தும் ஒரு மார்க்சிய - லெனினிய கட்சியாக இருக்கிறது என்றும் பொருளாதார அடுக்கில் உச்சத்தில் இருப்பவர்களின் சொத்துக்கள் சுவீகரிக்கப்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறது என்றும் அதன் யாப்பு கூறுகிறது. ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படவும் அரச மற்றும் தனியார் சொத்துக்கள் சூறையாடப்படவும் வழிவகுத்த ஜே.வி.பி.யின் வன்முறைக் கிளர்ச்சிகள் பற்றிய நினைவு பழைய தலைமுறையினர் மத்தியில் தொடர்ந்து இருக்கிறது.
ஆனால், ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சிக்கு பிறகு 52 வருடங்களும் அதன் இரண்டாவது கிளர்ச்சிக்கு பிறகு 36 வருடங்களும் கடந்துவிட்ட நிலையில் அது அதிக நிதானம் கொண்ட கட்சியாக மாறிவிட்டது. அதற்கு பிறகு அதன் வன்முறை அரச பல்கலைக்கழகங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்து வந்தது.
இந்த பல்கலைக்கழகங்களில் ஜே.வி.பி.யும் அதில் இருந்து பிரிந்த முன்னரங்க சோசலிச கட்சியும் தங்களுக்குள்ளும் வேறு மாணவ அமைப்புகளுடனும் தொடர்ந்து மோதல்களில் ஈடுபடுகின்றன. புதிதாக வரும் முதலாம் வருட மாணவர்கள் உணர்வதிர்ச்சிக்கு உள்ளாகிற அளவுக்கு மோதல்கள் படுமோசமானவையாக இருக்கும்.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு தேசிய மககள் சக்தி முடிவுகட்டுமாக இருந்தால் பெரும் பணம் செலவழித்து தனியார் பல்கலைக்கழகங்களுக்கு செல்லமுடியாமல் தங்களது உயர்கல்விக்கு அரச பல்கலைக்கழகங்களே கதி என்று நம்பியிருக்கும் மாணவர்களினதும் பெற்றோர்களினதும் ஆதரவையும் நல்லெண்ணத்தையும் பெறக்கூடியதாக இருக்கும்.
தேசிய நலன்கள்
கல்விமான்கள், ஆராய்ச்சியாளர்கள், துறைசார் நிபுணர்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை உள்வாங்கிக்கொண்டதன் மூலமாக ஜே.வி.பி. பிரதான அரசியல் போக்கிற்குள் வந்துவிட்டது. பிரதான சமூகத்தின் சிறந்த சக்திகளை தன்வசம் இழுப்பதில் வெற்றி கண்ட ஜே.வி.பி. சகலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய புதிய நடைமுறைகளை முன்னெடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதையும் நிரூபித்தது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை தோல்வியடைந்தவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பகட்டான முறையில் கொண்டாடாமல் விட்டதும் அந்த புதிய நடைமுறைகளில் அடங்கும்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் வர்த்தகத்துறையின் பாத்திரத்தை அங்கீகரிக்கிற மத்திய இடது செயற்திட்டத்தை ஜே.வி.பி.யும் அதன் பரந்த கூட்டணியான தேசிய மக்கள் சக்தியும் அரவணைக்கக்கூடியதாக அவற்றின் போக்கில் மாற்றங்களை கொண்டுவந்த புதிய ஜனாதிபதி திசாநாயக்கவின் ஆற்றலை சர்வதேச ஊடகங்கள் முக்கியமாக அவதானித்திருக்கின்றன.
தேசிய மக்கள் சக்தியை இடதுசாரி, சோசலிச அல்லது மார்க்சிய அமைப்பு என்று பெயர் சூட்டுவது சமகாலத்துக்கு பொருந்தாது என்றும் பழைய கோட்பாட்டு நாமங்கள் இந்த அரசியல் தருணத்தில் பிரயோகிக்கப்படக்கூடியவை அல்ல என்றும் இலங்கையின் முன்னணி அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட சர்வதேச ஊடகங்களில் எழுதியிருக்கிறார். தேசிய மக்கள் சக்தி கோட்பாட்டு அடிப்படையில் நெருக்கமாக இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு சார்பானதாக அதன் வெளியுறவுக் கொள்கை இருக்கும் என்று சர்வதேச சமூகத்தின் சில பிரிவுகள் ஐயம் கொண்டுள்ளன. ஆனால் அவ்வாறு இதுவரை நடைபெறவில்லை.
தேர்தலில் திசாநாயக்க வெற்றி பெற்ற பிறகு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தான் முதலில் அவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார். ஜனாதிபதி திசாநாயக்க விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக அவரைச் சந்தித்துப் பேசுவதற்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் விரைவில் கொழும்புக்கு வருகை தரவிருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடனபடிக்கைக்கு முன்னதாக சிறப்பாகச் செயற்பட்டிருக்க முடியும் என்று புதிய அரசாங்கம் உணருகின்ற போதிலும் கூட அந்த உடன்படிக்கையை பின்பற்றி செயற்படப்போவதாக வர்த்தக சமூகத்துக்கு அது உறுதியளித்திருக்கிறது. இலங்கையின் நீண்டகால நலன்களை அடிப்படையாகக் கொண்டு வடக்கில் அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மீள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
தேசிய நலன்கள் மீதான தேசிய மக்கள் சக்தியின் மற்றுறுதியே அதன் மீதான பொது மக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் ஈர்ப்புக்கு பிரதான காரணமாகும். தற்போதைய தருணம் வரை ஜே.வி.பி.யோ அல்லது அதன் தலைமையிலான கூட்டணியான தேசிய மக்கள் சக்தியோ் தேசிய நலன்களுக்கு மேலாக குறுகிய அல்லது தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமையை காட்டவில்லை.
கடந்த கால அரசாங்கங்கள் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அவற்றின் தலைவர்கள் கடன்களைப் பெற்ற வேளைகளிலும் வீணான செலவு பிடிக்கின்ற திட்டங்களை பரிசீலித்த வேளைகளிலும் தங்களது நலன்களை நிறைவுசெய்வதற்கே முன்னுரிமை கொடுத்தார்கள். அத்தகைய பெரும்பாலான திட்டங்கள் தொடர்பாக விசாரணைகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. விசா மற்றும் கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பான விசாரணை அத்தகையவற்றில் முதலாவதாகும்.
வெளியுறவுக் கொள்கை
இந்து சமுத்திரத்தில் இடம்பெறுகின்ற புவிசார் அரசியல் போட்டாபோட்டியில் அகப்பட்டுக் கொள்வதில் இருந்து இலங்கை தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்ட வெளியுவுக் கொள்கையை கடைப்பிடிப்பதே உகந்ததாகும். இலங்கைக்கு பெரிய பொருளாதார பயன்களைத் தரக்கூடிய அந்த நாடுகளுடன் பொருளாதார உறவுகளைப் பேணுவது நாட்டு நலன்களுக்கு உகந்தது. இந்தியாவுக்கு மேலதிகமாக சீனாவும் மேற்குலக நாடுகளும் அவற்றில் அடங்கும்.
அதேவேளை, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை மனதில் கொண்டு செயற்படுவது இலங்கையின் நலன்களுக்கு நல்லது. பிராந்திய வல்லரசான இந்தியா அதன் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது. "முதலில் இந்தியா" என்ற கொள்கையைக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடியைப் போன்றே தற்போதைய தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெளியுறவுக் கொள்கையும் இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. முதலில் இலங்கை மக்களின் நலன்களை முன்னுரிமைப்படுத்துகின்ற கடன்களையும் நன்கொடைகளையும் முதலீடுகளையும் மாத்திரம் ஏற்றுக்கொள்வதற்கே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராயிருக்கும்.
ஜே.வி.பி.யைப் போன்று இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்திய விடுதலை புலிகள் மத்தியிலும் இதே போன்ற சிந்தனை இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. இந்தியா தங்களுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சி அளித்த போதிலும் கூட இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாக மாறுவதற்கு விடுதலை புலிகள் தயாராயிருக்கவில்லை.
மாகாண சபைகளை நிறுவிய அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தை ஜே.வி.பி.யும் விடுதலை புலிகள் இயக்கமும் எதிர்த்தன. இந்தியாவுடனான உறவுகளில் இருந்து விடுதலை புலிகள் பயனடைந்த போதிலும் கூட பிரச்சினையை தீர்ப்பதற்கு மெய்யான ஒரு அரசியல் விருப்பம் இல்லாத நிலையில் 13வது திருத்தத்தையோ அல்லது மாகாண அதிகாரப் பரவலாக்கத்தையோ அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் காலம் மாறிவிட்டது. பழைய பகைமைகளை முடிவுக்கு கொண்டுவந்து நிலைவரத்துக்கு ஏற்றமாதிரி செயற்படுவதே தேசிய மக்கள் சக்திக்கு நல்லது.
ஒரு புறத்தில் பழைய காயங்களை குணப்படுத்துவதிலும் மறுபுறத்தில் ஊழலை ஒழிப்பதிலும் 'முதலில் இலங்கை' என்ற அணுகுமுறை நாட்டுக்கு அதிவிசேடமான பயனைத் தரும் என்கிற அதேவேளை உலகிற்கு ஒரு வகை மாதிரியானதாகவும் அமையும். ஆனால் மோதல்களினாலும் ஊளலினாலும் பெருமளவில் பயனடைந்தவர்களிடம் இருந்தும் தொடர்ந்து பயனடைந்து கொண்டிருக்கின்றவர்களிடம் இருந்தும் எதிர்ப்புக் கிளம்புவது சாத்தியம்.
ஊழல் நடவடிக்கைகளின் விளைவாக தனிப்பட்ட முறையில் இலாபமடைந்தவர்கள் தங்களது நோக்கங்களையும் குறிக்கோள்களையும் நிறைவேற்றுவதற்கு சகலவிதமான முயற்சிகளையும் இயன்றமட்டும் செய்வார்கள். முன்னைய எந்த அரசாங்கமும் இதுவரையில் செய்திராத பணியை முன்னெடுப்பதற்காக புதிய அரசாங்கத்தை பாதுகாப்பது மிகமிக அவசியம் என்று ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட தங்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM