யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்விழா நிகழ்வு வரிசையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கச் சர்வதேச ஆய்வரங்கின் (JUICE) ஒரு பகுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தனது ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டை அதன் பொன்விழா ஆண்டில் 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்: இலக்கியத்தினூடான மானுட விடுதலை' என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கிறது. மானுட விடுதலை தொடர்பில் இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியங்களின் பங்களிப்பினை பல்வேறு நோக்கு நிலைகளில் ஆய்வு செய்வதும் மதிப்பீடு செய்வதுமே அதன் நோக்கங்களாகும்.
தமிழியல் ஆய்வு மாநாட்டின் தொடக்க நிகழ்வுகள் 07 ஐப்பசி 2024 அன்று காலை 09.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஆய்வுக்கட்டுரைகள்
இம்மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆர்வலர்கள் முதலானோரிடமிருந்து கோரப்பட்டிருந்தன. ஆர்வத்துடன் பலர் இம்மாநாட்டுக்கான கட்டுரைகளை அனுப்பி வைத்திருந்தனர். இந்தியா, டென்மார்க் முதலான நாடுகளிலிருந்தும் ஆய்வுக்கட்டுரைகள் கிடைக்கப்பெற்றிருந்தன.
கிடைக்கப்பெற்ற நாற்பத்தெட்டு (48) ஆய்வுக்கட்டுரைகளும் உரிய முறைப்படுத்தலூடாக துறைசார் நிபுணத்துவம் உடையவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன.
அவற்றுள் மதிப்பீட்டாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முப்பத்தெட்டு (38) ஆய்வுக்கட்டுரைகள் மட்டும் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக் கட்டுரைகள் பேராசிரியர். சு. வித்தியானந்தன் அரங்கு, இலங்கையர்கோன் அரங்கு, மஹாகவி அரங்கு, டானியல் அரங்கு என நான்கு அரங்குகளில் அளிக்கை செய்யப்படவுள்ளன.
மூத்த படைப்பாளுமைகளுக்கான கௌரவம்
ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தில் பல்வேறு புலங்களில் (Fields) கோலோச்சி வருகின்ற புலமையாளர்கள் சிலரை இனங்கண்டு, அவர்கள் இம்மாநாட்டில் கௌரவிக்கப்படவுள்ளனர். உயராளுமைக்கான கௌரவத்தினைப் பேராயர். வண. கலாநிதி. எஸ். ஜெபநேசன் அவர்களும், படைப்பாளுமைக்கான கௌரவத்தினை மூத்த மரபுக் கவிஞர் சோ. பத்மநாதன் (சோ. ப) அவர்களும் மூத்த எழுத்தாளருக்கான கெளரவங்களை குந்தவை (இரா. சடாச்சரதேவி), அ. யேசுராசா மற்றும் ஐ. சாந்தன் ஆகியோரும் பெறவுள்ளனர்.
பல்கலைக்கழகத்துக்கும் சமூகத்திற்குமிடையிலான ஊடாட்ட நிகழ்வுகள்
தமிழ்மொழியை மீதான ஈடுபாட்டையும் இலக்கியப் பரிச்சயத்தையும் பரவலடையச்செய்யும் நோக்கில் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் உள்ளிட்ட பிற பீட மாணவர்களிடையே தமிழறிவுப் போட்டிப் பரீட்சையையும், வடக்கு மாகாணத்தின் பன்னிரண்டு வலயங்களிலுள்ள பாடசாலைகளின் உயர்தர வகுப்பு மாணவர்களிடையே பேச்சுப்போட்டி, தமிழறிவுப் போட்டிகளையும் இம்மாநாட்டின் இணை நிகழ்வுகளாக முன்னெடுத்துள்ளோம்.
முப்பெரும் விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் கலைப்பீடமும் அப்பீடத்தின் ஓர் அங்கமாகிய தமிழ்த்துறையும் தமது ஐம்பதாவது ஆண்டுகளை நடப்பாண்டில் நிறைவுசெய்துள்ளன. அவ்வகையில் இவற்றின் பொன்விழாக் கொண்டாட்ட வரிசையில், இரண்டாம் நாள் நிகழ்வினை 'முப்பெரும் விழா' என்ற தலைப்பில் கவிதா நிகழ்வு, நடன அரங்கு, தமிழிசை அரங்கு, கூத்து அரங்கு என்றவாறாக ஒழுங்கமைத்துள்ளோம்.
இப்பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அமரர். பேராசிரியர். சு. வித்தியானந்தன் அவர்கள் ஈழத்தின் பாரம்பரியக் கூத்துக்களை மீளுருவாக்கம் செய்வதில் மிகுந்த அக்கறை உடையவராக விளங்கினார்.
அவரின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் யாழ்ப்பாணப் பிரதேசங்களில் இன்றும் உயிர்த்துடிப்புடன் வழங்கி வருகின்ற ஈழத்தின் தென்மோடிக்கூத்தின் செழுமையினை வெளிக்கொணரும் வகையில் 'காத்தான் கூத்து' இம்முறை இங்கு மீளவும் மேடையேற்றப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்
இம்மாநாட்டினையொட்டி தமிழியல் ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகம் பயனுறும் வகையில் பிரபல பதிப்பகங்களின் புத்தகக் கண்காட்சிக்கும் புத்தக விற்பனைக்கும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கணிசமான விலைக்கழிவில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளிவரும் நூல்களை இக்காலப்பகுதியில் கொள்வளவு செய்துகொள்ளலாம். இம்மாநாட்டுக்கான முழுமையான நிதிப்பங்களிப்பினை வழமை போன்று 'சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசு அறக்கொடை நிதியம்' வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM