மாறி வரும் உலகில் உணரப்படாத வயோதிபம்

01 Oct, 2024 | 03:53 PM
image

"முதியோர்களை மதிக்கத் தெரியாத ஒரு சமூகம் அதனது மூல வேர்களை, முன்னோர் வழிவந்த மரபினை, தோற்றத்தினை, மறுத்து அதனது எதிர்காலத்தினை ஆபத்தில் ஆழ்த்தி விடுகின்றது", என்ற கூற்றில் எத்துணை உண்மை பொதிந்துள்ளது. 

முதியோர்கள் தங்களுடைய சமூகத்திற்கு மிகப் பெரும் பங்களிப்பினை ஆற்றுவதோடு மட்டுமல்லாது , அவர்கள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல படிப்பினைகளையும், கருத்துக்களையும், எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்துகின்றனர்.

இன்று சர்வதேச முதியோர் தினமாகும். 

முதியோர்களின் பிரச்சினைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி,  அதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிப்பதே இத்தினத்தின் நோக்கமாகும். 

ஐக்கிய நாடுகள் சபையின்   பொதுச் சபையினால்  14 ஆம் திகதி டிசம்பர் மாதம்  1990 ஆம் ஆண்டு அன்று கொண்டு வரப்பட்ட பிரிவு 45/ 106 தீர்மானத்திற்கு  அமைய இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

1991ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

முதியோர்களது சவால்கள் மற்றும் வாய்ப்புகளை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் சர்வதேச முதியோர் தினத்தின் 34 ஆவது நினைவு தினம் "கண்ணியத்துடன் முதுமை: உலகளவில் முதியோர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம்" என்ற கருப்பொருளில்  கவனம் செலுத்தும்.

முதுமை என்பது வயதின் அடிப்படையில் ஓர் இலக்கம் மாத்திரம் தான். 

இன்று உலகில் முதியோர்கள் பல்வேறு பட்ட சாதனைகளை சாதித்து வருவதனை ஊடகங்களின் மூலமாக எம்மால் அறிய முடிகின்றது.

இளமைக் காலத்தில் தான் மேற்கொண்ட  தொழில் முயற்சியில்  தோல்வியுற்று அதனை முதுமைக் காலத்தில் சாதித்துக் காட்டிய சாதனையாளர்களும் இருந்திருக்கின்றனர் என்கின்ற பொழுது முதுமை கூட , ஒரு புதுமையைப் படைத்திருக்கின்றது எனலாம்.

KFC எனும் நிறுவனத்தின் உரிமையாளர்  திரு.கர்னல் சண்டர்ஸ்.  இவர் வாழ்க்கையில் 60 வயது வரை  தோல்வியைத் தவிர வேறு எதனையும் சந்தித்ததில்லை. 

தனது 65 ஆவது வயதில் "KFC" என்ற  நிறுவனத்தை ஆரம்பித்து இன்று உலகில் பல்வேறு கிளைகளை நிறுவி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்.

இங்கு வயது அவருக்கு ஒரு தடையாக இருந்தது இல்லை.

பொதுவாகவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களை முதியோர்களென வரையறுப்பர் .

இதன் காரணமாகவே இலங்கை போன்ற நாடுகளில் 60 வயதினை பூர்த்தி செய்த அரசாங்க உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற வேண்டுமென சட்டம் மூலம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

முதுமை என்னும் போது அது 60 வயதில் ஆரம்பமாவது எனக் குறிப்பிடுவது தவறானக் கருத்தாகும்.

ஒரு குழந்தை பிறந்த நாளிலிருந்து அது வளர்ந்து வரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் முதுமை என்கின்ற நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. 

1950 ஆம் ஆண்டிற்கும்  2010 ஆம் ஆண்டுக்கும்  இடையிலான உலக ரீதியான ஆயுள் எதிர்பார்ப்பானது 46 வயதில்  இருந்து 68 வயதாக அதிகரித்துள்ளது .

2021 ஆம் ஆண்டில் உலகில் சுமார் 761 மில்லியன் மக்கள் 65 வயதினராக அல்லது அதற்கு மேற்பட்டவர்களாகக் காணப்பட்டனர்.

2050 ஆம் ஆண்டு இவர்களின் இந்த எண்ணிக்கை 1.6 பில்லியனுக்கு மேல் அதிகரிக்குமென எதிர்வு கூறப்படுகின்றது.

கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள வயோதிபர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 261 மில்லியன்களாகும் . 

2050 ஆம்  ஆண்டளவில் இந்த எண்ணிக்கை சுமார் 573 மில்லியனாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப் படுகின்றது. 

இலங்கையில் வசிக்கும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களின் வளர்ச்சி வீத எண்ணிக்கையானது 2037 ஆம் ஆண்டு இருபத்திரெண்டு சதவீதத்தால் அதிகரிக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.  

இவ்வாறான அதிகரிப்பானது நாட்டின் பொருளாதார ரீதியில் பெரும் செல்வாக்கு செலுத்தக்கூடிய தன்மை கொண்டதாக காணப்படுகின்றது . நீண்ட ஓய்வு காலத்திற்கான வருமானம், அவர்களது நுகர்வுக்கு ஏற்ற உணவு உற்பத்தி, போக்குவரத்து, இருப்பிடம் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகின்றது. இதற்கேற்ப அரசாங்கங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன.

வயதான காலத்தில் முதியவர்கள் தமது இளமைக் காலம் போல ஓடி, ஆடி செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது. 

தற்போது வயோதிபர்கள் மத்தியில் நிலவும் சுகவீனம், வறுமை, தனித்திருத்தல், ஆண்களை விட பெண்களின் ஆயுட்கால அதிகரிப்பு என்பன அரசுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு சவாலாக அமையும் எனலாம்.

வார்த்தைகள் தடுமாறுவது வயோதிபத்தின் தடுமாற்றம் தான் !

வார்த்தை தடுமாறினாலும், வாழ்க்கை தடுமாறாமல் வருங்கால சமுதாயத்தை வழி காட்ட வல்லவர்கள் வயது முதிர்ந்தவர்கள் ! 

மாறி வரும்  இன்றைய உலகில் இவர்களின்  முக்கியத்துவம் உணரப்படாமலிருப்பது துரதிர்ஷ்டமான ஒன்றே !

பல்வேறு நோய்களுடன் போராடி வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு வயோதிபர்கள் இன்று ஆளாவது தவிர்க்க முடியாததாகின்றது.

முதியவர்கள்  இயலாமை நிலைமையில் இருக்கும் பொழுது, அவர்களை சரியாக கவனிக்காமை, உரிய சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமை, உரிய வகையில் – உரிய நேரத்திற்கு உணவளிக்காமை, அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருத்தல், அவர்களின் கருத்துக்களுக்கு செவி கொடுக்காமை, துன்புறுத்தல், வார்த்தைகளால் காயப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் அவர்களை மிகவும் பாதிக்கின்ற விடயங்களாக அமைகின்றன.

முதுமையில் ஏற்படக் கூடிய நோய்களான மறதி, பக்கவாதம், உதறுவாதம் எனப்படுகின்ற பார்க்கின்சன் (Parkinson disease ), மூட்டு வலி போன்ற பல்வேறு உபாதைகளுக்கு உள்ளானவர்களுக்கு தொடர்ச்சியான சிகிச்சையளித்தல் அவசியம்.  

ஆயினும், இன்றும் பல குடும்பங்கள் போதிய நிதி வசதியின்றி , பொருத்தமான சிகிச்சைப் பெற முடியாத நிலையிலிருப்பது கவலைக்குரிய விடயமே !

முதியவர்களும் முடிந்தளவு தங்களது பழைய நண்பர்களை சந்தித்தல், பழைய நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளுதல் போன்ற  மகிழ்ச்சியான சூழ்நிலையினை உருவாக்கிக் கொள்வதன் மூலம்  தமது மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

முதியவர்களுக்கு சிறந்த பராமரிப்பு, அன்பான வார்த்தைகள், ஆறுதல், மகிழ்ச்சி என்பன அவசியமாகின்றன.

முதியோர்களின் உள ரீதியிலான மகிழ்ச்சியை ஏற்படுத்தும் முகமாக, அவர்களுக்கென தனியான தொலைக்காட்சி சேவையினை ஆரம்பிப்பது அவசியம் எனலாம்.

இச்சேவையில் உள நலம், உடல் நலம், பொழுது போக்கு, ஆன்மிகம், உணவு முறை, மற்றும் குடும்ப நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை உள்ளடக்கலாம்.

மேலும், அவர்களுக்கான பாதுகாப்பு, உணவு, உறைவிடம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சமூகம் மற்றும் சட்டரீதியான பாதுகாப்பளித்தல், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை முதியோர் அனுபவிக்க வழிவகை செய்தல் போன்ற முதியோர் நலன்கள் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தப்படுவதும் அவசியமாகின்றது. 

முதுமை என்பது வயதில் இல்லை. அது ஒருவரது  செயலிலும், எண்ணத்திலும் தான் தங்கி உள்ளது. முதுமையால் ஏற்படும் தனிமை உணர்வு தான் வயோதிபத்தை உணர்த்துவிக்கின்றது. 

இந்த சிந்தனையை தடுக்கும் ஆற்றல் கூட்டு குடும்பத்திற்கும், நட்பு வட்டத்துக்கும், சமூக உறவுகளுக்கும், உண்டு. சுற்றம் சூழ இருக்கும் பொழுது கடந்து போன , மறந்து போன பல விடயங்களை கூட இருப்பவர்களுடன் நினைவூட்டப்படுகின்ற பொழுது உடலளவிலும் உள அளவிலும் இளமை உணர்வு மீண்டும் தளிர்த்தோங்கும். எனவே, முதியவர்களை அரவணைக்கும் கடமை சொந்த உறவுகளுக்கு மட்டுமல்லாது, சமூகத்தில் உள்ள அனைவருக்கும் உண்டு எனலாம்.

இளமைக் காலத்தில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்ணை இமை காப்பது போல காத்து அவர்களை வளர்க்கின்றனர்.  

வயோதிபக் காலத்தில் வயதானப் பெற்றோர்களைப் பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் மிக முக்கிய கடமையாகும். 

தூர இடங்களில் இருக்கும் பிள்ளைகள் தமது பெற்றோர்களுக்கு தொலைபேசியின் ஊடாக கதைக்கும் பொழுது பெற்றோர்கள் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது.  

முதியவர்களது அர்ப்பணிப்பு, தியாகம் , விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தங்களது துறைகளில் காட்டிய ஆர்வம், அதன் மூலம் தமது நாட்டிற்கும், குடும்பத்திற்கும் வாழ்நாள் பூராவும் ஆற்றிய சேவைகளை நினைவுபடுத்தி அவர்களைப்  பாராட்டுவது அவசியம். 

அவர்களிடம் இருக்கின்ற அறிவு, விவேகம், அனுபவம் , ஆகியவற்றை நாம் அவர்களிடமிருந்து தெரிந்துக் கொள்வதன் ஊடாக,  அவர்கள் நாம் வாழும் இந்த உலகில் எத்தகைய பங்களிப்பினை அளித்திருக்கிறார்களென அறிந்து அதற்குரிய மரியாதையை  செலுத்த நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

அவர்களது ஈடிணையற்ற பங்களிப்பினை நினைவு கூர்ந்து அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவது அரசாங்கங்களின் கடமையாகும்.

முதியோர்களுக்கான தேசிய சபையும் மற்றும் செயலகமும் 2000 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க முதியோர்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் சட்டமூலத்தின் கீழ் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

தெற்காசியப் பிராந்தியத்தில் முதியோர் சனத்தொகை துரிதகதியில் அதிகரிக்கும் ஒரு நாடாக இலங்கை விளங்குகின்றது.எனவே, இச்செயலகமானது எதிர்காலத்தில் அதிகரிக்கவுள்ள முதியோர் சனத்தொகையினைக் கருத்திற்கொண்டும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதனை நோக்காகக் கொண்டும் நிறுவப்பட்டுள்ளது.

"முதியோர்களின் நலன்களை மேம்படுத்துதல், உரிமைகளைப் பாதுகாத்தல் என்பனவற்றினூடாக அவர்கள் கௌரவமாகவும், கண்ணியமாகவும், சுதந்திரமாகவும் வாழ வழி அமைத்தல், சமூக அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் முதியோர்களுக்கான பங்களிப்பின் தேவையினை உணர்த்துதல் மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாத்தலே இந்த செயலகத்தின் பணிக்கூறுகளாகும்”

மூத்தக் குடிமக்களுக்கு ஏற்ற மதிப்பினை வழங்குவதோடு அவர்களுடைய  அறிவையும், விவேகத்தையும், நடைமுறை அறிவினையும்  பெற்றுக் கொள்வதன் மூலமாக நாம் எவ்வாறு திறமையாக செயற்படலாம் என்பதனை இளைய சமூகத்தினர் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

உலகப் போக்கு துரிதமாக மாறிக் கொண்டு வருகின்றது. 

அதற்கேற்ப இன்றைய இளையத் தலைமுறையினரும் தமது வாழ்க்கைப் பயணத்தினை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.

இதனால் முதியவர்களும் தமது விடாப்பிடியான நிலையிலிருந்து மாறி , இளையவர்களுடன் ஓரளவாவது  இணைந்து  செயல்படுவது காலத்தின் தேவையாக உள்ளது.

" ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல பாத்திரங்களை ஏற்கின்றான். முதலில் குழந்தை. பிறகு மாணவன், பின்னர் விடலைப் பருவம், தொழில் வாய்ப்பினைப் பெற்றப் பின்னர் குடும்பஸ்தன் ஆகின்றான். காலச்சக்கரத்தின் அபரிமிதச் சுழற்சியின் விளைவாக இறுதியில் மூக்குக் கண்ணாடி அணிந்து , முகம் சுருங்கி,  உடல் மெலிந்து, பல், கண்பார்வை குறைவடைந்து , கூன் விழுந்து, முதுமையாகி மறைவது தான் சரித்திரமென " பிரபல ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியர் கூறுகின்றார்.

மொத்தத்தில் இது தான் வாழ்க்கையின் யதார்த்தம். 

அனைத்து முதியோர்களுக்கும், அவர்கள் ஆற்றிய உயர்ந்த சேவைகளுக்கும், எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 

பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ்
முன்னாள் ராஜதந்திரி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தரமற்ற மருந்துகளின் தாக்கமும், கொள்முதல் சட்டத்திற்கான...

2024-10-08 11:39:05
news-image

ஷேய்க் ஹசீனாவை நாடுகடத்த முடியுமா?

2024-10-07 13:14:08
news-image

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக்...

2024-10-07 12:57:19
news-image

பாரம்பரிய கட்சிகளை தண்டித்த வாக்காளர்கள்

2024-10-06 19:15:50
news-image

பேராபத்துக்குள் தமிழ்த் தேசியம்

2024-10-06 17:14:44
news-image

தமிழ் அரசுக் கட்சியுடன் பயணிப்பதில் அர்த்தமில்லை...

2024-10-06 18:31:52
news-image

தமிழ் மக்களுக்கான அரசியல் நியாயப்படுத்தலும் தீர்வுகளும்

2024-10-06 18:42:06
news-image

புதிய ஆட்சியில் புத்துயிர் பெறுமா வடக்கு...

2024-10-06 15:55:39
news-image

இந்திய அணுகுமுறை மாறுகிறதா?

2024-10-06 16:02:59
news-image

அநுரவைக் கையாளும் சீனா

2024-10-06 16:09:55
news-image

இலங்கை அரசியலில் தலைவரும் செயலாளரும்

2024-10-06 13:27:16
news-image

ஜனாதிபதிகள் வரலாம் போகலாம்; ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஜனாதிபதி...

2024-10-05 12:29:13