பல நூற்றாண்டுகள் கடந்தாலும் மறையாப் புகழ் கொண்ட மகாக் கலைஞர் "சிவாஜி கணேசன்" பற்றிய 100 பதிவுகள்.
1.1928.10.01 அன்று விழுப்புரத்தில் சின்னையா மன்றாயர்,ராஜாமணி இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
2.எட்டு வயதில் எதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளை நாடகத்தில் பெண் வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
3.1946இல் 18வது வயதில், அண்ணா வசனம் எழுதிய "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்"நாடகத்தில் சத்ரபதி வீரசிவாஜி வேடத்தில் நடித்து ,தந்தை பெரியாரால் "சிவாஜி" கணேசன் என புகழாரம் சூட்டப்பட்டார்.
4.1952.10.17 ஓர் தீபாவளியன்று சிவாஜி கணேசன் குணசேகரன் வேடத்தில் நடித்து அறிமுகமான "பராசக்தி"படம் வெளியாகி இமாலய வெற்றி கண்டது. இதே 1952.05.01அன்று சுவாமிமலையில் சிவாஜி கணேசன்,கமலாம்மா திருமணம் எளிமையாக நடந்தது.இத்தம்பதிகள் ஈன்ற செல்வங்கள்: முத்த மகள் சாந்தி,இரண்டாவது ராம்குமார்,மூன்றாவது இளைய திலகம் பிரபு,நான்காவது தேன்மொழி.
5.1952.10.27 இல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் முதன் முதலாக நாட்டியப் பேரொளி பத்மினிக்கு ஜோடியாக "பணம்"என்ற படத்தில் நடித்தார்.
6.1953.10.07 இல் கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் உருவான "திரும்பிப்பார்"படத்தில் முதன் முறையாக வில்லனாக நடித்தார்.
7.1954.03.03இல் எல்.வி.பிரஷாத் இயக்கத்தில்,கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் உருவான ",மனோஹரா" வெற்றிப்படத்தில் நடித்து மீண்டும் புகழின் உச்சம் கணடார் சிவாஜி கணேசன். மனோஹரா வசனங்கள் கொண்ட புத்தகம் விற்பனையில் சாதனை கண்டது. பின்னாளில் தமிழ் சினிமாவில் நடிக்க வரும் கலைஞர்கள் இப்படத்தின் வசனங்களை பேசிக்காட்டி வாய்ப்புத் தேடினர்.
8. 1954.04.13இல் முதன் முறையாக பாடல்கள் இல்லாத படமான "அந்த நாள்"வெளியானது வீண எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் தேசத்துரோகியாக நடித்த வெற்றிப் படம்.தேசிய விருது பெற்ற படம் "அந்த நாள்".
9.பி.ஆர்.பந்துலு தயாரித்த முதல் தமிழ்ப்படமான "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி"படத்தில் நகைச்சுவையாக சிவாஜி நடித்தார்.
10.1954.08.26 இல் மக்கள் திலகம் எம்ஜியாரும்,நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் முதலும் கடைசியுமாக இணைந்து நடித்த படமான "கூண்டுக்கிளி"வெளியானது.
11.1954.08.26இல் சிவாஜி நடிப்பில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற "தூக்குத் தூக்கி"படத்தில் இசைச்சக்ரவர்த்தி டி.எம்.சௌந்தரராஜன் சிவாஜிக்கு முதன் முதலாக பின்னணி பாடி ஜனரஞ்சக பாடகரானார்.
12.1955.11.13இல் வெளியான சிவாஜியின் 25வது படம் "கள்வனின் காதலி"இப்படத்தில் அஷ்டாவதானி பானுமதி முதல் முறையாக சிவாஜிக்கு ஜோடியானார்.1937களில் ஆனந்த விகடனில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி முதல் முறையாக எழுதிய தொடர்கதை திரைப்படமானது.
13.முதன் முதலாக தெலுங்கு சுப்பர் ஸ்டார் என்.டி.ராமராவுடன் இணைந்து "தெனாலி ராமன்"படத்தில் தெனாலி ராமனாக நடித்தார்.
14.1956.02.17இல் ஜெமினி கணேசனுடன் முதல் முறையாக "பெண்ணின் பெருமை" படத்தில் வில்லனாக நடித்தார்.
15.1956.02.25இல் "ராஜா ராணி"கலைஞர் வசனத்தில் உருவான "சேரன் செங்குட்டுவன்" ஓரங்க நாடகத்தில் "காவிரி தந்த புதுமணலில் களமமைத்த சேர சோழ பாண்டி மன்னர் கோட்டையிலே யார் கொடிப் பறப்பதென போர்த் தொடுத்துக் கொண்டிருக்கும் காலமது" என ஆரம்பிக்கும் வசனங்களை ஒரே பதிவில் (ஒரே டேக்)நடித்து சாதனை புரிந்தார் சிவாஜி.
16.1956.11.01இல் அஷ்டாவதானி பானுமதிக்கு முதல் முறையாக ஜோடியாக வயதான வேடத்தில் நடித்தார் சிவாஜி. இவருக்கு மகனாக லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்தார். சிவாஜிக்கு அப்போது வயது 28.
17.1956.02.27இல் வெளியான "மக்களைப் பெற்ற மகராசி"படத்தில் கொங்குநாட்டு வட்டாரத்தமிழ் பேசி நடித்தார் சிவாஜி. இப்படத்தை நடிகர் வி.கே.ராமசாமியும் இயக்குனர் ஏ.பி.நாகராஜனும் இணைந்து தயாரித்தனர்.
18.1957.04.12இல் வெளியான "வணங்காமுடி " படத்தின் விளம்பரப் பதாகையில்(கட்டவுட்) சிவாஜி கணேசனின் வணங்காமுடி தோற்றம் 80 அடியில் வைக்கப்பட்டது.முதன் முதலாக ஒரு நடிகருக்கு இந்தியாவில் வைக்கப்பட்ட மிக பெரிய பதாகை (கட்டவுட்)இது.
19.1957.10.22இல் வெளியான "அம்பிகாபதி" படத்தில் சிவாஜி அம்பிகாபதியாக நடித்தார். இப்படத்தில் அம்பிகாபதிக்கு தந்தை கம்பராக நடிக்க எம்.கே.தியாகராஜா பாகவதரை ஆரம்பத்தில் கேட்டனர்.அவர் மறுக்கவே அவ்வேடத்தில் எம்.கே.ராதா (சந்திரலேகா கதாநாயகன்)நடித்தார்.
20.1958.02.07இல் வெளியான "உத்தமபுத்திரன்"படத்தில் பார்த்திபன், விக்ரமன் என முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடித்தார் சிவாஜி.
21.1958.04.14இல் வெளியான "சம்பூர்ண ராமாயணம் "படத்தில் பரதனாக கருத்தாழம் மிக்க வசனங்கள் பேசி நடித்து வியப்பில் ஆழ்த்தினார் நடிப்பின் நாயகன். இப்படத்தைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி "கண்டேன் பரதனை"என சிவாஜிக்கு புகழாரம் சூட்டினார்.
22.1958.08.15இல் வெளியான "சாரங்கதாரா" சிவாஜியின் 50 வது படம்."வசந்த முல்லைப் போல் அசைந்து ஆடும் பெண் புறாவே"பாடல் இப்படத்தில் ஜனரஞ்சகமாகஅமைந்தது.
23.1959.05.16 இல் வெளியான சிவாஜி கணேசனின் கனவுப்படமான "வீரபாண்டிய கட்டபொம்மன் ",சிவாஜி கணேசனுக்கு அகில உலக உளவில் முகவரி கொடுத்த படம். 1959இல் ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த படமாகவும்,சிறந்த நடிகராக சிவாஜி கணேசனும் தேர்வாகி பாராட்டு மழையில் சிவாஜி நனைந்த, எகிப்து அரசின் பரிசினையும்,விருதினையும் பெற்று இந்திய தேசத்திற்கு பெமை தேடித் தந்த அமோக வெற்றி கண்ட படம். சிவாஜி நடித்த முதல் வண்ணப்படம்.லண்டனில் கலர்ப் பிரின்ட் போடப்பட்ட படம்.தேசிய விருது பெற்ற படம்.
24.1960.01.14இல் வெளியான "இரும்புத்திரை" முதல் முறையாக ஜெமினி ஸ்டுடியோ தயாரிப்பில் எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் சிவாஜி நடித்த வெற்றிப்படம்.
25.1960.06.25 இல் வெளியான "படிக்காத மேதை ".சிவாஜி "ரங்கன்" என்ற பாத்திரத்தில் வெகுளியாக நடித்த நடிப்பு மிக அற்புதம். இப்படத்தில் எஸ்.வி.ரங்காராவ்,கண்ணாம்பா, சிவாஜிக்கிடையில் ஒரு நடிப்பு போட்டியே இடம்பெற்றது.
26.1961.05.27இல் வெளியான "பாசமலர்". உலக அளவில் அண்ணன் தங்கை பாசப் பிணைப்புக்கு எடுத்துக்காட்டான இமாலய வெற்றி பெற்ற படம். இதற்குப் பின் வந்த அண்ணன் தங்கை கதைகள் கொண்ட படங்களுக்கு ஆணிவேராக அமைந்த படமிது.தேசிய விருது பெற்ற படம்.
27.1961.11.07இல் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனாராக சிவாஜி கணேசன் வாழ்ந்து காட்டிய படம் "கப்பலோட்டிய தமிழன்". தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக வரிவிலக்கும்,வெள்ளிப் பருந்து பரிசும், மகாகவியின் பாரதியின் பாடல்களும் இடம்பெற்ற சுதந்திர தாகம் கொண்ட படம்.தேசிய விருது பெற்ற படம். இப்படத்தைப் பார்த்த வ.உ.சியின் மகன் "தந்தையை நேரில் கண்டேன்"என சிவாஜியை விழித்துக் கூறினார்.
28.1962.01.14 இல் வெளியான சிவாஜியின் 75வது படம் "பார்த்தால் பசிதீரும்".குழந்தை கமலஹாசனை தூக்கி கொஞ்சி மகிழ்ந்த வெற்றிப் படம்.
29.1962.05.26 சிவாஜி கணேசன் அமெரிக்க.விஜயம் செய்யும் வேளையில் வெறும் பதினொரு நாட்களில் எடுத்த படம் "பலே பாண்டியா". இப்படத்தில் சிவாஜி மூன்று வேடங்களிலும்,நடிகவேள் எம்.ஆர்.ராதா இரண்டு வேடங்களிலும் நடித்தனர்.
30.1963.03.29இல் எழுத்தாளர் லட்சுமியின் நாவலான "பெண் மனம்"எல்.வி.பிரஷாத்தின் இயக்கத்தில் சிவாஜி கதாநாயகனாக நடித்த "இருவர் உள்ளமா"க வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.
31.1963.07.12இல் பெற்றால்தான் பிள்ளையா மேடை நாடகம் சிவாஜி நடித்த "பார் மகளே பார்"என திரைப்படமானது. இப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் "சோ" அறிமுகமானார்.
32.1963.08.12 இல் வெளியான "குங்குமம்"படத்தில் சிவாஜி ஒரு கட்டத்தில் பெண் வேடத்தில் நடித்தார்.இப்படத்தில் இடம்பெற்ற "சின்னஞ்சிறிய வண்ணப்பறவை" பாடலை முதலில் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் பாடினார்.பின்னர் டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.
33.1964.01.14 இல் வெளியான வெற்றிக் காவியம் "கர்ணன் ". நிறைந்த செலவில்,மிகப் பிரமாண்டமாக உருவான, பல உச்ச நட்சத்திரங்களுடன் சிவாஜி கணேசன் கொடைவள்ளல் "கர்ணனாக"நடித்தார்.இந்திய சினிமா வரலாற்றில் கர்ணன் படம் ஓர் சகாப்தம். கர்ணனில் நடிக்கும் போது சிவாஜிக்கு வயது 36.தேசிய விருது பெற்ற படம்.
34.1964.09.12இல் வெளியான சிவாஜியின் சொந்தப்படம் "புதிய பறவை ".ஆங்கிலப் படத்திற்கு நிகராக தமிழகத்தில் எடுத்த வெற்றிப்படம்.இப்படத்தில் இடம்பெற்ற "எங்கே நிம்மதி"என்ற பாடல் நூற்றுக்கணக்கான வாத்ய இசையில் உருவானதாகும்.
35.1964.11.03 இல் வெளியான வெற்றிச் சித்திரம் ,சிவாஜி கணேசனின் 100வது படம் "நவராத்திரி ".ஒன்பது வேடங்களில் நடிப்பின் சிகரம் அசத்திய இமாலய வெற்றி கண்ட படம். ஒன்பது வேடங்களிலும் ஓருவர்தான் நடித்தார் என்பதை ஹொலிவுட் சினிமா உலகம் நம்ப மறுத்த படம்.
36.1965.07.31 இல் வெளியான இமாலய வசூல் மழையில் நனைந்த தெய்வீக புராணச் சித்திரம் "திருவிளையாடல்"சிவனாக வாழ்ந்து காட்டிய பக்திக் காவியம்.சில நாட்களில் ருத்ரதாண்டவ நடனத்தை பயிற்சி செய்து சிவாஜி கணேசன் இப்படத்தில் ஒப்புவித்தார்.தேசிய விருது பெற்ற படம்.
37.1965.12.10இல் வெளியான "நீலவானம்" சிவாஜி படத்திற்கு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் திரைக்கதை,வசனம் எழுதிய முதல் படம்.இப்படத்தில் சிவாஜியின் சொந்த தியேட்டரான "சாந்தி"யில் டிக்கட் கிழிப்பவராக சிவாஜி கணேசன் ஒரு காட்சியில் நடித்திருப்பார்.
38.1966.01.26இல் வெளியான "மோட்டார் சுந்தரம் பிள்ளை ". 38 வயதில் பல பிள்ளைகளுக்கு தந்தையாக சிவாஜி கணேசன் அமைதியாக,சர்வ சாதாரணமாக நடித்திருப்பார். ஜெயலலிதா இப்படத்தில் சிவாஜிக்கு மகளாக தோன்றுவார்.இது சிவாஜி படத்தில் ஜெயலலிதா நடித்த முதல் படம்.
39.1966.08.12 இல் வெளியான "சரஸ்வதி சபதம் ".நாரதராகவும்,வித்யாபதி எனும் பாவலராகவும் சிவாஜி நடித்த வெற்றிப்படம்.
40.1967.07.28 இல் வெளியான "திருவருட்செல்வர்"இமாலய வெற்றிப்படம். வில்லவ மன்னனாக,சேக்கிழாராக, திருக்குறிப்பத் தொண்டர் நாயனாராக, சுந்தரமூர்த்தி நாயனாராக,திருநாவுக்கரசு நாயனாராக கலைத் தென்றல் வியாபித்துக் காட்டிய புராண காவியம்.சிவாஜி ஒரு தடவை காஞ்சிப் பெரியவரை தரிசனம் செய்தார். திருநாவுக்கரசர் வேடத்தில் நடித்த போது காஞ்சி பெரியவரின் நடை உடை பாவனைகளை நன்கு உள்வாங்கிக் கொண்டு அப்பர் பாத்திரத்தில் நடித்ததாக குறிப்பிட்டார்.
41.1968.04.11இல் வெளியான "ஹரிச்சந்திரா" நடிகை ஜி.வரலட்சுமியின் சொந்தப்படம். இப்படத்தின் மயான காண்ட காட்சியில் சிவாஜி நடித்த நடிப்பு அபாரம். ஹரிச்சந்திராவில் அண்ணலின் துயர் கொண்ட நடிப்பு ரசிகர்களின் கண்களை குளமாக்கியது.தொடர்ந்து இப்படத்தை துக்கம் தாளாது பார்க்க முடியாமல் தியேட்டரை விட்டு ரசிகர்கள் வெளியேறிய வரலாறும் நிறைய உண்டு.
42.1968.04.12 இல் வெளியான "கலாட்டா கல்யாணம் ". சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த முதல் படம்."எம்ஜியாரின் ஜோடி முதல் முதலா நம்மலோட ஜோடிபோடுது இத மனசுல வச்சி ஒரு பாட்டெழுதும்,"என வாலிபக் கவிஞர் வாலியை சிவாஜி கேட்டுக்கொண்டார். அவரும்",நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகராணி"என எழுதினார்.
43.1968.07.27 இல் வெளியான "தில்லானா மோகனாம்பாள்"நாதஸ்வர சக்ரவர்த்தி சிக்கல் ஷண்முகசுந்தரமாக சிவாஜி வாந்து காட்டிய இமாலய வெற்றி பெற்ற படம். இந்திய சினிமா வரலாற்றில் சரித்திரம் படைத்த படமிது.தேசிய விருதும்,தமிழக அரசின் விருதும் பெற்ற படம். இப்படத்தில் சிறப்புடன் நடித்தமைக்காக சிவாஜிக்கு தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் நம்பியிருந்தனர்.மத்திய அரசு சிவாஜி ரசிகர்களை ஏமாற்றியதையிட்டு இன்றளவிலும் ரசிகர்கள் குமுறகின்றனர்.
44.1968.29.11 இல் வெளியான சிவாஜியின் 125வது ஏவியெம் தயாரித்த படம்.தமிழக அரசின் விருது பெற்றது.இப்படத்தில் இடம்பெற்ற "பால்போலவே வான்மீதிலே" என்ற வாலியின் பாடலைப் பாடிய பி.சுசீலாவுக்கு தேசிய விருது கிடைத்தது.
45.1968.09.05 இல்வெளியான இமாலய வெற்றிச் சித்திரம் "தெய்வமகன்".சிவாஜியின் சொந்தப்படம்.மூன்று வேடங்களில் சிவாஜி கணேசன் நடித்த நடிப்பினைக் கண்டு அகிலமே அவரைப் போற்றிய வெற்றிக் காவியம்.தென்னக சினிமா வரலாற்றில் முதன் முறையாக ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் படம்.ஹொலிவுட் நடிகர்கள் அனைவரும் சிவாஜி கணேசனின் நடிப்பை வியந்து பாராட்டிய படம்.தமிழக அரசின் விருது பெற்றது.
46.1969.11.09 இல் ஸ்ரீதரின் பிரமாண்ட தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான வெற்றிப்படம் "சிவந்த மண் ".தமிழகத்தில் முதன் முறையாக வெளிநாட்டில் படப்பிடிப்பு செய்த படம்.ஹந்தியில் ",தர்த்தி"என்ற பெயரில் வெளியானது. தமிழ் சிவந்த மண் படத்தில் முத்துராமன் செய்த "ஆனந்த்" பாத்திரத்தை ஹிந்தியில் சிவாஜி செய்தார்.சிவாஜி கணேசன் நடித்த ஓரே ஹிந்தித் திரைப்படம் "தர்த்தி".
47.1970.02.20 இல் ப்ரஸ்டீஜ் பத்பநாப ஐயராக கலைத்தாயின் மூத்த மகன் நடிப்பில் கோலோச்சிய வெற்றிப்படம் "வியட்நாம் வீடு.
இப்படத்திற்கு வசனம் எழுதிய சுந்தரம் பின்னாளில் "வியட்நாம் வீடு",சுந்தரம் என பிரபலமடைந்தார். ஆரம்பத்தில் வியட்நாம் வீடு சிவாஜி நாடக மன்றம் சார்பில் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்க பல மேடைகளில் நாடகமாக அரங்கேறி வெற்றி கண்டது.
48.1970.06.27 இல் சிவாஜி கணேசன் வக்கீலாக நடித்து, இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் சிவாஜியை இயக்கிய ஒரே படம் "எதிரொலி".
49.1970.08.15 இல் வெளியான "ராமன் எத்தனை ராமனடி" வெள்ளி விழா கண்ட வெற்றிப்படம். முதலில் இப்படத்திற்கு இட்ட தலைப்பு "சாப்பாட்டு ராமன்,"இப்படத்தில் ஓரங்க நாடகமாக "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் "இடம்பெற்றது. இதில் மராட்டிய சிம்மம் வீரசிவாஜியாக கர்ஜித்து நடித்தார் சிம்மக்குரலோன் சிவாஜி. படத்தில் இந்த நாடகத்தை வைக்க இந்த யோசனை சொன்னவர் கவியரசு கண்ணதாசன்.
50.1970.10.29 இல் வெளியான "சொர்க்கம்". இப்படத்தில் இடம்பெற்ற ஆலங்குடி சோமு இயற்றிய "பொன் மகள் வந்தாள் பொருட்கோடி தந்தாள்"பாடல் காட்சியில் சிவாஜி கணேசன் நவீன உடையில் அபிநயித்து காட்டிய ஸ்டைல் நடனம் இன்றளவிலும் ஜனரஞ்சகம் நிறைந்ததாகவே அமைந்தள்ளது.
51.1971.07.03 இல் நடிகர் திலகம் விவசாயியாக நடிப்பை உழுத 150வது வெற்றிப்படைப்பு "மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் உருவான "சவாலே சமாளி".படம் முழுதும் சட்டைக் கையை மடித்து,வேஷ்டியுடன் நடிப்புச்சுடர் நடித்த இமாலய வெற்றித் திரைப்படம்.
52.1971.10.18இல் வெளியான "பாபு", ரிக்ஸா வண்டி இழுக்கும் தொழிலாளியாக சிவாஜி உழைத்த படம்.இப்படத்தை ஹிந்தி நடிகர் திலீப்குமாரை கதாநாயகனாகக் கொண்டு ரீமேக் செய்ய எண்ணினார் இதன் இயக்குனர் ஏ. சி.திருலோகசந்தர்.படத்தைப் பார்த்து விட்டு சிவாஜி சார் போல் என்னால் இவ்வேடத்தில் நடிக்க முடியாது என திலீப்குமார் மறுத்து விட்டார்.
53.1972 இல் வெளியான மெகா ஹிட் படம் "ஞான ஒளி".சேர்ச்சில் மணியடித்து சேவை செய்யும் ஏழை என்டனி சந்தர்ப்ப சூழ்நிலையால் பணக்கார அருணாக மாறி,சிவாஜி கணேசன் தன் அபார நடிப்பாற்றலால் ரசிகர்களை ஈர்த்த அமோக வெற்றி கண்ட படம். இப்படத்தில் இடம்பெற்ற "தேவனே என்னைப் பாருங்கள் "பாடல் காட்சிகளில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பைப் வெகுவாகப் பாராட்டினாராம் சென்னை சாந்தோம் சேர்ச் பாதிரியார்.
54.1972.08.26 இல் வெளியான வெள்ளி விழா படம் "தவப்புதல்வன்".மாலைக் கண் நோயால் அவதியுறும் குருடராக சிவாஜி கணேசன் நடித்து வியப்பில் ஆழ்த்தியது "தவப்புதல்வன்". இப்படத்தில் இடம்பெற்ற "இசைக்கேட்டால் பவியசைந்தாடும்"பாடல் காட்சியில் வட நாட்டுப் பாவலன் தான்சேனாக நடிப்புக் கலையின் நாயகன் நடித்துக்காட்டிய பாவனை மிக அற்புதம்.
55.1972.05.06 இல் மெகா ஹிட்டடித்த "பட்டிக்காடா பட்டணமா".சோழவந்தான் எனும் ஊரில் "மூக்கையா சேர்வை"என்ற கிராமத்தானாக சிவாஜி கணேசன் அதிரடியாக நடித்து அசத்திய வெற்றிப்படம். இப்படத்தின் உச்சக்காட்சியில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி சிவாஜி ஆற்றும் உரை மிகச் சிறப்பானது. இப்படத்தில். இப்படத்தில் இடம்பெற்ற "அடியென்னடி ராக்கமா"பாடல் படு ஜனரஞ்சகமாக அமைந்தது.
56.29.09.1972இல் வெளியாகி வசூலில் சாதனை படைத்த "வசந்தமாளிகை ".இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு காவியமாக சித்தரிக்கப்பட்ட ஜமீன் கதை. திரையிட்ட அனைத்து இடங்களிலும் இமாலய வெற்றி கண்ட படம்.இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் காலத்தால் அழியாத கானங்களாகும். சிவாஜி கணேசன் இப்படத்தில் அழகும் மிடுக்கும் நிறைந்த ஆடைகளில் அசல் ஜமீன்தார் போல் காட்சியளிப்பார். இப்படத்தில் சொத்துக்களை பாகம் பிரிக்கும் காட்சியில் "சிவப்பு நிற ஜமீன் உடையில் தலையில் சிறகுகள் கொண்ட தலைப்பாகையுடன் அமர்ந்திருக்கும் தோரணையே ஓர் தனி ரசனை நிறைந்தது.
57.1973.03.31 இல் வெளியான தமிழின் முதல் சினிமாஸ்கோப்பில் பிரமாண்ட தயாரிப்பில் உருவான "ராஜ ராஜ சோழன் ". சோழச்சக்ரவர்த்தியாக சிவாஜி கணேசன் நடிப்பில் ஆட்சி செய்த காவியம்.குன்னக்குடி வைத்யநாதனின் இசையில் இப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் இணைந்து "தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்"எனற பாடலை சிவாஜி கணேசன் தன் சொந்த சிம்மக்குரலில் பாடினார்.
58.1973.10.25 இல் பெரிஸ்டர் ரஜினிகாந்த்தாக சிவாஜி நடித்த "கௌரவம் ". கண்ணன்,ரஜினிகாந்த் என இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய படம். ஸ்டைலில் வித்யாசமான மிடுக்கான சிவாஜியை இப்படடத்தில் காணலாம்.
59.1973.12.22 இல் வெளியான மற்றொரு இமாலய ஹிட் படம் , ஒரு நாடகக் கலைஞனின் வாழ்வில் நடக்கும் சூழல்களை தத்ரூபமாக தனது அபார நடிப்பில், ரங்கதுரையாக வாழ்ந்து காட்டிய "ராஜபார்ட் ரங்கதுரை". இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஜனரஞ்சகம். குறிப்பாக "அம்மம்மா தம்பி என்று நம்பி"என்ற பாடல் நெகிழ்ச்சி நிறைந்த ஜனரஞ்சகமானது.
60.1974.06.01 இல் எஸ்.பி.சௌத்ரி எனும் காவல்துறை அதிகாரியாக நடித்த வெற்றிப் படம் "தங்கப்பதக்கம் ". இப்படத்தின் கதாசிரியர் மகேந்திரனின் கற்பனையை திரையில் காட்டி தன் அபாரமாக அசல் பொலீஸ்காரனாக மிடுக்குடன் சிவாஜி நடித்த நடிப்பு காலத்தால் அழியாத ஜனரஞ்சகமாகும்.
61.1975.04.11 இல் சிவாஜியின் 175வது படமாக வெளியான சோகக் காவியம் "அவன்தான் மனிதன் "ஆனந்த பவனின் ஜமீந்தார் ரவி தன் சொத்துக்களை தானம் வழங்கியே இழந்து ,தன் நண்பனுக்காக அனைத்தையும் இழந்து, இறுதியாக உயிரையும் இழக்கும் ரவி வேடத்தில் சிவாஜி கணேசன் துயர்மிகு நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்த மற்றொரு ஹரிச்சந்திரா.
62.1977.01.26இல் வெளியான "தீபம்". உடன் பிறவா தங்கைக்காகவும்,உடன் பிறந்த தம்பிக்காகவும் தன் வாழ்வைத் தியாகம் செய்யும் தியாகியாய் வாழ்ந்து இறுயில் உயிர் விட்டு தீபமாய் ஒளிவிடும் வேடத்தில் சிவாஜி கணேசன் மிளிர்கிறார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் புலவர் புலமைப்பித்தன் எழுதினார். 63.1978.12.02 இல் வெளியான, இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பில்,முற்றிலும் இலங்கையில் படப்பிடிப்பு செய்யப்பட்ட "பைலட் ப்ரேம்நாத்". சிங்கள நடிகை மாலினிக்கு ஜோடியாக சிவாஜி கணேசன் நடித்த வெற்றிப்படம். இலங்கையில் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி சாதனை படைத்த படம்.
64.1979.12.16 இல் வெளியான,சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த முதல் படம்"ஜஸ்டிஸ் கோபிநாத்". இப்படத்தில் சிவாஜிக்கு வளர்ப்பு மகனாக ரஜினிகாந்த் நடித்தார்.
65.1979.01.27 இல் வெளியான நடிகர் திலகத்தின் 200வது சொந்தப்படம். சிவாஜி புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் உருவான "திரிசூலம்".வசூலில் மக்கள் திலகம் எம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபனை பின்அன தள்ளிய இமாலய வெற்றி பெற்ற படம். சிவாஜி இப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்தார். கன்னடத்தில் ராஜ்குமார் நடித்த சங்கர் குரு படத்தின் தமிழாக்கமே திரிசூலம்.
66.1979.04.06 இல் வெளியான "கவரிமான்".சந்தர்ப்ப சூழ்நிலையால் மனைவியை கொலை செய்யும் வித்யாசமான வேடத்தில் சிவாஜி கணேசன் உணர்ச்சி பொங்க,ஜனரஞ்சக இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நடித்த படம்.
67.1981.01.14 இல் இலங்கையின் சிங்கள நடிகை கீதா குமாரசிங்கவுடன் ஜோடியாக நடித்த "மோகனப் புன்னகை.இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீதர்.
68.1981.05.01இல் மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் சிவாஜி நடித்த வெற்றிப்படம் "கல்தூண்". இப்படத்தில் பரமேஷ்வர கவுண்டராக சிவாஜி கணேசன் நடித்தார்.
69.1982.02.25இல் ..யாரும் எதிர்ப்பார்த்திராத ஓர் வித்யாசமான சிவாஜியை உருவாக்கிய "கருடா சௌக்யமா"படம்.கதாநாயகனாகவும், வில்லனாகவும் பரிமளித்த சுவாரஸ்யமான படம்.
70.1982.04.14.இளைய திலகம் பிரபு தன் தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து அறிமுகமான"சங்கிலி" வெளியானது.இப்படத்தில் பிரபுவின் பாத்திரம் "சர்தார் ராஜாளி"
69.1982.12.10 இல் வெளியான "நெஞ்சங்கள்". மேஜர் சுந்தர்ராஜனின் இயக்கத்தில் நடிகர் விஜயகுமார் தயாரிப்பில் , நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம்.
71.1983.09.24 இல் வெளியான "மிருதங்கச் சக்ரவர்த்தி "மிருதங்கச் சக்ரவர்த்தி சுசீந்திரம் சுப்பையா பிள்ளையாக சிவாஜி நடித்த வெற்றிப்படம்.
72.1983.11.01 இல் வெளியான "வெள்ளை ரோஜா" சிவாஜி கணேசன், பாதிரியார் ஜேம்ஸ்,காவல் துறை அதிகாரி அருண் என இரு வேடங்களில் நடித்த இமாலய வெற்றிப் படம்.பாதிரியார் சிவாஜி இறந்த பின் அருண் சிவாஜி கதறி அழும் காட்சி அபாரம்.
73.1984.09 .14 இல் வெளியான "தாவணிக்கனவுகள்".நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த முதல் வெற்றிப்படம்.இதில் சிவாஜி கெப்டன் சிதம்பரமாக நடித்தார்.
74.1985.01.26..இல் வெளியான "பந்தம்" மேஜர் ஏப்ரஹாம் வேடத்தில் பணக்கார சீமானாக மிடுக்கு நிறைந்த வேடத்தில் சிவாஜி நடித்தார். இப்படத்தில் தல அஜித்தின் மனைவி ஷாலினி சிவாஜிக்கு பேத்தியாக குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
75.1985.03.08 இல் சிவாஜியின் 250வது படமாக வெளியானது "நாம்இருவர்" இப்படத்தில் இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடித்தார்.
76.1985.08.15 சிவாஜி கணேசனின் திரைவாழ்வில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய, இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் திரைக்கு வந்து அமோக பாராட்டுக்களுடனும் ,இமாலய வெற்றியுடனும் சினிமாக்களம் கண்ட "முதல் மரியாதை ".முற்றிலும் மாறுபட்ட சிவாஜியை இப்படத்தில் பாரதிராஜா செதுக்கியிருந்தார். மலைச்சாமித் தேவர் என்ற வேடத்தில் கிராமத்தவராக சிவாஜி கணேசன் வாழ்ந்து காட்டிய கிராமிய மண்வாசனை கொண்ட படமிது. மலைச்சாமி என்ற பெயர் இப்படத்தில் ஒரே ஒரு தடவை மட்டுமே உச்சரிக்கப்பட்டது.முதல் மரியாதை
படத்தில் மிகச் சிறப்பாக,இயல்பாக நடித்த நடிகர் திலகத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.இந்திய மத்திய அரசு மீண்டும் சிவாஜி ரசிகர்களை ஏமாற்றி விட்டது.
அரசியல் கள சதியால் கடைசி வரை சிவாஜிக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என ஊடகங்கள் சில பட்டி மன்றமே நடத்தியன.
77.1985.09.20 மகரிஷி விஷ்வாமித்ர முனிவராக கலைச்சிம்மம் நடித்த "ராஜரிஷி".பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசத்தின் எழுத்தோவியத்தில் உருவான புராணத் திரையோவியம்.
78.1986.01.10 இல் வெளியான "சாதனை" பல இயக்குனர்களின் பரீட்சையில் சோதனை எழுதிய சிவாஜி கணேசன். இப்படத்தில் ராம்குமார் என்ற இயக்குனராக நடித்து சாதனை படைத்தார்.
79.1986.07.16.தாய்க்கொரு தாலாட்டு 1986.11.01 .லட்சுமி வந்தாச்சு 1971இல் வெளியான தேனும் பாலும் படத்திற்குப் பின் சுமார் 15 ஆண்டுகள் கடந்து சிவாஜியுடன் நாட்டியப் பேரொளி பத்மினி ஜோடியாக நடித்த படங்கள் இவைகள். 1977இல் வெளியான "தீபம்"படத்தில் கௌரவ வேடத்தில் சிவாஜிக்கு தாயாக ஓர் சிறிய காட்சியில் பத்மினி நடித்தார்.
80.1987.08.28 நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் சொந்தத் தயாரிப்பில் உருவான "கிருஷ்ணன் வந்தான்"படத்தில் சிவாஜி நடித்தார்.
81.1991.01.11 இல் வெளியான, யாகவா முனிவரின் கதையில் "வியட்நாம் வீடு" சுந்தரம் இயக்கிய "ஞானப்பறவை"என்ற படத்தில் முதல் முறையாக ஆச்சி மனோரமா சிவாஜிக்கு ஜோடியாக நடித்த படம்.இப்படத்தில் சிவாஜி ஓர் ஞானியாக நடித்தார்.
82.1992.10.25 தீபாவளியன்று கமலஹாசனுக்குத் தந்தையாக பெரியத் தேவர் கதாபாத்திரத்தில் சிவாஜியின் இயல்பான நடிப்பில் உச்சம் தொட்ட, கமலஹாசனின் சொந்தத் தயாரிப்பிலும்,கதை வசனத்திலும் உருவாகி வசூலில் அசுர சாதனை படைத்த "தேவர் மகன்"வெளியானது.
இப்படத்தில் சிறப்புற நடித்த சிவாஜிக்கு தமிழக அரசின் விருதும்,சிறந்த துணை நடிகருக்கான ஜூரி விருதும், 1992 ஆண்டிற்கான 40வது இந்திய தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இத்திரைப்படம் பல பிரிவுகளில் 5 விருதுகளையும் வென்றது. இத்திரைப்படம் ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்பட வெற்றியினை அடுத்து ஹிந்தியில்"விரஸத்" என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது.
83.1997.07.04 இல் இளைய தளபதி விஜய் நடிகர் திலகத்துடன் நடித்த ஒரே படமான "வன்ஸ்மோர்" வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடியது. நீண்ட இடைவெளிக்குப் சரோஜாதேவி இப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். இதற்கு முன் 1993இல் பாரம்பரியம் என்ற படத்திலும் சிவாஜிக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்தார்.
85.1997.08.15 இல் மலையாள மெகா ஸ்டார் மோகன்லால் சிவாஜியுடன் நடித்த "ஒரு யாத்ரா மொழி"(மலையாளம்)வெளியானது. இப்படத்தில் சிவாஜிக்கு மகனாக நடித்தார் மோகன்லால்.
86.1999.04.10 சுப்பர் ஸ்டார் ரஜினிக்கு தந்தையாக நடித்த "படையப்பா".இமாலய வெற்றி சாதனை படைத்த படம்.
87.1999.09.17 அன்று வெளியான நடிப்பின் சிகரத்தின் கடைசிப்படம் "பூப்பறிக்க வருகிறோம்". இப்படத்துடன் இறைவன் நடிப்புக் கலைமகனின் உயிரையும் பறித்து விட்டான். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கிடைத்த சிறப்பு கௌரவங்களும், பட்டங்களும்:
88."சிவாஜி "பட்டம் தந்தை பெரியார் வழங்கியது.
89."நடிகர் திலகம்"பட்டம்.பேசும் பட வார சினிமா சஞ்சிகை வாசகர் ஒருவர் கொடுத்தது.(கடைசி வரை அந்த ரசிகர் யாரெனத் தெரியவில்லை) சிவாஜிக்கு மிகப்பொருத்தமான, காலத்தால் அழியாத பட்டம்.கடைசி வரை இம்மகாக் கலைஞனுக்கு நிலைத்து நின்ற பட்டம்.
90.கலைமாமணி"தமிழக அரசு வழங்கியது.
91.பத்மஸ்ரீ,பத்மபூஷண்,தாதா ஸாகெப் பால்கே போன்ற விருதுகள் இந்திய மத்திய அரசு வழஙகியது.
92."கலைக்குரிசில்"இலங்கை தினகரன் நாளிதழ் வழங்கியது.
93.சிம்மக்குரலோன்"கே.பி.சுந்தராம்பாள் வழங்கியது.
94."டொக்டர் சிவாஜிகணேசன்"அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கியது.
95.2001ஆம் ஆண்டு இந்திய அரசு சிவாஜி கணேசனுக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்பு கௌரவம் ஆற்றியது.
96"செவலியே சிவாஜி "விருது பிஃரான்ஸ் தேசம் வழங்கியது.
97.1962 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு சிவாஜி கணேசனுக்கு அழைப்பு விடுத்து பெரும் கௌரவம் ஆற்றியது.அமெரிக்க தேசம் விருந்தினராக அழைத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசனே. அங்கே ஹொலிவுட் நடிகர்களான எலிசபெத் டெய்லர்,ரிச்சர்ட் பெர்ட்ன்,மார்லன் பிரண்டோ ,மர்லின் மன்றோ,பொப் ஹோப்,சால்ட்ன் ஹெக்ஸ்டன். ஜிம் கோனர்,ஜெக் லெம்மன் போன்ற கலைஞர்களை சந்தித்தார்.
98.இதே 1962,ஆம் ஆண்டு நயாக்ரா நகரத்தின் ஒரு நாள் மேயர் (நகரபிதா) பதவி வழங்கி தங்கச் சாவி ஒன்றும் இக் கலைமகனுக்கு பரிசாக வழங்கி பெரும் கௌரவம் வழங்கினர்.
99.நடிப்பின் நாயகனுக்கு இந்திய அரசின் உயர் விருதான "தாதா ஸாகெப் பால்கே"விருது கிடைத்ததை முன்னட்டு இலங்கை,சிங்கப்பூர்,மலேஷியா போன்ற தேசங்களில் சிவாஜி கணேசனுக்கு பாராட்டுவிழாக்கள் எடுத்தனர் அவரது ரசிகர்கள். அவ்வகையில் இலங்கை கொழும்பு BMICH மண்டபத்தில் 1997இல் "சிவாஜிக்கு முதல் மரியாதை"என்ற பெயரில் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.இவ்விழாவில் இலங்கை ரசிகர்கள் சார்பாக 51 பவுன் நிறை கொண்ட ஓர் தங்கக் கிரீடம் வடிவமைக்கப்பட்டு,நடிப்புச் சக்ரவர்த்தியின் சிரசில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்கள் சார்பில் முன்னாள் அமைச்சர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களால் சூட்டப்பட்டது. அம்மேடையில் அடியேனும் "பால்கே சிவாஜி"என வாசகங்கள் பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் ஒன்றை எனது கரங்களால் உலக மகா நடிகனின் மார்பில் பதித்து மகிழ்ச்சி கொண்டேன்.
100. 2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் நாள், இத்தரணியில் தனி நிகர் கொண்ட,தமிழ் சினிமாத்திரையுலகிற்கு தலைமகனாக இறைவன் கொடுத்த கலைமகன், நானிலமே. போற்றிய மகாக் கலைஞன், நடிப்பின் பிதாமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கலைமகளின் மடிவிட்டு, இறைவன் திருவடியை நாடி விட்ட துயர் நிறைந்த செய்தி ரசிகர்களின் நெஞ்சங்களை ரணமாக்கியது. "சிவாஜி கணேசன்"என்ற ஓர் யுகக் கலைஞனின் மறைவு இன்றளவிலும் பெரும் துயர் கொண்ட பேரிழப்பாகவே உள்ளது."மண்ணில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த சரித்திர நாயகன் விண்ணில் துருவ நட்சத்திரமாக ஒளி வீசுகின்றார்" மேற்கண்ட படங்கள் சிவாஜி கணேசன் இலங்கை வந்த போது எடுத்தது.
ஆக்கம் :எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM