(நெவில் அன்தனி)
நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டி நான்காம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் முடிவுடைந்தது.
முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 360 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
முதலாவது இன்னிங்ஸைவிட இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்தின் துடுப்பாட்டம் திறமையாக இருந்தபோதிலும் தோல்வியைத் தவிர்ப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை.
நியூஸிலாந்தின் 2ஆவது இன்னிங்ஸில் டெவன் கொன்வே, டொம் ப்ளண்டெல், க்லென் பிலிப்ஸ், மைக்கல் சென்டனர் ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் பெற்றனர்.
போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்றைய தினம் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து கடைசி 5 விக்கெட்களில் மேலும் 165 ஓட்டங்களைப் பெற்றது.
க்லென் பிலிப்ஸ், டொம் ப்ளண்டெல் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.
டொம் ப்ளண்டெல் 60 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவர் டிம் சௌதீயுடன் 7ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்த க்ளென் பிலிப்ஸ் 78 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
டிம் சௌதீ 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.
தொடர்ந்து மிச்செல் சென்ட்னர், அஜாஸ் பட்டேல் ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
எனினும் இருவரும் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இலங்கையின் வெற்றி உறுதியாயிற்று.
அஜாஸ் பட்டேல் 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் கடைசியாக ஆட்டம் இழந்த மிச்செல் சென்ட்னர் 67 ஓட்டங்களைப் பெற்றார்.
நேற்றைய தினம் க்ளென் பிலிப்ஸ் 61 ஓட்டஙகளையும் கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் அறிமுக வீரர் நிஷான் பீரிஸ் 170 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 139 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இப் போட்டியில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டிருந்தது.
கமிந்து மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 106 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 88 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் க்லென் பிலிப்ஸ் 141 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
மிச்செல் சென்ட்னர் (29), டெரில் மிச்செல் (13), ரச்சின் ரவிந்த்ரா (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: கமிந்து மெண்டிஸ் (182 ஆ.இ.), தொடர் நாயகன்: ப்ரபாத் ஜயசூரிய (18 விக்கெட்கள்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM