(நெவில் அன்தனி)
டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கமிந்து மெண்டிஸின் அபார துடுப்பாட்ட ஆற்றல்கள் தொடர்வதுடன் சாதனைக்கு மேல் சாதனைகளைக் குவித்தவண்ணம் உள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்த கமிந்து மெண்டிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதுமுதல் இதுவரை தான் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளிலும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்ளைப் பெற்ற முதலாவது வீரர் என்ற உலக சாதனையை வியாழன்று நிலைநாட்டியிருந்தார்.
அவர் எட்டு டெஸ்ட் போட்டிகளில் 9 தடவைகள் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஓர் இன்னிங்ஸில் தனது அதிகப்பட்ட எண்ணிக்கையை அவர் இன்று பதிவுசெய்தார்.
அத்துடன் தனது 13ஆவது இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்ததுடன் கடந்த 75 வருடங்களில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல் சாதனையை எட்டியவர் என்ற பெருமைக்கு உரித்தானார்.
அது மட்டுமல்லாமல் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தவர்கள் வரிசையில் அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சேர் டொனல்ட் ப்றட்மனின் சாதனையை சமன்செய்தார்.
இங்கிலாந்தின் ஹேர்பட் சட்க்ளிவ் (1925இல்), மேற்கிந்தியத் தீவுகளின் எவர்ட்டன் வீக்ஸ் (1945இல்) ஆகிய இருவரே மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தவர்களாவர். அவர்கள் இருவரும் தலா 12 இன்னிங்ஸ்களில் நிலைநாட்டிய இந்த அரிய சாதனை தொடர்ந்தும் நீடிக்கிறது.
சேர் டொன் ப்றட்மனின் இரண்டு சாதனைகளான குறைந்த (13) இன்னிங்ஸ்களில் 5 சதங்கள், 1000 ஓட்டங்கள் ஆகியவற்றை சமப்படுத்திய கமிந்து மெண்டிஸ் அதன் மூலம் ஆசியாவுக்கான புதிய சாதனைகளைப் படைத்தார்.
நியூஸிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ் ஆகியோர் குவித்த சதங்கள், ஏஞ்சலோ மெத்யூஸின் அரைச் சதம் என்பன இலங்கையை பலமான நிலையில் இட்டுள்ளன.
போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் தனது முதலாவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து இலங்கை, 5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது நிறுத்திக்கொண்டது.
முதலாம் நாளான வியாழக்கிழமையன்று தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களுடனும் திமுக் கருணாரட்ன 46 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
இரண்டாம் நாளன்று மூன்று இணைப்பாட்டங்களில் பங்காற்றிய கமிந்து மெண்டிஸ், மிகவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 250 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 182 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
4ஆவது விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸுடன் 107 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவுடன் 74 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் குசல் மெண்டிஸுடன் 200 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் பகிர்ந்து இலங்கையை அதிசிறந்த நிலையில் இட்டார்.
ஏஞ்சலோ மெத்யூஸ் 88 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
குசல் மெண்டிஸ் 149 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் க்லென் பிலிப்ஸ் 141 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 22 ஓட்டங்களைப் பெற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.
டொம் லெதம் (2), டெவன் கொன்வே (9) ஆகியோர் ஆட்டம் இழந்ததுடன் கேன் வில்லியம்சன் 6 ஓட்டங்களுடனும் இரா காப்பாளன் (Nightwatchman) அஜாஸ் பட்டேல் ஓட்டம் பெறாமலும் இருக்கின்றனர்.
பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 3 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் அசித்த பெர்னாண்டோ 5 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM