147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ்  புதிய  உலக சாதனை; டொன் ப்றட்மன், சுனில்கவாஸ்கரினாலும்கூடாமல் போனது

Published By: Vishnu

26 Sep, 2024 | 07:49 PM
image

(நெவில் அன்தனி)

டெஸ்ட் கிரிக்கெட்டின்  147 வருட வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை படைத்து வரலாறு ஏடுகளில் தனது பெயரைப் பதித்துக்கொண்டுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (26) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட்  கிரிக்கெட்  போட்டியில் அரைச் சதம் குவித்ததன் மூலமே 25 வயதான கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனையை படைத்தார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருக்கிறது.

இலங்கையின் முதலாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்ற கமிந்து மெண்டிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுமானது முதல் இதுவரை விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளிலும் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற முதலாவது துடுப்பாட்ட வீரர் என்ற அரிய சாதனையை நிலைநாட்டினார்.

அத்துடன் 8 டெஸ்ட் போட்டிகளில் 9 தடவைகள் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனைக்குரிய பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலி அரங்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதிலிருந்து இதுவரை விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளிலும் கமிந்து மெண்டிஸ் முறையே 

61 (எதிர் அவுஸ்திரேலியா - காலி), 

102, 164 (எதிர் பங்களாதேஷ் - சில்ஹெட்), 

92 ஆ.இ., 9 (எதிர் பங்களாதேஷ் - சட்டோக்ரம்), 

12, 113 (எதிர் இங்கிலாந்து - மென்செஸ்டர்), 

74, 4, (எதிர் இங்கிலாந்து - லோர்ட்ஸ்), 

64 (எதிர் இங்கிலாந்து - தி ஓவல்), 

114, 13 (எதிர் நியூஸிலாந்து - காலி), 

51 ஆ.இ. (எதிர் நியூஸிலாந்து - காலி) என ஓட்டங்களைப் பெற்று இந்த  சாதனையை நிலைநாட்டினார்.

இதுவரை அவர் 8 டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் துடப்பெடுத்தாடி 4 சதங்கள், 5 அரைச் சதங்கள் உட்பட 79.36 என்ற சராசரியுடன் 873 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார்.

இதேவேளை, இந்த டெஸ்ட் போட்டியில் அபார சதம் குவித்த முன்னாள் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தனது குழந்தைக்கு சமர்ப்பணமாக துடுப்பை இரண்டு கைகளிலும் ஏந்தி தாலாட்டு சமிக்ஞை செய்து தனது சதத்தைக் கொண்டாடினார்.

போட்டியின் முதலாவது ஓவரிலேயே பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டம் இழந்ததும் இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், அடுத்து களம் நுழைந்த தினேஷ் சந்திமால் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்ததுடன் இரண்டு இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியைப் பலப்படுத்தினார்.

இரண்டாவது விக்கெட்டில் திமுத் கருணாரட்னவுடன் 122 ஓட்டங்களைப் பகிர்ந்த தினேஷ் சந்திமால், அடுத்த விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸுடன் மேலும் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

208 பந்துகளை சந்தித்த தினேஷ் சந்திமால் 15 பவுண்டறிகளுடன் 116 ஓட்டங்களைப் பெற்றார்.

தனது 84ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தினேஷ் சந்திமால் 16ஆவது சதத்தைக் குவித்ததுடன் காலியில் அவர் பெற்ற 6ஆவது சதம் இதுவாகும்.

திமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களைப் பெற்றார்.

இதேவேளை, நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிவரும் ஏஞ்சலோ மெத்யூஸ் 166 பந்துகளில் 6 பவுண்டறிகள் அடங்கலாக  78 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

மறுபக்கத்தில் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய சாதனை வீரர் கமிந்து மெண்டிஸ் 56 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, காலி விளையாட்டரங்கில் 2000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த ஏஞ்சலோ மெத்யூஸ் மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்டத்தில் இலங்கை ஐந்தாம்...

2024-10-13 17:01:19
news-image

சகலதுறைகளிலும் கேர் பிரகாசிப்பு: இலங்கையுடனான போட்டியில்...

2024-10-13 04:26:05
news-image

பங்களாதேஷுக்கு எதிரான மகளிர் ரி20 உலகக்...

2024-10-13 04:23:14
news-image

இலங்கை மகளிர் அணி மிக மோசமாக...

2024-10-12 15:11:16
news-image

பாகிஸ்தானை 9 விக்கெட்களால் வீழ்த்திய அவுஸ்திரேலியா...

2024-10-12 01:08:44
news-image

20 வயதின்கீழ் ஆண்களுக்கான மத்திய ஆசிய...

2024-10-11 19:39:38
news-image

பாகிஸ்தானை இன்னிங்ஸால் வென்றது இங்கிலாந்து; வரலாறு...

2024-10-11 15:36:18
news-image

பங்களாதேஷை பந்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 8...

2024-10-10 23:19:28
news-image

ப்றூக் முச்சதம், ரூட் இரட்டைச் சதம்;...

2024-10-10 22:41:38
news-image

பின்கள வீரர்களின் தவறுகளாலும் கோல்காப்பாளரின் கவனக்குறைவாலும்...

2024-10-10 19:17:14
news-image

இலங்கை - மியன்மார் அணிகள் மோதும்...

2024-10-10 14:20:01
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ரி20 தொடருக்கு...

2024-10-10 01:23:03