விரைவில் பாதுகாப்பு செயலாளர் பதவி மாற்றமடையவுள்ளது. தற்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டு வரும்  கருணாசேன ஹெட்டியாராச்சி ஜெர்மன் நாட்டுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ள நிலையில்  ஜனாதிபதி புதிய செயலாளரை நியமிக்கவுள்ளார். 

பாதுகாப்பு அமைச்சின் கீழ்  பாதுகாப்புச் செயலாளராக கருணாசேன ஹெட்டியாராச்சி கடமையாற்றி வருகின்ற நிலையில் அண்மையில்  அவர் இருதய சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதை  அடுத்து அவரை குறித்த பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கி ஜெர்மன் நாட்டின் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். அடுத்த மாதம் நடுப்பகுதியில் இந்த மற்றம் ஏற்படவுள்ளது. 

இந்நிலையில் குறித்த பதவியில் மாற்றம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.அந்த வகையில் தற்போது புதிய பாதுகாப்பு செயலாளர் ஒருவரை நியமிக்க நிருவாக சேவையில் உள்ள சிலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக செயற்பட்டு வரும் ஜனாதிபதி ஆலோசகர் கபில வேதியரத்ன, மற்றும் யோசந்த கெடகொட உள்ளிட்ட சிலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆலோசனைக்கு அமைய விரைவில் புதிய பாதுகாப்பு செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.