ஹெரி புறூக் அபார கன்னிச் சதம்; அவுஸ்திரேலியாவின் வெற்றி அலைக்கு முற்றுப்புள்ளி வைத்தது இங்கிலாந்து

25 Sep, 2024 | 04:26 PM
image

(நெவில் அன்தனி) 

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட், ரிவர்சைட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹெரி புறூக் குவித்த கன்னி சதத்தின் உதவியுடன்  அவுஸ்திரேலியாவின் வெற்றி அலைக்கு  இங்கிலாந்து முடிவு கட்டியது. 

அப் போட்டியில் டக்வெர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து 46 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அவுஸ்திரேலியா 14 போட்டிகளில் தொடர்ச்சியாக ஈட்டிவந்த வெற்றி களுக்கு முடிவு கட்டப்பட்டது. 

2023 அக்டோபர் 16ஆம் திகதியிலிருந்து 2024 செப்டெம்பர் 21ஆம் திகதிவரை அவுஸ்திரேலியா 14 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றிருந்தது. 

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட தற்போதைய தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் முறையே 7 விக்கெட்களாலும் 68 ஓட்டங்களாலும் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றிருந்தது. 

இதற்கு அமைய தொடரில் 2 - 1 என அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. 

அப் போட்டியில் அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 305 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 37.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இரவு 7.35 மணியளவில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

ஆட்டம் தடைப்பட்டபோது டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 37.4 ஓவர்களில் 209 ஓட்டங்களாக இருந்தது. 

மழை தொடர்ந்து பெய்ததால் சுமார் 30 நிமிடங்கள் தடைக்குப் பின்னர் ஆட்டம் கைவிடப்பட்டு டக்வெர்த் லூயிஸ் முறைமைப்படி இங்கிலாந்து 46 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாக போட்டி தீர்ப்பாளர் அறிவித்தார். 

பில் சோலட் (0), பென் டக்கெட் (8) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க 3 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. 

இதன் காரணமாக அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், வில் ஜெக்ஸ், ஹெரி புறூக் ஆகிய இருவரும் துணிச்சலை வரவழைத்து அதிரடியில் இறங்கி 147 பந்துகளில் 167 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணியைப் பலப்படுத்தினர். 

வில் ஜெக்ஸ் 82 ஓட்டங்களுடனும்  ஜெமி ஸ்மித் 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (197 - 4 விக்.)

தொடர்ந்து  ஹெரி புறூக், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஹெரி புறூக் 110 ஓட்டங்களுடனும் லியாம் லிவிங்ஸ்டோன் 33 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 

பந்துவீச்சில் கெமரன் க்றீன் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 304 ஓட்டங்களைக் குவித்திருந்தது. 

ஸ்டீவன் ஸ்மித் (60), கெமரன் க்றீன் (42) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். 

தொடர்ந்து 30 ஓட்டங்களைப் பெற்ற க்ளென் மெக்ஸ்வெலுடன் 6ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்த அலெக்ஸ் கேரி, 44 ஓட்டங்களைப் பெற்ற ஆரொன் ஹார்டியுடன் 7ஆவது விக்கெட்டில் மேலும் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தார். 

அலெக்ஸ் கேரி 77 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 

பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும் இலங்கை...

2025-02-18 12:14:50
news-image

ஆகிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-17 18:05:27
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16