(இராஜதுரை ஹஷான்)
நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்தினைக் கூறும் அதேவேளை, அவரால் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முன்னெடுக்கப்படக்கூடிய மக்கள் நலனை மையப்படுத்திய சகல ஜனநாயக நடவடிக்கைகளுக்கும் அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துக்கொண்ட சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களும் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், அங்கு தேர்தலில் வெற்றியீட்டி ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதனையடுத்து புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றியதுடன், அவரைத்தொடர்ந்து இரண்டாம் இடத்தைப் பிடித்த சஜித் பிரேமதாஸ உரையாற்றினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
2024 ஜனாதிபதித்தேர்தலில் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு என்னுடைய வாழ்த்தினைக் கூறிக்கொள்கிறேன். எமது நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அவசியமான சக்தியும், தைரியமும் அவருக்குக் கிட்டவேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.
இந்த நாட்டுமக்களின் எதிர்பார்ப்புக்கள் தற்போது உங்கள்வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மக்களை மையப்படுத்திய, ஜனநாயக ரீதியிலான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் உங்களுக்கு வழங்கத்தயாராக இருக்கின்றது.
அதேபோன்று இந்த ஜனாதிபதித்தேர்தலில் என்மீதும், எமது தரப்பினர் மீதும், நாம் முன்வைத்த கொள்கையின் மீதும் நம்பிக்கைவைத்து எமக்காக வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். இத்தேர்தலை சுதந்திரமானதும், அமைதியானதுமான முறையில் நடாத்துவதற்குப் பங்களிப்புச்செய்த தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பினர், சுயாதீன கண்காணிப்பாளர்கள் உள்ளடங்கலாக சகல தரப்பினருக்கும் நன்றி கூறுகின்றேன்.
நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கும், சவால்களுக்கும் முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அவற்றிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது வெற்றிபெற்ற தரப்பினது மாத்திரமன்றி, நாட்டின் சகல தரப்பினரதும் பொறுப்பாகும். தேர்தல் செயன்முறை முடிவடைந்திருக்கிறது. அதனையடுத்து நாட்டை மீட்டெடுத்து, அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM