தென்பகுதிக் கடற்பரப்பில் படகொன்று கவிழ்ந்ததில் உயிருக்காகப் போராடி கடலில் தத்தளித்த பிரான்ஸ் பிரஜையொருவரை இலங்கை கடற்படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் ஹம்பாந்தோட்டை பகுதியிலுள்ள கொஹுலன்கல கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு இரு படகுகளுடன் விரைந்த இலங்கை கடற்படையினர் மார்க் அந்திரே பிரான்கோஸ் என்ற பிரான்ஸ் நாட்டவரை உயிருடன் மீட்டதுடன் அவர் பயணித்த படகையும் மீட்டுள்ளனர்.

திருகோணமலையிலிருந்து காலிக்கு கடற் பயணமாக பயணித்த பிரான்ஸ் நாட்டு பிரஜையின் படகு திடீரென கடலுக்குள் இழுக்கப்பட்டதில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.