(நா.தனுஜா)
ஜனாதிபதித் தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அணியில் ஓரங்கமாக இருந்ததையிட்டு மிகுந்த பெருமிதமடைவதாகவும், வெளியே இருந்து அனைத்தையும் விமர்சிப்பது இலகுவான விடயம். எனினும், அக்காலப்பகுதியில் பொறுப்பை ஏற்று, சவால்களை உரியவாறு கையாள்வதற்கு மட்டற்ற துணிவும் அர்ப்பணிப்பும் இன்றியமையாதது எனவும் வெளிவிவகார மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருக்கிறார்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்றைய தினம் (21) நடைபெற்ற நிலையில், இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமைச்சர் அலி சப்ரி அதில் மேலும் கூறியிருப்பதாவது:
இன்றைய தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அணியில் ஓரங்கமாக இருந்ததையிட்டு நான் மிகுந்த பெருமிதமடைகின்றேன். எமது நாடு மிக மோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையிலேயே அவர் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதற்கு முன்பதாக சகலரும் நம்பிக்கையை இழந்திருந்தனர். பெரும் எண்ணிக்கையான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். எரிபொருள், எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தார்கள்.
பணவீக்கம் கட்டுப்பாட்டை இழந்து உச்ச மட்டத்தை அடைந்தது. உரம், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தீவிர கரிசனையைத் தோற்றுவித்திருந்தது.
இருப்பினும், அதன் பின்னரான இரு வருட காலத்தில் ஏற்பட்ட நிலைமாற்றத்தை எவ்வகையிலும் மறுக்கமுடியாது. நாடு மீண்டும் உறுதிப்பாடடைந்தது. ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்தது. பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கள் வருமானத்தை மாத்திரமன்றி கையிருப்பின் அளவையும் அதிகரித்தது.
அதேபோன்று கடன் மறுசீரமைப்பின் ஊடாக எமது நாட்டுக்கு சுமார் 17 பில்லியன் டொலர் சலுகை கிடைக்கப்பெற்றமை மிகப் பெரும் அடைவாகும். இவற்றைத் தொடர்ந்து முன்னெடுப்பதன் ஊடாக இலங்கையினால் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியையும் சுபீட்சத்தையும் நோக்கிய வலுவான பாதையில் பயணிக்கமுடியும்.
வெளியே இருந்து அனைத்தையும் விமர்சிப்பது இலகுவான விடயமாகும். ஆனால் அக்காலப் பகுதியில் பொறுப்பை ஏற்று, சவால்களை உரியவாறு கையாள்வதற்கு மட்டற்ற துணிவும் அர்ப்பணிப்பும் இன்றியமையாதனவாகும். இப்போது திரும்பிப் பார்க்கையில், நாட்டுக்கு மிக அவசியமாக இருந்த வேளையில் நாம் பொறுப்பேற்று உரிய தீர்வினை வழங்கினோம் என்பதிலும், எமது நாட்டைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி எம்மிடமிருந்த அனைத்தையும் வழங்கினோம் என்பதிலும் நான் மிகுந்த பெருமிதமடைகின்றேன். தற்போது நாம் அடுத்த பகுதியை நோக்கி நம்பிக்கையுடனும் உறுதியுடனும் காத்திருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM