ரொபட் அன்டனி
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு நாளை 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் சுமார் 13 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை தேர்தல் வாக்களிப்பை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் நாடு முழுவதும் சுமார் 2 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்றனர்.
மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எத்தனை ஆயிரம் பொலிஸாரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் மிகவும் அமைதியான முறையில் தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு இடாப்பு
இம்முறை ஜனாதிபதித் தேர்தலானது 2024ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்புக்கு அமைய நடைபெறவுள்ளது. தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு புதிதாக சுமார் 10 இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் நடைபெற்றன. மேலும் கடந்த 12ஆம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு நாடு முழுவதும் 7 இலட்சத்து 36 ஆயிரத்து 586 பேர் தகுதி பெற்றிருந்தனர். அடுத்த 5 வருடங்களுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்யப் போகின்ற, தலைவிதியைத் தீர்மானிப்பதற்காக மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்களிக்க செல்லுங்கள்
வாக்காளர்கள் காலை வேளையிலேயே தமக்குரிய வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களிப்பில் ஈடுபடலாம். தேர்தலை மிகவும் அமைதியாகவும் சுயாதீனமாகவும் நடத்த சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாக்காளர்களைப் பொறுத்தவரையில் முதலில் வாக்களிப்பதற்கு தயாராக வேண்டும்.
வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளதா?
தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்கள் முதலில் 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் தமது பெயர் இருக்கின்றதா என்பதை பரீட்சித்துப் பார்ப்பது அவசியம். அதனை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்துக்குள் பிரவேசித்து தேசிய அடையாள அட்டை இலக்கத்தை சமர்ப்பிப்பதன் ஊடாக அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமன்றி சகல வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் தேர்தல் திணைக்களத்தினால் அனுப்பப்பட்டுள்ளன. அந்த வாக்காளர் அட்டையில் மக்கள் வாக்களிக்க வேண்டிய இடம் போன்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
தேசிய அடையாள அட்டை கட்டாயம்
வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும் போது நிச்சயமாக வாக்காளர் அட்டையை எடுத்துச் செல்வது வாக்களிப்பதற்கு இலகுவாக இருக்கும். அதேநேரம் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் மறக்காமல் அடையாள அட்டையை கொண்டு செல்வது அவசியமாகும். தேசிய அடையாள அட்டையுடன் மேலும் பல ஆவணங்கள் வாக்களிப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர்களுக்காக சமூக சேவை திணைக்களம் வழங்குகின்ற அடையாள அட்டை, மதத் தலைவர்களுக்கான ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை என்பனவற்றை பயன்படுத்தலாம். இவை எதுவுமே இல்லாவிடின் தேர்தல் திணைக்களத்திலிருந்துழ பெற்ற தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டை இல்லாவிடில் வாக்களிக்க முடியாது என்பதை கருத்தில் கொள்வது முக்கியம்.
வாக்களிப்பது எவ்வாறு?
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் போது மக்கள் மிகவும் கவனமாக வாக்களிக்க வேண்டும். வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்களும் அவர்களது பெயர்களுக்கு முன்னே அவர்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட சின்னமும் அதற்கு அருகில் வெற்றுப் பெட்டியும் இருக்கும். வாக்காளர் தான் வாக்களிக்க விரும்புகின்ற ஒருவேட்பாளருக்கு வாக்களிக்க முடியும். அவ்வாறு வாக்களிக்கும் போது 1 என்ற இலக்கத்தை வேட்பாளருக்கு அருகிலுள்ள பெட்டியில் இட்டுவாக்களிக்க வேண்டும். அல்லது புள்ளடி இட்டும் வாக்களிக்கலாம்.
மேலும் 38 வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச் சீட்டில் இருப்பதால் வாக்காளர் தனது இரண்டாம் தெரிவையும் மூன்றாம் தெரிவையும் வெளிப்படுத்தும் வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளருக்கு விருப்பு வாக்குகளையும் அளிக்கலாம்.
அப்படியாயின் தனக்கு முதலாவது பிடித்த வேட்பாளருக்கு 1 என்ற இலக்கத்தில் வாக்களித்துவிட்டு இரண்டாவது பிடித்த வேட்பாளருக்கு 2 என்ற இலக்கத்தில் வாக்களிக்கலாம். மேலும் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாயின் முதலாவது பிடித்த வேட்பாளருக்கு 1 என்றும் இரண்டாவது பிடித்த வேட்பாளருக்கு 2 என்றும் மூன்றாவது பிடித்த வேட்பாளருக்கு 3 என்றும் இலக்கத்தையிட்டு வாக்களிக்கலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென்றால் இலக்கங்களையே (அரபு இலக்கவரிசை) பயன்படுத்தவேண்டும். மாறாக முதலாவது பிடித்த வேட்பாளருக்கு புள்ளடியிட்டுவிட்டு இரண்டாவது பிடித்த வேட்பாளருக்கு இலக்கத்தை இட்டால் அந்தவாக்கு நிராகரிக்கப்படும். ஆனால் ஒருவருக்கு மட்டும் வாக்களிக்கவேண்டும் என்றால் 1 என்ற இலக்கத்தை இட்டும் வாக்களிக்கலாம். புள்ளடி இட்டும் வாக்களிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்புவாக்கின் மூலம்வாக்களிக்க முற்பட்டால் 1, 2, 3 என்று இலக்கத்தைத்தான் பயன்படுத்தவேண்டும். இதுதான் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு முறையாகும்.
எப்போது வாக்குகள் நிராகரிக்கப்படும்?
அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களைத்தவிர வாக்குச்சீட்டில் வேறு எதனையும் குறிப்பிடக்கூடாது. அவ்வாறு குறிப்பிடும் பட்சத்தில் அவை நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக பிரகடனப்படுத்தப்படும். மேலும் ஒரு வாக்காளருக்கு ஒன்று என்ற இலக்கத்தை இட்டு வாக்களித்து விட்டு இன்னுமொரு வேட்பாளருக்கு புள்ளடியிட்டால் அது நிராகரிக்கப்பட்டு விடும்.
அதேபோன்று ஒருவருக்கு புள்ளடி இட்டு விட்டு மற்றுமொருவருக்கு இலக்கத்தை இட்டு வாக்களித்தால் அந்த வாக்கும் நிராகரிக்கப்படும். எனவே வாக்காளர் தமது வாக்கைப் பயன்படுத்தும் போது துல்லியமாக வாக்களிக்க வேண்டும். விருப்பு வாக்குகளின்போது மூன்றுக்கு மேற்பட்டோருக்கு வாக்களித்தாலும் அந்த வாக்கும் நிராகரிக்கப்படும்.
மேலும் இரண்டு அல்லது மூன்று என்ற இலக்கங்களை மட்டும் இட்டு வாக்களித்தாலும் நிராகரிக்கப்படும். அதாவது விருப்பு வாக்கை பயன்படுத்த வேண்டுமானால் முதலில் 1 என்ற இலக்கத்தை இடவேண்டும். 1 என்ற இலக்கத்தை இட்டு வாக்களிக்காமல் நேரடியாக 2 என்ற இலக்கத்தை இட்டு வாக்களித்தால் நிராகரிக்கப்படும். எனவே இங்கு மிக விழிப்புடன் சரியான முறையில் வாக்களிப்பது அவசியம்.
வெற்றி பெறும் வேட்பாளர்
வாக்களிப்புகள் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படுவார். அளிக்கப்படுகின்ற வாக்குகளில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் கழிக்கப்பட்டு செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுகின்றவர் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார். ஒருவேளை எந்த வேட்பாளரும் 50 வீதமான வாக்குகளை பெறாவிடின் அதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
தவறாது வாக்களியுங்கள்
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தவறாமல் வாக்களிப்பது அவசியமாகும். மக்கள் இந்த ஜனநாயக செயற்பாட்டில் பங்கெடுத்து தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.
அதாவது அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யப்போகின்ற தலைவரை தெரிவு செய்யும் ஜனநாயக செயற்பாட்டில் மக்கள் தவறாமல் பங்கெடுப்பது தீர்க்கமானதாக இருக்கின்றது.
இலங்கையில் கடந்த 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை கொண்டுவரப்பட்டது. பின்னர் 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பிலும் அந்த முறை உள்ளடக்கப்பட்டது. 1982, 1988, 1994, 1999, 2005, 2010, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் இதன்று முன்னர் ஜனாதிபதித் தேர்தல்கள் இலங்கையில் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பானது 9ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கானதாக அமைந்துள்ளது.
மக்கள் தேர்தலில் தவறாமல் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று அமைதியான சுயாதீனமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தலில் வாக்களிப்பதற்கு தேவையான ஆவணங்களை கொண்டு செல்வது அவசியம். நாட்டின் பல பகுதிகளிலும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். முக்கியமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இம்முறை தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தேர்தல் முடிந்த பின்னர் தமது அறிக்கைகளை வெளியிடுவார்கள். பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் என பல்வேறு தரப்பினரும் கண்காணிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் தமக்கு வேண்டிய தலைவரை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கிறது. அந்த ஜனநாயக உரிமையை அமைதியான முறையில் வன்முறைகளுக்கு இடமளிக்காமல் மக்கள் பயன்படுத்த வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM