இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகளின் சுற்றுச்சூழல் சுத்தமாகப் பேணப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“நுளம்புகள் பெருகி வருவதால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களும் பரவி வருகின்றன. இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

“பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக ஆரம்பித்திருக்கும் நிலையில், அவற்றின் சுகாதாரத் தரம் குறித்து அறிவதற்காக நாளை மறுதினம் 28ஆம் திகதி மற்றும் 29ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்களில், பாடசாலைகளில் ஆய்வு நடத்துமாறு டெங்கு தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

“இந்த ஆய்வில், டெங்கு தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் மட்டுமன்றி, சுகாதார அதிகாரிகள், பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். விடுமுறைக் காலத்தில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் பழைய மாணவர்களின் பங்கேற்பில் பெரும்பாலான பாடசாலைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. என்றபோதும், அவை நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் உள்ளனவா என்று இந்தக் குழு ஆராயும்.

“போதுமான சுகாதார நடவடிக்கைகளைப் பேணாத பாடசாலைகளுக்கு ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்படும். அதன் பின்னரும் எதுவித முன்னேற்றமும் இல்லையென்று அறியப்பட்டால் பாடசாலை அதிபரை குற்றவாளியாக இனங்காணப்பட்டு விசாரணைக்கு முகங்கொடுக்க நேரும்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.