'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து வெளியிட்ட விமலின் 'சார்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

Published By: Vishnu

20 Sep, 2024 | 02:25 AM
image

தமிழ் திரையுலகில் யதார்த்தமாக நடித்து ரசிகர்களின் மனதில் டிஜிற்றல் யுக ஜெமினி கணேசனாக பதிந்திருப்பவர் நடிகர் விமல். இவர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சார்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி சிறப்பித்தனர்.

நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சார்' எனும் திரைப்படத்தில் விமல், 'பருத்திவீரன்' சரவணன், ஆர் கே விஜய் முருகன், சாயா கண்ணன், தயாரிப்பாளரும், நடிகருமான எஸ். சிராஜ், ரமா, 'ஆடுகளம்' ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இனியன் ஜே. ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். ஆசிரியர்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். சிராஜ் மற்றும் நிலோஃபர் சிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ''  எம்முடைய கருத்தியலுடன் தொடர்பு கொண்டு, எம்மால் ஏற்க தகுந்த படைப்பில் எம்முடைய பெயர் இடம்பெறுவது எமக்குத் தான் பெருமை. இந்த திரைப்படத்திற்காக நான் எம்முடைய பெயரை மட்டுமே வழங்கினேன்.

இதற்காக மரியாதை வழங்கிய படக் குழுவினருக்கு நன்றி. இந்த திரைப்படம் பாடசாலையில் மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்களின் நிலை குறித்து.. மூன்று வெவ்வேறு கால கட்டங்களில் விவரிக்கிறது. இந்த திரைப்படம் இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான திரைப்படம். மேலும் இந்த திரைப்படம் வெளியான பிறகு கல்வி குறித்த புதிய விவாதத்தை தொடங்கி வைக்கும் என நம்புகிறேன். இந்த திரைப்படமும், படத்தில் பங்கு பற்றிய நட்சத்திரங்களும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right