(நெவில் அன்தனி)
காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் தனது நான்காவது டெஸ்ட் சதத்தைக் குவித்து அசத்தினார்.
ஏழாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கமிந்து மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக பிரகாசித்து வருவதுடன் மற்றொரு உலக சாதனையை சமப்படுத்தியுள்ளார்.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 106 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் கமிந்து மெண்டிஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கை 300 ஓட்டங்கள் கடப்பதை உறுதிசெய்தார்.
கமிந்து மெண்டிஸ் 173 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 114 ஓட்டங்களைக் குவித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார்.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் விளையாடிய முதல் 7 டெஸ்ட்களிலும் ஒரு இன்னிங்ஸிலாவது 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களை 8 சந்தர்ப்பங்களில் பெற்று, பாகிஸ்தான் வீரர் சவூத் ஷக்கீல் கடந்த வருடம் ஏற்படுத்திய உலக சாதனையை சமப்படுத்தியுள்ளார்.
இதனிடையே சில்ஹெட் அரங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கமிந்து மெண்டிஸ் சதங்கள் குவித்ததுடன் மென்செஸ்டர், காலி ஆகிய அரங்குகளிலும் சதங்கள் குவித்துள்ளார்.
ஆனால், அவற்றில் காலியில் குவித்த சதமே சிறப்பு வாய்ந்தது என கமிந்து மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
'இது (காலி) எனது சொந்த ஊர். அத்துடன் நான் கல்வி கற்ற றிச்மண்ட் கல்லூரியும் இங்குதான் அமைந்துள்ளது' என முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் கமிந்து மெண்டிஸ் குறிப்பிட்டார்.
'இங்கு சதம் குவிக்க வேண்டும் என எனது உள்மனம் கூறிக்கொண்டே இருந்தது. நேர்மையாகக் கூறுவதென்றால் 100 ஓட்டங்களுடன் மாத்திரம் சந்தோஷம் அடைந்துவிடக் கூடாது. அதற்கும் அப்பால் கடந்து செல்லவேண்டும். துரதிர்ஷ்டவசமாக நான் ஆட்டம் இழந்துவிட்டேன்' என கமிந்து மெண்டிஸ் மேலும் குறிப்பிட்டார்.
இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள கமிந்து மெண்டிஸ் மொத்தமாக 809 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அவரது சராசரி வியத்தகு 80.90 ஆக அமைந்துள்ளது.
சேர் டொனல்ட் ப்றட்மனுக்கு அடுத்ததாக குறைந்த பட்சம் 10 இன்னிங்ஸ்களில் அதிசிறந்த சராசரியைக் கொண்டிருப்பவர் கமிந்து மெண்டிஸ் ஆவார்.
மேலும் தற்போதைய உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் 10 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள், 4 அரைச் சதங்களுடன் 748 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ள கமிந்து மெண்டிஸின் சராசரி 83.11 ஆகும். நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் ஜோ ரூட் மாத்திரமே 5 சதங்களைக் குறித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் 2022இல் விளையாடிய தனது அறிமுகப் போட்டியில் மத்திய வரசை வீரராக 6ஆம் இலக்கத்தில் 61 ஓட்டங்களைப் பெற்ற கமிந்த மெண்டிஸ், சுமார் 2 வருடங்களின் பின்னர் தனது மீள் வருகையில் 7ஆம் இலக்க வீரராக பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் அரங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து அசத்தினார்.
இதன் மூலம் 7ஆம் இலக்கத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் (102 மற்றும் 164) குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை கமிந்து மெண்டிஸ் நிலைநாட்டினார். அதனைத் தொடர்ந்து சட்டோக்ராம் அரங்கில் ஆட்டம் இழக்காமல் 92 ஓட்டங்களைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து மென்செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்ட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக 113 ஓட்டங்களைக் குவித்த கமிந்து மெண்டிஸ், லோர்ட்ஸ் அரங்கில் முதல் இன்னிங்ஸில் 74 ஓட்டங்களையும் ஓவல் அரங்கில் முதல் இன்னிங்ஸில் 64 ஓட்டங்களையும் பெற்றார்.
7ஆம் இலக்கத்தில் இவ்வாறாக அசத்தி வந்த கமிந்து மெண்டிஸ் இப்போது 5ஆம் இலக்கத்தில் தனது முதல் முயற்சியில் சதம் குவித்து சாதித்துள்ளார்.
இந்த மாதம் 30ஆம் திகதி தனது 26ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள கமிந்த மெண்டிஸ், இலங்கை கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பிரகாசித்து வரலாற்று நாயகனாக உயர்வார் என நம்பப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM