தேர்தலின் பின்னரும் வன்முறைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் எச்சரிக்கை !

18 Sep, 2024 | 05:35 PM
image

( நா.தனுஜா)

ஜனாதிபதித்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில் தேர்தலுடன் தொடர்புடைய பாரதூரமான வன்முறைச்சம்பவங்கள் மற்றும் சட்டமீறல்கள் தொடர்பில் தமக்கு 854 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம், இம்முறை தேர்தல் முடிவடைந்ததன் பின்னரும் வன்முறைகள் பதிவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதுமாத்திரமன்றி தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படும் வரை பொதுமக்கள் அமைதிகாக்கவேண்டும் எனவும், தேர்தல் முடிவுகள் யாதாயினும், அரச அதிகாரத்தை எந்தவொரு தரப்பினரும் முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கக்கூடாது எனவும் அந்நிலையம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் நாளை மறுதினம் (21) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்ட தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம், அதன் அவதானிப்புக்களை நேற்றைய தினம் வெளியிட்டது. இதுகுறித்து விளக்கமளிக்கும் நோக்கில் நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள ரேணுகா சிட்டி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:

ஜனாதிபதித்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தொடக்கத்தில் அது அமைதியான தேர்தல் செயன்முறை போன்று தென்பட்ட போதிலும் கடந்த இருவாரகாலத்தில் தேர்தல் முறைகேடுகள், வன்முறைச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து நிலைமை மோசமடைந்திருக்கிறது. இதுவொரு ஆரோக்கியமான போக்கு அல்ல.

குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதி முதல் கடந்த 17 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரையில் எமக்கு தேர்தலுடன் தொடர்புடைய பாரதூரமான வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் 125 முறைப்பாடுகளும், சட்டமீறல்கள் தொடர்பில் 729 முறைப்பாடுகளும், மொத்தமாக 854 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இருப்பினும் இவை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் முறையே 30, 4459 மற்றும் 4581 ஆகக் காணப்படுகின்றன.

அதேபோன்று தேர்தல் முறைகேடுகள், வன்முறைச்சம்பவங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் கொழும்பு, களுத்துறை, காலி, அநுராதபுரம், பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையான முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் பதிவாகியிருக்கின்றன. வடமாகாணத்தில் இவ்வாறான சம்பவங்கள் குறைவாகப் பதிவாகியிருப்பினும், அதற்குக் காரணம் அம்மாகாண மக்கள் தாமும் இத்தேர்தலில் உள்வாங்கப்பட்டிருப்பதாகக் கருதவில்லை என்பதே அவதானிப்பாக இருக்கின்றது. அதுமாத்திரமன்றி அங்கு சில தரப்பினர் ஜனாதிபதித்தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு தேர்தலில் மக்களைப் பங்கேற்கவேண்டாம் எனக்கூறுவது, ஒட்டுமொத்த தேர்தலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அடுத்ததாக தேர்தல் முறைகேடுகளில் பிரதானமாக அரச அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்கமுடிகின்றது. குறிப்பாக வாகன இறக்குமதித்தடை நீக்கப்படல், புதிதாக இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படல், எதிர்வரும் காலத்தில் நிதிக்கொடுப்பனவுகளை வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்படல் போன்றனவும் அதில் உள்ளடங்குகின்றன. இருப்பினும் இதற்குரிய முன்னேற்பாடுகளோ அல்லது நிதி ஒதுக்கீடுகளோ வரவு, செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அவதானிக்கமுடியவில்லை. எனவே இவற்றை நாம் தேர்தல் முறைகேடுகளாகவே கருதுகின்றோம்.

அதேவேளை ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் பிரதான தொலைக்காட்சி அலைவரிசைகளின் பிரதான செய்தி வேளையில் ஒதுக்கப்பட்டிருக்கும் நேரத்தின் அளவு மற்றும் வேட்பாளர்களால் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் விளம்பரங்களின் மொத்தப்பெறுமதி என்பனவும் எம்மால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. அதன்படி பெரும்பாலான தொலைக்காட்சி அலைவரிசைகளில் சகல வேட்பாளர்களுக்கும் சமத்துவமான வாய்ப்பு வழங்கப்படாமையை அவதானிக்கமுடிகின்றது.

இது இவ்வாறிருக்க இம்முறை தேர்தலின் பின்னரும் வன்முறைகள் ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக முதலாவதாக வாக்கு எண்ணப்பட்டு முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டவுடன் அத்தகைய அமைதியின்மை ஏற்படக்கூடும். இருப்பினும் தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படும் வரை பொதுமக்கள் அமைதிகாக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அதேபோன்று தேர்தல் முடிவுகள் யாதாயினும், அரச அதிகாரத்தை எந்தவொரு தரப்பினரும் முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23
news-image

மரியா காஸ்டிலோ - அருண் ஹேமச்சந்திர...

2026-05-09 20:47:28