ரொபட் அன்டனி
ஜனாதிபதி தேர்தல் பிரசார செயற்பாடுகள் இன்று நள்ளிரவுடன் நிறவடைகின்றன. பிரதான வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டிருக்கின்றனர். அவற்றில் அவர்கள் பொருளாதார கொள்கைகள், தேசிய விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர். தேர்தல் விஞ்ஞாபனங்களை மக்கள் சரியான முறையில் புரிந்துகொண்டு வாக்களிப்பதற்கு தயாராகி வருகின்றனர்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகிறது. காரணம், 2022ஆம் ஆண்டு நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் பின்னர் தேர்தல் நடைபெறுகிறது.
வரலாற்றில் முதல் தடவை…
வரலாற்றில் எப்போதும் இவ்வாறான ஒரு சூழலில் தேர்தல் நடைபெறவில்லை. சுதந்திரத்தின் பின்னர் முதல் தடவையாக இலங்கை 2022 ஆம் ஆண்டு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டது. அந்த நெருக்கடிமிக்க, கசப்பான, பொருளாதார சிக்கல் வாய்ந்த நெருக்கடிகளில் இருந்து இலங்கை தற்போது படிப்படியாக மீட்சியடைந்து வருகின்றது. இந்த பின்னணியிலேயே ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளனர். வறுமை ஒழிப்பு, அரசு ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, நலிவுற்ற மக்களுக்கான உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக வேட்பாளர்களின் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் பொருளாதார களநிலைகளை பார்க்கும்போது வெற்றிபெற்று அடுத்த ஜனாதிபதியாக வருகின்றவர் பல்வேறு சவால்களை எதிர்கொள்வார் என்பது உறுதியாகும்.
நீடிக்கும் சவால்கள்
காரணம் இலங்கை இப்போதுதான் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. இன்னும் பல சவால்கள் காணப்படுகின்றன. சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. அந்த சவால்களை எதிர்கொள்வதற்கு புதிய ஜனாதிபதி தயாராக வேண்டும். அடுத்து பதவிக்கு வரப்போகின்ற நாட்டின் தலைவர் இந்த விடயங்கள் தொடர்பாக ஒரு தெளிவான கொள்கையை கொண்டிருக்க வேண்டும். முக்கியமாக பல்வேறு சவால்கள் தொடர்ந்து காணப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டு நெருக்கடியை அடுத்து இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடி விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அதனடிப்படையில் தற்போது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு நிபந்தனைகளை பரிந்துரைகளை நாணய நிதியம் முன்வைத்திருக்கின்றது. பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்கள் மற்றும் நீண்டகால பொருளாதார திட்டங்கள், ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகள், அரச வருமான அதிகரிப்பு, நலிவுற்ற மக்களுக்கான உதவித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் நிபந்தனைகளை பரிந்துரைகளை நிறைவேற்றுவதுடன் இலக்குகளை அடைய வேண்டும்.
அடுத்த ஜனாதிபதி…
இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகின்றவர் நிச்சயமாக பல்வேறு விடயங்கள் தொடர்பாக நீண்ட ஆழ்ந்த அவதானத்தை செலுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஒப்பந்தத்தை எவ்வாறு முன்கொண்டு செல்வது? அதனடிப்படையில் பரிந்துரைகளை எவ்வாறு அமுல்படுத்துவது? இலக்குகளை எவ்வாறு அடைவது? என்பது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.
வாட்டும் வறுமை
2019 ஆம் ஆண்டு 30 இலட்சமாக காணப்பட்ட வறிய மக்களின் எண்ணிக்கை இன்று 70 இலட்சமாக உயர்வடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அரசாங்கம் உத்தியோபூர்வமாக இன்னும் இது தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிடவில்லை. எனினும் பொது அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வறிய மக்களை, நலிவுற்ற மக்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டுவது தொடர்பான வேலைத்திட்டங்கள் அவசியமாக உள்ளன. இது தொடர்பாக பிரதான வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். மாதாந்த கொடுப்பனவுகள் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது குறிப்பிடத்தக்களவில் பொருளாதார மீட்சி இடம்பெற்றாலும் கூட இந்த நலிவுற்ற மக்களை மேலும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் விரிவான ஆழமான நீண்டகால வேலைத்திட்டங்கள் அவசியமாகின்றன. வெற்றிபெறும் ஜனாதிபதி வேட்பாளர் நிச்சயமாக வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
பெருந்தோட்ட மக்களின் நிலை?
பெருந்தோட்ட பகுதிகளிலும் அதிகளவு மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டு இருக்கின்றனர் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்த பொருளாதார நெருக்கடி எரிபொருள் விலை உயர்வு, மின்சார கட்டண அதிகரிப்பு, போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு, வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பெருந்தோட்ட மக்களும் அதிகளவு பாதிக்கப்பட்டனர்.
தேயிலை துறை மற்றும் றப்பர் துறை ஊடாக வருடம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 2.5 பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. 2.5 பில்லியன் டொலர்கள் ஊடாக இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்கிறோம். அவ்வாறான முக்கியமான ஒரு பங்களிப்பை செலுத்துகின்ற தோட்ட தொழிலாளர்களுக்கு போதுமான சம்பளம் இல்லை, அதேபோன்று சுகாதாரம் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி விடயத்தில் அந்த மக்கள் பின்தங்கிய நிலையில் வாழ்கின்றனர். பெறுகின்ற சம்பளத்தை கொண்டு தமது குடும்பத்தின் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் நிலைமையில் மலையக மக்கள் இருக்கின்றனர். கல்வி சுகாதார மற்றும் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் சரியான முறையில் இடம் பெற வேண்டும்.
அந்த மக்களை வாழ்வாதார ரீதியில் ஊக்குவிக்க வேண்டும் என்பதுடன் அவர்களது வாழ்க்கை தரத்தை அதிகரிப்பதும் இன்றியமையாததாகும். அவர்களுக்கு சொந்தமான தனி வீடுகளை அமைத்துக் கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் வேட்பாளர்கள் எவ்வாறான கொள்கைகளை கொண்டுள்ளனர் என்பது மிக முக்கியமாகும். வெற்றிபெறுகின்ற வேட்பாளருக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்புகள் உள்ளன என்பதனை யாரும் மறுக்க முடியாது.
ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க என்ன செய்வது?
அதேபோன்று புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்துதல், புதிய முதலீடுகளை மேற்கொள்தல், வெளிநாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்தல், ஏற்றுமதி உற்பத்தியை அதிகரித்தல், ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் போன்றவற்றிலும் வேட்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக இலங்கையில் கடந்த சில தசாப்தங்களாகவே ஏற்றுமதி வருமானம் உயர்வடையாமல் காணப்படுகிறது. கிட்டதட்ட 12 பில்லியன் டொலர்கள் அளவிலேயே இலங்கை ஏற்றுமதி வருமானம் காணப்படுகிறது.
ஏற்றுமதி வருமானத்தில் இலங்கைக்கு பின்னால் இருந்த பல நாடுகளின் ஏற்றுமதி வருமானம் இன்று பாரியளவில் அதிகரித்திருக்கின்றது. ஆனால் இலங்கையினால் இன்னும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. இந்த விடயத்தில் நீண்டகால திட்டங்களும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களும் அவசியமாகின்றன. பூகோள உற்பத்தி செயற்பாடுகளில் பங்கெடுத்து ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயத்துறை நவீனமயமாக்கல்
அதேபோன்று உள்நாட்டில் விவசாயத்துறையை கட்டி எழுப்புவது அவசியமாகும். இலங்கையின் விவசாயத்துறை பங்களிப்பை 14 அல்லது 15 வீதமாக உயர்த்துவது அவசியமாகும்.
விவசாயத்துறை மொத்த தேசிய உற்பத்தியில் சிறந்த பங்களிப்பை பெரும் பட்சத்தில் நிச்சயமாக நாட்டின் பொருளாதாரம் எந்த ஒரு நெருக்கடி சூழ்நிலையை எதிர்கொள்ளும். எனவே விவசாய நவீனமயப்படுத்தல் திட்டத்தின் ஊடாக விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன் மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய சவாலும் புதிய வேட்பாளர் முன் காணப்படுகிறது.
சுற்றுலாத்துறை
தற்போது இலங்கைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இலங்கையில் இருக்கின்ற சுற்றுலாத்துறை சார்ந்த பிரதேசங்களை மேலும் மேம்படுத்துவதன் ஊடாக இந்த செயற்பாட்டில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த முடியும். இதில் இருக்கின்ற சவால்களை இடையூறுகளை கலைந்து சுற்றுலாத்துறையை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு புதிய வேட்பாளர் முன் பாரிய சவால் காணப்படுகிறது. இலங்கையில் சுற்றுலாத்துடைய நம்பி கிட்டத்தட்ட 20 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இலட்சம் பேர் தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர். எனவே சுற்றுலாத்துறையை நிலைபேண்தகு வகையில் கொண்டு செல்வதற்கும் அதன் இருப்பை சரியான முறையில் பேணுவதற்கும் அடுத்த ஜனாதிபதி அவதானம் செலுத்தவேண்டும்.
நாணய நிதியத்துடனான பயணம்
இலங்கையின் சர்வதேச நாணயத்துடனான பயணம் புதிய ஜனாதிபதிக்கு இருக்கின்ற மிக முக்கியமான சவாலாக காணப்படுகிறது. இலங்கை தற்போது சர்வதேச நாணயத்தை நாடி விரிவாக்கப்பட்ட நிதிவசதி ஒப்பந்தத்தை செய்து கொண்டிருக்கிறது. அதனை சிறந்த முறையில் தொடர வேண்டிய அவசியம் காணப்படுகிறது. அதனை இடைநிறுத்த முற்பட்டால் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே தற்போது ஏற்படுத்திக் கொண்டுள்ள அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். அதேபோன்று பொருளாதார மறுசீரமைப்புகளை செய்ய வேண்டும். அந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடம் இல்லை என்பதே யதார்த்தமாகும். எனவே அடுத்த ஜனாதிபதி இந்த விடயத்தில் எவ்வாறு காய்களை நகர்த்தப் போகிறார் என்பது இங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.
விஞ்ஞாபனங்கள்
வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களில் இந்த விடயங்கள் தொடர்பாக திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை சரியான முறையில் ஆராய்ந்து மக்கள் தீர்மானம் எடுக்கவேண்டும். அடுத்த ஜனாதிபதியாக போகின்றவர் நிச்சயமாக நாட்டின் டொலர் உள்வருகையை அதிகரிப்பதற்கும் அதன் ஊடான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அவதானம் செலுத்த வேண்டும். இவ்வாறு பல்வேறு சவால்கள், புதிய ஜனாதிபதி முன்காணப்படுகின்றன. அவற்றை அவர் எவ்வாறு எதிர்கொண்டு சவால்களை முறியடித்து திட்டங்களை வகுத்து நாட்டை அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டை மேம்படுத்த போகிறார் என்பதிலேயே இந்த நாட்டின் தலைவிதி தங்கியிருக்கின்றது. எனவே 21ஆம் திகதி நாட்டின் பொருளாதார தலைவிதி தீர்மானிக்கப்படபோகிறது என்பதே உண்மையாகும.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM