நாம் ஒரு நாடு என்ற வகையில் ஐக்கியப்பட்டு ஒன்றிணைந்து இருப்பது முக்கியமாகும்
எந்தவொரு குடும்பமும் பொறுப்புக்கூறப்பட முடியாத இழப்பொன்றால் துன்பப்படக்கூடாது
நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு ஆதரவு
மலையக தமிழ் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விசேட திட்டம்
ஊழல்களை தடுப்பதற்கு விசேட சட்டதிட்டங்கள் அமுலாகும்
சிறுபான்மையினரது உரிமைகளைப் பாதுகாத்து உறுதிப்படுத்தும் அதேசமயம் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை ஊக்குவிக்க அயராது பணியாற்றவுள்ளோம். தமிழ் சமூகத்தின் கவலைகளை நிவர்த்தி செய்வதில் நான் உறுதியாகவுள்ளேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீரகேசரியின் 'ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேளுங்கள் - 2024' எனும் தலைப்பில் ஆயிரக்கணக்கான மக்களால் தொடுக்கப்பட்ட வினாக்களில் முக்கிய வினாக்களுக்கு ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள பதில்கள் வருமாறு:
கேள்வி: தமிழ் சமூகத்தினர் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை நீண்ட காலமாக நாடி வருகின்றனர். உங்கள் அரசாங்கம் நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை எட்டுவதற்கு குறிப்பிடத்தக்க என்ன முயற்சிகளை எடுக்கவுள்ளது? மேலதிகமாக ஆட்சிக்கான சமஷ்டி முறைமையொன்றை ஏற்றுக்கொள்வது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: சட்ட நடவடிக்கையிலுள்ள ஒரு சிலரைத் தவிர அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு நான் வசதி செய்து கொடுத்தேன். நாங்கள் அடிப்படையில் அரசியல் கைதிகள் என்ற எண்ணக்கருவை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். நீங்கள் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் யாராக இருந்தாலும் அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் சம உரிமைகள் உடையவர்கள் என்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதை நான் எப்போதும் தெளிவுபடுத்தியுள்ளேன்.
நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் நாங்கள் இலங்கையர்களாக இருப்பதற்கு பெருமைப்பட வேண்டும். கடந்த காலங்களில் நீங்கள் எமது கிரிக்கெட் குழுவுக்கு ஆதரவாக அணி திரண்டது போன்று எமது பின்னணியை கருத்தில் கொள்ளாது ஒருவர் பின்னால் ஒருவர் அணிதிரள வேண்டும். நாங்கள் ஒரு நாடாக ஐக்கியப்படும் போது நாம் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்போம். நாம் பாரிய திறனைக்கொண்ட ஒரு நாடாகவுள்ளோம். எமது நாட்டிலான பிரிவினை எமக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை கண்டு வருகிறோம். பிரிவினை எம்மை பின்னால் மட்டும் வைத்திருக்கும். நாம் ஐக்கியப்பட்டிருக்கும் போது ஒரு நாடு என்ற ரீதியில் நாம் அடைய முடியாதது ஒன்றும் இல்லை.
அதனாலேயே எனது அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை ஊக்குவித்து தமிழ் சமூகத்தின் கவலைகளை நிவர்த்தி செய்வதில் உறுதியாகவுள்ளது. இலங்கை வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் அது அரசியல் செயற்கிரமமாக, பொருளாதார அபிவிருத்தியாக அல்லது சமூக ரீதியானதாக இருப்பினும் இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களும் உள்வாங்கப்படுவது முக்கியமாகும். சிறுபான்மையினரது உரிமைகளைப் பாதுகாத்து உறுதிப்படுத்தும் அதேசமயம் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை ஊக்குவிக்க அயராது பணியாற்றவுள்ளோம். கூட்டாட்சி முறைமை ஒன்றுக்காக என்ற ரீதியில் 13ஆவது சீர்திருத்தத்தின் கீழ் கூட்டாட்சி மாதிரியொன்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒற்றை ஆட்சியொன்றில் நம்பிக்கை கொண்டுள்ளேன். இலங்கையில் ஒவ்வொரு பாகமும் வேறுபட்ட தேவைகள் மற்றும் தேவைப்பாடுகளைக் கொண்டுள்ளது. இது நாம் சமூகங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் தமது எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளூராட்சி மட்டத்தில் தீர்மானம் எடுப்பதில் மேலதிக அதிகாரத்தைக் கொண்டிருப்பதைக் கருதுகிறது. ஆனால் நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. புவிசார் அரசியலும் மாறும் அதிகாரங்களும் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகில் காலநிலை மாற்றம், உலக பொருளாதார நகர்வுகள் என்பன எந்தவொரு நாட்டுக்கும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றன.
நாம் ஒரு நாடு என்ற வகையில் ஐக்கியப்பட்டு ஒன்றிணைந்து இருப்பது முக்கியமாகும். நாம் வெவ்வேறு பின்னணியைக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு தீவு என்ற வகையில் நாம் ஒரு நாடாக செயற்படும் எமது ஆற்றலை உறுதிப்படுத்துவதற்கும் எமது நாட்டைப் பாதுகாப்பதற்கும் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கும் எமது மக்களை வலுவூட்டுவதற்கும் நாம் எமது பகிரப்பட்ட அடையாளத்தையும் மையப்படுத்தப்பட்ட முறைமையையும் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
கேள்வி: உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்ற கவலை தரும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை எவ்வாறு மதிப்பீடு செய்யவுள்ளீர்கள்? வருங்காலத் தலைவராக மோசமான மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எவ்வாறு நிவர்த்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில்: வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல். இது முக்கிய ஒரு கேள்வியாகும். இது மேலும் மோதல் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் என்பன பற்றியதாகும். இது மனிதராக இருப்பது தொடர்பானதாகும். எந்தவொரு குடும்பமும் பொறுப்புக் கூறப்பட முடியாத இழப்பொன்றால் துன்பப்படக் கூடாது. போர் காலத்திலான வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என வரும் போது பொறுப்புக்கூறலினதும் நீதியினதும் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன். இந்த சம்பவங்கள் குறித்து வெளிப்படைத்தன்மையுடனும் எமது சர்வதேச கடப்பாடுகளுக்கு அமையவும் விசாரணைகளுக்கான பொறிமுறைகளை முன்னெடுக்கும் என்பதை எனது அரசாங்கம் உறுதிப்படுத்துவதில் நான் தீர்மானமாகவுள்ளேன். போருக்கு பின்னர் புதிய வாழ்க்கையை ஆரம்பித்துள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் ஒரு தொகை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களது பிரச்சினைகள் குறித்து பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
* உண்மை மற்றும் நல்லிணக்க சட்டத்தை செயற்படுத்தல்.
* காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான நவாஸ் ஆணையகத்தின் அறிக்கையை அமுல்படுத்தல்.
* தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை சுய தொழிலில் ஈடுபடுத்த அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான நிதி உதவியை வழங்குதல்.
இந்தப் படிமுறைகள் சம்பவங்கள் குறித்த விசாரணைகள் வெளிப்படைத் தன்மையுடனும் தேசிய மற்றும் சர்வதேச கடப்பாடுகள் என்பனவுக்கமையவும் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
நாட்டை மீட்பதற்கு இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான தேவைப்பாடு எமக்கு உள்ளது.
கேள்வி: மோதல் ஒன்று இல்லாத நிலைமையில் உங்கள் அரசாங்கம் குறிப்பாக பாதுகாப்பு வரவு – செலவுத் திட்டத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான அதன் பங்களிப்பைக் குறைக்கும் வகையில் குறைக்க உத்தேசித்துள்ளதா?
பதில்: இலங்கை சமாதானத்துக்கு திரும்புகையில் தேசிய பாதுகாப்பானது முன்னுரிமை கொடுக்கப்படும் ஒன்றாக தொடர்ந்து உள்ளது. இதன் பிரகாரம் நான் நமது நாட்டின் தற்போதைய தேவைப்பாடுகளுக்கு அமைவாக உள்ளதை உறுதிப்படுத்த எமது பாதுகாப்பு செலவினத்தை கவனமாக மதிப்பீடு செய்வேன். மோதல் இல்லாத நிலைமை அது தொடர்பில் எமது செலவினத்தை மீள் மதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பொன்றை வழங்குகின்ற போது அது தொடர்பான எந்தவொரு செலவினக் குறைப்பும் நாட்டின் பாதுகாப்பை கவனத்தில் எடுத்து மேற்கொள்ளப்படும்.
கேள்வி: பொது செலவினத்தைக் குறைக்கவும் வரிகளைக் குறைக்கவும் அரசாங்க பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்தும் உங்கள் நிலைப்பாடு என்ன? தற்போதுள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை தேவையானது என நீங்கள் நம்புகிறீர்களா அல்லது அந்தத் தொகையை குறைப்பதற்கு ஆதரவளிக்கிறீர்களா?
பதில்: நாம் எமது செலவினத்தை கவனமாக முகாமை செய்வதற்குள்ள தேவையை நாம் கடினமான வழியில் கற்றறிந்துள்ளோம். 2022ஆம் ஆண்டானது அரசாங்கத்தினால் நாம் செலவிடும் எதுவும் வேறு எங்கிருந்தும் நிதியிடப்பட வேண்டியுள்ளதன் முக்கியத்துவத்தை தெளிவாக ஞாபகப்படுத்துவதாக உள்ளது. இதன் காரணமாகவே நான் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களால் அளிக்கப்பட்டுள்ள சில வாக்குறுதிகள் குறித்து மிகவும் கவலையடைந்துள்ளேன். அவர்கள் வரிக்குறைப்பு மற்றும் மானியங்கள் குறித்து அவற்றைத் தாம் எவ்வாறு வழங்கப் போகிறோம் என்ற பொருளாதாரத் திட்டம் எதுவும் இல்லாமல் வாக்குறுதியளித்து வருகின்றனர். இது எம்மை 2022ஆம் ஆண்டு எதிர்கொண்ட நெருக்கடிக்குள் நேரடியாக பின்தள்ளும் என்பதில் சந்தேகமில்லை. எமது பொருளாதாரம் எமக்காக தொழிற்படுவதையும் இலங்கை மக்களுக்கு பணத்தை பிறப்பிப்பதையும் உறுதிப்படுத்துவதற்கு கடுமையாக பணியாற்றியுள்ளேன். கடனைப் பெறுவதாலும் இந்தக் கடனை பணத்தை உருவாக்குவதற்குப் பயன்படுத்தாது இருப்பதாலும் எதுவித அர்த்தமுமில்லை. நான் கடனை பணத்தை உருவாக்கப் பயன்படுத்தினேன். எமது முக்கிய தொழிற்றுறைகளுக்கு வலுவூட்டவும் நாடு என்ற ரீதியில் பணத்தை உருவாக்குவதை உறுதிப்படுத்தவும் சேவைகளில் மேலும் முதலீட்டை மேற்கொள்ளவும் வேண்டிய தேவையுள்ள நிலையில் நாம் எமது பொருளாதார மீட்சிக்காக நிதி ஒழுக்கவியல் மற்றும் பயனுறுதிப்பாடு ஆகியவற்றின் கலவையாகவுள்ள பொருளாதார சீர்திருத்தமொன்றை எதிர்பார்த்துள்ளோம்.
மக்கள் கடந்த இரு வருட காலமாக தியாகம் செய்துள்ளனர். அவர்கள் வரியை செலுத்தியதுடன் கடுமையாக பணியாற்றி எமது வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளனர். அவர்கள் அதற்குப் பதிலாக பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சிறந்த சேவைகள் என சிலதைப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. நான் ஒவ்வொரு குடும்பமும் தமது பிள்ளைகள் மிகச் சிறந்த சாத்தியமான கல்வியைப் பெறவுள்ளதையும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உட்பட அனைத்துக் குடும்பங்களும் உலகத் தராதர சுகாதார கவனிப்பை பெறுவதையும் அறிய விரும்புகிறேன். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படுபவைகள் தொடர்பான எனது திட்டம் இதுவாகும். எனது இந்தத் திட்டத்துடன் நான் பயனுறுதிப்பாட்டை மேம்படுத்தும் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவுள்ளேன். பொது பணியாளர்களை மேம்படுத்துவதற்கான வழிகளை நாம் ஆராயும் அதேசமயம் எனது அணுகுமுறையானது கடுமையான குறைப்புகளில் அல்லாது மாறாக உற்பத்தித்திறனை விரிவாக்கம் செய்வது மற்றும் அத்தியாவசியமற்ற செலவினங்களைக் குறைப்பது என்பனவற்றில் கவனம் செலுத்தும். சேவைகளைக் குறைப்பது எம்மை முன்னோக்கி கொண்டு செல்லப் போவதில்லை. நாம் செயல் திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களினூடாக வளங்களை அதிகப்படுத்தும் வழியைக் கண்டறியவுள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிகைக்கு அமைய மேலும் பயனுறுதிப்பாடு மிக்க பாராளுமன்ற முறைமையை உருவாக்க முடியும் என நான் நம்புகிறேன. ஆனால் இது தொடர்பில் கவனமாக பரிசீலிக்க வேண்டிய தேவையுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ஒவ்வொரு சமூகத்துக்கும் சரியான பிரதிநிதித்துவம் தேவையாகவுள்ளது என நான் நம்புகிறேன். இது ஜனநாயகத்தின் ஒரு தூணாகும். சிறுபான்மையினரின் குரல் செவிமடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்படும் நிலையிலுள்ளவர்களின் குரல் கேட்கப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சமூகங்களை சரியான முறையில் பிரதிநிதித்துவம் செய்து அவர்களின் நலன்களுக்காக செயற்படக் கூடியவர்களாக இருப்பதை நாமும் உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. கவனமாக பரிசீலனை செய்யாது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெறுமனே குறைப்பதால் சிறுபான்மையினரதும் எமது சமூகத்திலுள்ள பாதிக்கப்படக் கூடியவர்களதும் குரல்கள் வரையறுக்கப்படலாம்.
கேள்வி: நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதிலும் பாராளுமன்ற முறைமைக்கு ஆட்சியை மீள மாற்றுவதும் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: நான் அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் ஆதரவளிக்கிறேன். ஆயினும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றிலும் ஒழிப்பது என்பது மிகச் சிறந்த நடவடிக்கையாக அமையாது என நம்புகிறேன். நாம் அதிகார சமநிலையை உறுதிப்படுத்தி ஜனாதிபதி முறைமையை பொது மக்களின் தேவைகளுக்கு மேலும் பொறுப்புக் கூறுவதாக மற்றும் பொறுப்பேற்பதாக மாற்ற சமநிலையை உறுதிப்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் குறித்து கவனம் எடுக்க வேண்டியுள்ளது.
கேள்வி: நீங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டமைப்புக்குள் தொடர்ந்து பணியாற்றுவீர்களா? சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக செயற்படும் அதேசமயம் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க எவ்வாறு திட்டமிட்டுள்ளீர்கள்? மின்சாரம், தண்ணீர், எரிவாயு போன்ற பயன்பாட்டு சேவைகள் இலாபத்துக்காக செயற்பட வேண்டும் என்பதிலா அல்லது அவை வெறுமனே செலவினங்களை ஈடுசெய்வது என்பதிலா நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள், அத்துடன் பொது போக்குவரத்துகள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் என்பனவற்றிலான தவறான முகாமைத்துவம் குறித்து நீங்கள் எவ்வாறு எடுத்துரைக்கவுள்ளீர்கள்?
பதில்: ஆம். நான் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை பெற கடுமையாக பாடுபட்டேன். நெருக்கடி ஏற்பட்ட போது ஒவ்வொருவரும் பொறுப்பிலிருந்து விலகிச் சென்றனர். ஆனால் நான் இலங்கைக்கான உடன்படிக்கையொன்றைப் பெறுவதற்கு எனக்கு சர்வதேச தொடர்புகள் உள்ளதை அறிந்திருந்தேன். இது எமது நாட்டையும் எமது பொருளாதாரத்தையும் மீட்பதற்கு முக்கியமாகவிருந்தது. ராஜபக் ஷக்கள் எமது பொருளாதாரத்தை சரியச் செய்ததால் பணவீக்கம் காரணமாக உணவின் விலைகள் உயர்ந்ததுடன் எம்மால் எரிபொருள் போன்ற முக்கியமானவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் போனது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை எமக்கு ஒரு அத்திவாரத்தைத் தந்தது. வாழ்க்கைச் செலவினம் உயர்வாக உள்ளது. ஆனால் அது கீழிறங்கி வருகிறது. நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படாவிட்டிருந்தால் இது இன்னும் உயர்வாக இருந்திருக்கும். இது எமக்கு மிகவும் தேவையான பணத்தை வழங்கியது. நாம் சர்வதேச நாணய நிதியத்துடனான எமது கடமைகளை புறக்கணிக்கவோ அல்லது 2022ஆம் ஆண்டிலான குழப்பநிலைகளுக்கு மீளவும் செல்லவோ முடியாது. அதனால் எமது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டமைப்புக்குள் தொடர்ந்து பணியாற்றும். அதேசமயம் இது தொடர்பில் பொதுமக்களுக்கான நிவாரணங்கள் குறித்த எமது உறுதிப்பாட்டை சமநிலையுடன் கையாள்வதை நாம் உறுதிப்படுத்தவுள்ளோம். எமது நிதி நிலைமையை எமது நாட்டுக்குள் பணம் மேலும் வருவதை உறுதிப்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னெடுக்க நாம் எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் எமது முன்னேற்றத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையைப் பயன்படுத்துவது முக்கியமானதாகும். அதைச் சுற்றியே எனது பொருளாதரத் திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எமது தொழிற்றுறைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், ஏற்றுமதிகளை வலுப்படுத்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல், எமது விவசாயத்துறையின் பெறுமதியைக் கட்டமைத்தல் என்பனவே அவையாகும். அவை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு பெருமளவு பணத்தை எமது நாட்டுக்கு கொண்டு வந்துள்ளதுடன் அவை சிறப்பாக ஊதியம் தரும் தொழில்களை உருவாக்கி எமது மக்களின் சட்டைப் பைகளில் பணத்தை கொண்டு வந்துள்ளன. அது எமக்கு வரிகளைக் குறைக்க உதவவுள்ளது. அத்துடன் அது வாழ்க்கைச் செலவினத்தையும் குறைக்கவுள்ளது. எமது சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையானது அந்தத் திட்டத்தை நாம் பின்பற்றும் பட்சத்தில் அது நமக்காக மட்டுமே செயலாற்றும். எவராவது இந்த உடன்படிக்கையை மாற்ற அல்லது இல்லாது செய்யப்போவதாக கூறுவார்களானால், அது நாம் மீண்டும் பொருளாதார சரிவையும் உயர் பணவீக்கத்தையும் நீண்ட வரிசைகளுக்கும் திரும்புவதற்கு உத்தரவாதமளிக்கும். மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற பயன்பாட்டு சேவைகள் இலாபம் நோக்கி முன்னெடுக்கப்படக்கூடாது என நம்புகிறேன். ஆனால் அந்த சேவைகளை அனைவரும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதற்கு அவை செலவினங்களை ஈடு செய்வதாக செய்ய வேண்டியுள்ளது. அதிக செலவினத்தால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் மின்சாரம் போன்ற முக்கிய சேவைகள் அனைவரும் பெறக் கூடியனவாக இருப்பதை உநுதிப்படுத்த முன்னடியெடுத்து வைப்புகளை எடுக்க வேண்டி தேவை எமக்குள்ளது. பொது போக்குவரத்து மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிலான தவறான முகாமைத்துவம் என்பன தொடர்பில் பயனுறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு மீளவடிவமைப்பதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும். வரிகளினூடாக அரசாங்கத்துக்கு சொந்தமான சொத்துகளால் பாடுபட்டு பணியாற்றும் மக்கள் மானியங்களை இழப்பதை அனுமதிக்க முடியாது.
கேள்வி: மலையக தமிழ் சமூகம் குறிப்பிடத்தக்க சமூக பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் உங்கள் அரசாங்கமானது அவர்களது ஊதியங்கள், நில உரிமைகள், வீடமைப்பு, சுகாதார, கல்வி அபிவிருத்தி போன்ற அடிப்படை வசதிகளை பெற்றுக் கொள்ளல் என்பன தொடர்பில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு குறிப்பிடத்தக்க வகையில் என்ன நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது?
பதில்: இது குறிப்பிடவேண்டிய முக்கிய பிரச்சினையொன்றாகும். அதனால் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு மலையக தமிழ் சமூகத்தின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தும் திட்டம் ஒன்று என்னிடமுள்ளது. அது ஊதியங்களை அதிகரித்தல், காணி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் வீடமைப்பு, சுகாதார கவனிப்பு மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளை பெறுவதை மேம்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. நாம் அந்த சமூகம் நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் சமூக பொருளாதார சவால்கள் குறித்து நடவடிக்கை எடுக்க உறுதிப்பாட்டுடன் உள்ளோம்.
உதாரணத்துக்கு பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களினூடாக மலையக தமிழ் சமூகத்தின் பொருளாதாரக் வாய்ப்புகளை ஊக்குவிப்பதை அரசாங்கம் நோக்காகக் கொண்டுள்ளது. அது வீதிகள், சந்தைகள், பொருளாதார செயற்பாடுகளுக்கான வசதிகள், பிராந்தியத்துக்கு முதலீட்டை ஈர்த்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.
கல்வி மற்றும் திறன்களுக்கான பயிற்சி. கல்வி வசதிகளை விரிவுபடுத்தி மலையக இளைஞர்களை வலுவூட்ட தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தராமான கல்வியைப் பெறுவதை மேம்படுத்துவது, திறன்கள் அபிவிருத்தியினூடாக மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வறுமையைக் குறைக்கவும் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
சுகாதார கவனிப்பை மேம்படுத்தல்: மலையக சமூகத்துக்கான சுகாதார வசதிகளையும் சேவைகளையும் தரமுயர்த்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதையும் பிராந்தியத்துக்கான மருத்துவ உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் உறுதிப்படுத்துவதற்கு மருத்துவமனைகளையும் மருத்துவ நிலையங்களையும் நிர்மாணித்தல் மற்றும் புதுப்பித்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.
வீடமைப்பு மற்றும் வாழ்க்கை நிலைமைகள்: அரசாங்கமானது வீடமைப்பு திட்டங்களில் முதலீடு செய்தல் மற்றும் ஏற்கெனவேயுள்ள உட்கட்டமைப்பை தரமுயர்த்தல் என்பவற்றினூடாக வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு திட்டங்கள் உள்ளன.
சமூக பங்குபற்றல் மற்றும் வலுவூட்டல்: முக்கியத்துவம் மிக்க தீர்மானம் எடுக்கும் செயற்கிரமங்களில் சமூக பங்களிப்பை ஊக்குவித்தல் தந்திரோபாயத்தின் முக்கிய பாகமாகவுள்ளது. மலையக தமிழ் சமூகத்தின் வாழ்வைப் பாதிக்கக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களிலும் அவற்றின் நிறைவேற்றத்திலும் மலையக தமிழ் சமூகத்தின் குரலொன்று இருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் பணியாற்றி வருகிறது.
கலாசாரத்தை பேணல்: மலையக தமிழ் சமூகத்தின் கலாசார பாரம்பரியத்தை பேணுவதற்கும் ஊக்குவிப்பதற்கும் அதனை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும் வலியுறுத்தப்படுகிறது. இந்த பூர்வாங்க நடவடிக்கைகள் மலையக தமிழ் சமூகத்தின் தேவைகளை குறிப்பிடுவதுடன் பரந்தளவான அனைத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்தி தந்திரோபாயங்களினூடாக அவர்களது வாழ்க்கைத் தராதரத்தை மேம்படுத்துவதை பிரதிபலிக்கிறது.
கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உயர் வாழ்க்கைச் செலவினம் என்பவற்றிலிருந்து நாம் மீண்டு வரும் இந்த நேரத்தில் மக்கள் உயிர் வாழவும் அவர்கள் நிதியியல் ரீதியாக பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிப்படுத்துவது எமது கடமையாகும். எனது திட்டத்தின் கீழ் நான் முன்னெடுத்த வைகள் உணவு மற்றம் எரிபொருள் செலவைக் குறைத்து வருகிறது. உதாரணத்துக்கு 2022ஆம் ஆண்டிலான உச்சபட்ச விலையிலிருந்து பருப்பானது 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 300 ரூபாவாகவும் மாவானது 30 சதவீதத்தால் குறைந்து 207 ரூபாவாகவும் பால் மா 23 சதவீதத்தால் குறைந்து 950 ரூபாவாகவும் டீசல் 33 சதவீதத்தால் குறைந்து 307 ரூபாவாகவும் மின்சாரக் கட்டணங்கள் 50 சதவீத்தாலும் குறைவடைந்தன. மலைநாட்டிலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் விவசாய முறைமையை அறிமுகப்படுத்தி அவர்கள் மேலும் வருமானம் பெறுவதை உறுதிப்படுத்த திட்டமொன்று என்னிடமுள்ளது. இது எமது பெருந்தோட்டங்களிலான உற்பத்தித் திறன்களை மேம்படுத்தி ஊதியங்களை அதிகரிப்பதாற்கான வருமானங்களை உருவாக்கும். எனது திட்டத்தின் மூலம் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சட்டைப்பைகளை மேலும் பணம் வந்தடையும். இது ஒரு வாக்குறுதியாகும்.
கேள்வி: ஊழலானது நாட்டில் பல்வேறு துறைகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு எதிராக போராட உங்கள் அரசாங்கம் என்ன பொறிமுறைகளை ஸ்தாபித்துள்ளது? பொது நிதிகளைத் தவறாகக் கையாண்டு பொருளாதார நெருக்கடிக்கு பங்களிப்புச் செய்த அரசியல்வாதிகள் மற்றும் உத்தியோகதர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா, அதற்கு மேலதிகமாக அத்தகைய பொருளாதர குற்றங்களை மேற்கொண்ட தனிநபர்களை பொறுப்புக் கூறவைப்பீர்களா?
பதில்: நான் தலையைத் திருகத் திட்டமிட்டுள்ள பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக ஊழல் உள்ளது. எனது அரசாங்கம் விசாரணை செய்யவும் ஊழல் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் சுயாதீன அமைப்புக்களை ஸ்தாபிக்கவுள்ளது. எனது பார்வையின் கீழான தவறான செயற்பாடு குறித்து சகிப்புத்தன்மை காண்பிக்கப் போவதில்லை என்பதில் நான் தெளிவாகவுள்ளேன். நான் தவறான செயற்பாடுகள் மற்றும் ஊழலுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு எமது நீதிமன்றங்களதும் நீதிமுறைமையினதும் வலிமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதன் காரணமாகவே இலங்கை ஒருபோதும் காணாத பரந்தளவான ஊழலுக்கு எதிரான கட்டமைப்பான புதிய ஊழலுக்கு எதிரான சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நான் பொது வளங்களை கையாளும் அரசாங்கத்தின் எந்தப் பிரிவிலும் ஊழல் இடம்பெறுவதை குறைக்க பொது சொத்து முகாமைத்துவ சட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளேன். அரசியல்வாதிகள் மற்றும் உத்தியோகத்தர்களை விசேடமாக பொது நிதிகளை தவறாக கையாண்டு பொருளாதார நெருக்கடிக்கு பங்களிப்புச் செய்தவர்களை பொறுப்புக் கூற வைப்பதில் உறுதியுடன் உள்ளேன். பொருளாதார குற்றங்கள் என வரும்போது எவரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்லர். நீதியை அதன் போக்கில் செயற்பட அனுமதித்து பொது உத்தியோகத்தர்களை பொறுப்புக் கூற வைப்பதை நான் செயலில் காண்பித்துள்ளேன். அதற்கு முக்கிய அரசியல்வாதியான கெஹெலிய ரம்புக்வெலல்ல சம்பந்தப்பட்ட வழக்கு ஒரு உதாரணமாகும்.
உதாரணத்துக்கு நான் ரம்புக்வெல்ல ஏனைய எந்தவொரு பொது உத்தியோகத்தர் போலவும் விசாரணைக்குட்படுவதையும் ஏதாவது தவாறன நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருப்பின் நீதித்துறை ஆய்வை மேற்கொள்வதையும் உறுதிப்படுத்தியதன் மூலம் சட்ட செயற்கிரமங்களுக்கு ஆதரவளித்தேன். எனது அரசாங்கமானது பொறுப்புக்கூறல் கொள்கையை கடைபிடித்ததன் மூலம் சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்துவதையும் அரசாங்கத்துக்குள் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளது.
இந்த அணுகுமுறையானது ஆளுகையை வலுப்படுத்துவதற்கும் பொது உத்தியோகத்தர்களை அவர்களது நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக்கூற வைப்பதன் மூலம் பொது மக்களின் நம்பிக்கையை மீள ஏற்படுத்துவதற்குமான பரந்தளவான தந்திரோபாயமொன்றை பிரதிபலிப்பதாக உள்ளது. ஜனநாயக கொள்கைகளை பேணுவதற்கான எனது உறுதிப்பாட்டையும் அரசாங்கத்துக்குள் பொறுப்புக்கூறல் கலாசாரம் மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்குமான ஏற்பாடாக இது உள்ளது.
கேள்வி: மத ரீதியான சிறுபான்மையினர் ஒழுங்குமுறையிலான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். உங்கள் அரசாங்கம் மத நல்லிணக்கத்தை பாதுகாத்து அத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதைத் தடுக்கும் என்பதற்கு உங்களால் வழங்கப்பட முடியுமான உறுதிப்பாடுகள் எவை?
பதில்: மத நல்லிணக்கத்தை பாதுகாத்தல் என்னால் முன்னுரிமை கொடுக்கப்படும் ஒன்றாகும். மத சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் என்பவற்றைத் தடுக்க எனது அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன்.
அனைத்து மத சமூகத்தினரும் சட்ட ரீதியில் பாதுகாப்பு பெற்று அமைதியாக வாழக் கூடிய அவைரையும் உள்ளடக்கிய சமூகமொன்றை உருவாக்கவும் சமூக பூர்வாங்க முயற்சிகளுக்கும் பணியாற்றவுள்ளோம். இலங்கையில் மத நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் ஊக்கு விக்கவும் நான் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளேன்.
மதங்களுக்கிடையிலான கலந்துரையாடல்: புரிந்துணர்வு வேறுபட்ட மத சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வு மற்றும் சமாதானத்தை ஊக்குவிக்க மேற்கொள்ளும் பூர்வாங்க நடவடிக்கைளுக்கு ஆதரவளித்து பங்கேற்றுள்ளேன்.
மத தலங்களுக்கு ஆதரவு: எனது அரசாங்கம் மதத் தலங்களை பேணுவதற்கும் பல்வேறு மத விழாக்களைக் கொண்டாடுவதற்கும் ஆதரவளிக்கிறது.
தீவிரவாத்ததுக்கு கண்டனம்: நான் மதத் தீவிரவாதம் மற்றும் வன்முறை என்பவற்றுக்கு ன் கண்டனம் தெரிவிப்பதுடன் சகிப்புத்தன்மைக்கான செய்தியை வலுப்படுத்துகிறேன்.
சட்ட நடவடிக்கை: எனது அரசாங்கம் ஒடுக்குமுறைகளைத் தடுக்கவும் மத சுதந்திரங்களைப் பாதுகாக்கவும் கொள்கைகளை அமுலாக்கி வந்துள்ளது.
தாக்குதலுக்கு பதிலளிப்பு: மத ரீதியாக சமூகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கவனத்தில் எடுத்து விசாரணை செய்வதில் துரித நடவடிக்கை எடுக்கபப்பட்டது.
கல்வியியல் பிரசாரங்கள்: மத சகிப்புத்தன்மை மற்றும் மரியாதையை ஊக்குவிப்பதற்கான பிரசாரங்களுக்கு அரசாங்கம் ஆதரவு.
இந்த நடவடிக்கைகள் மத நல்லிணக்கம் தொடர்பில் ஊக்குவிப்பதற்கானதும் மத சமூகங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்குமான எனது உறுதிப்பாட்டை செயலில் காண்பித்துள்ளன.
கேள்வி: சட்டவிரோத போதைவஸ்து பாவனை மற்றும் ஆட்கடத்தல்கள் அதிகரித்துள்ளமை எமது சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது. இதில் பாதாள உலக குழுக்களும் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் அவற்றை முறியடிக்கவும் சட்டத்தின் ஒழுங்கை நிலைநாட்டவும் குறிப்பிடத்தக்க வகையில் என்ன நடவடிக்கைகளை நீங்கள் அமுல்படுத்தவுள்ளீர்கள்?
பதில்: சட்டவிரோத போதைவஸ்து பாவனை மற்றும் ஆட்கடத்தல்: சட்டவிரோத போதைப்பொருள் பாவனையும் ஆட்கடத்தலும் எச்சரிக்கை செய்யும் அளவுக்கு அதிகரித்துள்ளன. நான் இந்த விடயங்களுக்கு எதிராக போராட முழுமையான உறுதிப்பாட்டுடன் உள்ளேன். எனது அரசாங்கம் இது தொடர்பில் பலமான சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. 2025ஆம் ஆண்டில் நாம் போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்துவதிலிருந்து போதைவஸ்துக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது வரை பரந்தளவிலான போதைவஸ்துக்கு எதிரான கட்டளைத் தலைமையகத்தை ஸ்தாபிக்க சட்டமூலமொன்றை கொண்டு வரவுள்ளோம்.
கேள்வி: இலங்கையானது இலத்திரனியல், மருத்துவமனை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளடங்கலாக வெளிநாட்டுக் கழிவுகளால் கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இந்த சுற்றுச்சூழல் சாவல்கள் தொடர்பில் குறிப்பிடவும் காலநிலை மாற்ற விளைவுகளை தணிவிக்கவும் உங்கள் அரசாங்கம் என்ன காத்திரமான திட்டங்களை வைத்துள்ளது?
பதில்: ஒரு தீவு என்ற வகையில் ஏனைய பல நாடுகளை விடவும் காலநிலை மாற்ற விளைவுகளை அதிகளவில் நாம் எதிர்கொண்டு வருகிறோம். நாம் இது தொடர்பில் உள்நாட்டில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும். அத்துடன் நாம் உலக மேடையில் இலங்கை போன்ற நாடுகளின் உரிமைகளுக்காக பிரசாரம் செய்து வருகிறோம்.வெளிநாட்டுக் கழிவுகளை இந்நாட்டில்கொட்டுவதற்கு எதிராக எனது அரசாங்கம் கடுமையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளது. அதேசமயம் காலநிலை மாற்ற பிரச்சினைகளை தணிப்பதற்கான நீண்ட காலத் திட்டங்களிலும் இணையவுள்ளோம். 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கக்கூடிய சக்தி வளங்கள் மூலம் இலங்கையின் 70 சதவீத மின்சக்தித் தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதற்கான திட்டமொன்றும் உள்ளது.
கேள்வி: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை, குறிப்பாக உயர் திறமையான வேலைகளை உருவாக்குவதற்கான உங்கள் உத்திகள் எவை? இளைஞர்கள் மத்தியில் எத்தகைய திறன்கள் அவசியமானவை என நீங்கள் கருதுகின்றீர்கள்? அவற்றை மேம்படுத்துவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள்?
பதில்: குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது நான் அதிக முன்னுரிமை அளித்திருக்கும் விடயங்களில் ஒன்றாகும். அதற்கமைய அடுத்த 5 வருடங்களில் 100,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்களை உருவாக்குவேன் என நான் ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். அவையனைத்தும் உயர் ஊதியம் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்களாகவே காணப்படும். எமது நாடு தனித்துவத்திறமை வாய்ந்த இளைஞர்களைக் கொண்டிருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தின் நிலைமாற்றத்தை முன்னகர்த்திச்செல்வதற்கு அவர்களின் திறமையைப் பயன்படுத்துவதே எனது திட்டமாகும். எனது பொருளாதார செயற்திட்டமானது அதிக வருமானத்தை ஈட்டக்கூடியதும், திறன்மிக்க ஊழியர்களுக்கான உயர் ஊதியத்தை வழங்கக்கூடியதுமான முக்கிய துறைகளை நவீனமயப்படுத்தல், பொருளாதாரத்தை டிஜிட்டல் மயப்படுத்தல், உயர் பெறுமதியுடைய துறைகளை அபிவிருத்திசெய்தல் ஆகியவற்றை மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கின்றது. அது தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்துறைக் கேள்விக்கு ஏற்றவாறான கல்வித்திட்டம் என்பனவற்றையும் உள்ளடக்கியிருக்கும்.
கேள்வி: வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப - நடைமுறை திறன்களை உள்ளடக்கிய நவீனமயப்படுத்தப்பட்ட கல்வித்திட்டத்தைக் கட்டியெழுப்புவதற்கான உங்கள் திட்டம் என்ன?
பதில்: துரிதமாக மாற்றம்கண்டுவரும் உலகின் நோக்கங்களைப் பூர்த்திசெய்வதற்கு எமது நாட்டில் நடைமுறையில் உள்ள பாடசாலை கட்டமைப்பு முறைமை பொருத்தமானதன்று. நவீன வேலைச்சூழலில் ஏற்படக்கூடிய சவால்களுக்கு திறம்பட முகங்கொடுக்கக்கூடியவகையில் மாணவர்களைத் தயார்ப்படுத்துவதற்கு ஏதுவாக எமது கல்வி செயன்முறையை நவீனமயப்படுத்துவதற்கு நான் உத்தேசித்திருக்கிறேன். ஆகையினாலேயே எனது செயற்திட்டங்களின் ஓரங்கமாக பாடசாலை உட்கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கும், நவீன தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்றவாறு பாடவிதானத்தை மாற்றியமைப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பாடசாலை கல்வித்திட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தையும், நடைமுறைத்திறன்களையும் உட்புகுத்துவதிலும், டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதிலும் நான் விசேட கவனம் செலுத்துவேன். அதேபோன்று அக்கல்வித்திட்டத்தை முன்கொண்டுசெல்வதற்கு அவசியமான நிதியுதவிகளையும், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவையனைத்தையும் 2025ஆம் ஆண்டு அமுல்படுத்துவதற்கு நான் எதிர்பார்த்திருக்கிறேன். இது வேலைவாய்ப்பை விரிவுபடுத்துவதற்கும், எமது இளைஞர், யுவதிகள் எதிர்காலத்துக்கு ஏற்றவாறு தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் உதவும்.
பாடசாலைக் கல்வித்திட்டமானது இலகு திறன்கள், வாழ்க்கைத்திறன்கள் மற்றும் அவசியமான ஒழுக்கக்கோட்பாடுகளை உள்வாங்கக்கூடியவகையில் திருத்தியமைக்கப்படும். அத்தோடு மாணவர்கள் அவர்களது பல்கலைக்கழகக்கல்வியை 17 வயதில் தொடங்கக்கூடியவாறு பரீட்சைகள் மற்றும் பெறுபேறு வெளியீடுகள் முறைமையும் மாற்றியமைக்கப்படும்.
பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கிலக்கல்வியைப் போதிக்கக்கூடிய 'அனைவருக்கும் ஆங்கிலம்' என்ற செயற்றிட்டம் அடுத்த தசாப்தத்துக்குள் நடைமுறைப்படுத்தப்படும். நாடளாவிய ரீதியில் ஆங்கில ஆசிரியர்களுக்கான இடைவெளியை நிரப்புவதற்கான குறுங்காலத்திட்டமாக 2500 ஆங்கில ஆசிரியர்களைப் பணிக்கமர்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் 1000 பேர், பயற்சிக்கல்லூரிகளிலிருந்து 400 பேர், பட்டதாரிகள் 1100 பேர் என்ற ரீதியில் போட்டிப்பரீட்சையின் ஊடாக இந்த 2500 ஆசிரியர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். அதில் தெரிவுசெய்யப்படும் பட்டதாரிகளுக்கு, அவர்கள் பணிக்கமர்த்தப்படுவதற்கு முன்பதாக 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
அடுத்ததாக பாடசாலைப் பாடப்புத்தகங்களின் உள்ளடக்கங்கள் பாடவிதானத்துக்குப் பொருத்தமான சுவாரஸ்யமான விடயங்களை உள்வாங்கக்கூடியவகையில் மாற்றியமைக்கப்படும்.
மாணவர்களின் ஆளுமை மற்றும் நடத்தையை மேம்படுத்துவதுடன் அவர்கள் மத்தியில் புதிய விடயங்கள் தொடர்பான அறிவு, திறன்கள், புத்தாக்க சிந்தனை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்த்தெடுப்பதே கல்வியின் பிரதான நோக்கமாக இருக்கும்.
கேள்வி: கர்ப்பிணித்தாய்மார் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் எவை? குழந்தைகள் மத்தியில் அதிகரித்திருக்கும் மந்தபோசணை மற்றும் வளர்ச்சி குன்றல் ஆகியவற்றை சீர்செய்வதற்கு எத்தகைய திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?
பதில் சிறுவர்களே எமது நாட்டின் எதிர்காலம். சிறுவர்களுக்குப் பொருத்தமான ஆரோக்கியமான சூழலை உறுதிப்படுத்துவதற்கு எம்மால் இயன்ற சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். அதற்கமைய கர்ப்பிணித்தாய்மாரினதும், சிறுவர்களினதும் சுகாதார நலனை உறுதிப்படுத்துவதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை நான் கொண்டிருக்கிறேன். என்னுடைய திட்டங்களின் ஓரங்கமாக கர்ப்பிணித்தாய்மார், பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் போசணைத்தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களின் விலைகள் உயர்வடைந்திருக்கின்றன என்பதை நானறிவேன். எனவே நலிவடைந்த நிலையில் இருக்கும் குடும்பங்களின் நிதிசார் சுமையைக் குறைக்கும் வகையில் அவர்களுக்கு அவசியமான உணவு மற்றும் போசணை பதார்த்தங்களை வழங்குவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக எமது சிறுவர்களின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியில் ஏற்படக்கூடிய தாக்கம் உள்ளடங்கலாக அதிகரித்துவரும் மந்தபோசணை நிலையினால் எமது நாட்டின் எதிர்காலம் மீது ஏற்படக்கூடிய பாரதூரமான தாக்கத்தை நான் உணர்ந்திருக்கிறேன். அதனை உரியவாறு எதிர்கொள்வதற்கு,
1. இலக்கிடப்பட்ட செயற்திட்டங்கள் ஊடாக தாய்மாருக்கும், சிறுவர்களுக்கும் அவசியமான போசணை மிகுந்த உணவுகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
2. போசணைப்பதார்த்தங்கள் மற்றும் உரிய வழிகாட்டல்கள் உள்ளடங்கலாக கர்ப்பிணித்தாய்மாருக்கு அவசியமான ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்துவதுடன், எமது நாட்டின் சுகாதார சேவை வழங்கலை வலுப்படுத்துவேன்.
3. மந்தபோசணையையும், அதனால் சிறுவர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் இழிவளவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
கேள்வி: விவசாயத்தை இலாபகரமான மற்றும் நிலைபேறான துறையாக மாற்ற உங்கள் திட்டங்கள் என்ன? தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா, மிளவு, வெற்றிலை உள்ளிட்ட ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பீர்கள்?
பதில்: எமது நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயத்துறை மிகமுக்கிய வகிபாகத்தைக் கொண்டிருப்பதுடன், அதனை உலகளாவிய சந்தைக்கு விநியோகிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதற்கான வாய்ப்பும் எமக்கு இருக்கின்றது. விவசாய ஏற்றுமதிகளின் அளவை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கான வருமானத்தின் அளவு உயர்வடைவதுடன் மாத்திரமன்றி, இலங்கையின் விவசாயத்துறையில் உயர் ஊதியம் வழங்கும் தொழில்வாய்ப்புக்கள் உருவாவதற்கும் வழிவகுக்கும்.
அதற்கமைய எனது நிர்வாகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு அவசியமான உரம் உள்ளிட்ட சகல பொருட்களும் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வேன். அவ்வாறு உரத்தையும், ஏனைய விவசாய உபயோகப்பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காகவே விவசாயிகளுக்கு நேரடியாக 25,000 ரூபாவை வழங்கவிருக்கின்றேன். அதேபோன்று ஒவ்வொரு போகங்களுக்கும் நெல்லுக்கான நிலையான விற்பனை விலை அறிவிக்கப்படும்.
மேலும் நவீன விவசாய செயன்முறைக்கு அவசியமான விதைகள், உரம் மற்றும் நவீன உபகரணங்கள் என்பன விவசாயிகளுக்கு வழங்கப்படும். விவசாய உற்பத்திகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்வனவு செய்யத்தக்கவாறான விநியோகச்சங்கிலி முறைமை உருவாக்கப்படும். கிராமிய விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு ஏதுவான நாடளாவிய ரீதியிலான களஞ்சியப்படுத்தல் முறைமையும் அறிமுகப்படுத்தப்படும்.
அதுமாத்திரமன்றி ஏற்றுமதியை இலக்காகக்கொண்ட பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படாத அரசுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து 300,000 ஏக்கர் காணி ஒதுக்கப்படும்.
கேள்வி: பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்புணர்வு மற்றும் ஒடுக்குமுறைத்தாக்குதல்களைத் தடுப்பதற்கு உங்கள் நிர்வாகம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன? பாதிக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் குற்றவாளிகளுக்கான பொறுப்புக்கூறல் என்பனவற்றை எவ்வாறு உறுதிசெய்வீர்கள்?
பதில்: என்னுடைய நிர்வாகத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பும், கௌரவமும் எவ்வகையிலும் புறந்தள்ளப்படாது. அதேவேளை அவர்களுக்கு எதிரான வன்புணர்வு மற்றும் ஒடுக்குமுறைகளைத் தடுப்பதற்கு, அத்தகைய குற்றங்களுக்கான தண்டனை வழங்கல் செயன்முறையை விரைவுபடுத்தக் கூடியவகையில் சட்டங்களையும், அவற்றின் அமுலாக்க நடைமுறையையும் வலுப்படுத்துவேன். குற்றவாளிகளுக்கான தண்டனைகளை மேலும் இறுக்கமாக்குவதற்கும், நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பேன். அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினர் அதிலிருந்து மீட்சியடைவதற்கும், நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் அவசியமான சட்ட உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகள் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்கு ஆவன செய்வேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM