நாட்டு மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு ‘ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேளுங்கள்’ எனும் தலைப்பில் கேள்விகளை அனுப்புமாறு பொது மக்களிடம் கோரியிருந்தோம். அந்த வகையில் நாடளாவிய ரீதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான கேள்விகள் எமக்கு கிடைக்கப்பெற்றன. அதில் தொகுத்து அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க அளித்துள்ள பதில்கள்...
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பல்நோக்குத்திட்டங்கள் அவசியம். அரசிலயமைப்பூடான தீர்வு அதிலொன்றாகும். அந்த வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அவற்றை அடிப்படையாக்கொண்டு எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்க எதிர்பார்த்துள்ளேன் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வீரகேசரியின் 'ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேளுங்கள் - 2024' எனும் தலைப்பில் ஆயிரக்கணக்கான பொதுமக்களினால் தொடுக்கப்பட்ட வினாக்களில் முக்கிய சில வினாக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க அளித்துள்ள பதில்கள் வருமாறு,
கேள்வி : இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ் சமூகம் நீண்டகாலமாக முயற்சித்து வருகின்றது. இனங்களுக்கு இடையில் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உங்கள் நிர்வாகம் எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளும்? குறிப்பாக, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்வது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் : தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பல்நோக்குதிட்டங்கள் அவசியம். அரசிலயமைப்பூடான தீர்வு அதில் ஒன்று. புதிய அரசியலமைப்பை உருவாக்க நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அவற்றை அடிப்படையாக்கொண்டு எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அரசியலமைப்பினால் மாத்திரம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கவில்லை. அனைத்து மாகாணங்களிலும் உள்ள மக்கள் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் வருமானம் ஆகிய துறைகளில் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்களுக்கு தீர்வு காண வேண்டும்.
ஆகவே பொருளாதார அபிவிருத்தியை தேசிய நல்லிணக்கத்தின் ஒரு பகுதியாக கருதுகிறோம். அத்துடன் தமது மொழியில் செயற்படுவதற்கான உரிமை மற்றும் கலாசார அபிமானங்களை உறுதிப்படுத்த வேண்டியது அத்தியவசியமாகும். தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு முதற்கட்டமாக இவற்றை நாம் செயற்படுத்துவோம்.
கேள்வி: இறுதிக்கட்ட போரில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் குறித்து உங்களது நிலைப்பாடு என்ன? நீங்கள் ஆட்சிபீடமேறும் பட்சத்தில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டவிரோத படுகொலைகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை எவ்வாறு அணுகப்போகின்றீர்கள்?
பதில்: தற்போது இயங்கு நிலையில் உள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இடைக்கால செயலகத்தின் பணிகளை வினைத்திறனாக மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம். எவரையும் தண்டிக்க வேண்டும் என்ற நிலைக்கு அப்பாற்பட்டு நடந்தது என்ன என்பதை தெரிந்துகொண்டு எதிர்காலத்தில் அவ்வாறான நிலை ஏற்பாடாமல் செயற்படுவது மிகவும் முக்கியமானதாகும். தண்டனை அளித்தல் தொடர்பில் நீதிமன்ற செயற்பாடுகள் மூலமாக ஆராயப்படும்.அந்த அதிகாரம் அரசாங்கத்திடம் கிடையாது.நீதிமன்ற கட்டமைப்பிலேயே தங்கியுள்ளது.ஆகவே இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அனைத்து முன்னுரிமையும் வழங்குவோம்.
கேள்வி : யுத்த சூழ்நிலை இல்லாத பின்னணியில் வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கான செலவினத்தை குறைப்பதற்கு உங்களது நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பதில் : எமது நாடு தீவு என்பதால் தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட நிலைப்பாடு உள்ளது. தேசிய பாதுகாப்புக்கு தேவையான நிதி வழங்கல் மற்றும் அதன் பொறிமுறைகளை பலப்படுத்தல் என்பவற்றுக்கு தேவையான நவீன தொழில்நுட்ப திட்டங்களை செயற்படுத்துவோம்.அதற்கு இணையான வகையில் நிதி ஒதுக்கப்படும். நிதியை குறைப்பதா என்ற சர்ச்சைக்காட்டிலும் தேசிய பாதுகாப்புக்கு போதுமான நிதியை ஒதுக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். தேசிய பாதுகாப்பு என்பது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்று பொருட்கோடல் வழங்க முடியாது.
தாய்நாட்டின் பாதுகாப்பு நாட்டின் சகல பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்பான பொறிமுறை அவசியமாகும்.நவீன செயற்றிட்டங்களுக்கு அமையவாக நிதி ஒதுக்குவது எமது நிலைப்பாடாகும்.
கேள்வி : அரசதுறை செலவினங்கள் மற்றும் வரிகளைக் குறைப்பதை இலக்காக்கொண்டு அரச ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் நீங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன? 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசியம் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது இந்த எண்ணிக்கையைக்குறைப்பதற்கான நகர்வுகளை நீங்கள் மேற்கொள்வீர்களா?
பதில் : எமக்கு சிறந்த அரசசேவை அவசியம். இருப்பினும் இன்று அதற்காக செலவு செய்யும் நிதி பாரியளவிலானது. அரசசேவையின் மனிதவளம் மற்றும் நிதி வளம் என்பன வீண்விரயமாகும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.ஆகையினால் விசேடமாக அரசசேவையை வினைத்திறனாக்குவதற்கு அவதானம் செலுத்தியுள்ளோம்.
இருப்பினும் தற்போது சேவையில் உள்ளவர்களை நீக்கப்போவதில்லை.ஏனெனில் அவர்களது குடும்பம் இந்த சம்பளத்திலேயே வாழ்கின்றது. ஆகவே பொருளாதாரத்துக்கு அரச செலவுகளை தாங்கிக்கொள்ளும் வகையிலான மூலோபாயத்திட்டங்களை வகுத்துள்ளோம். அவற்றை செயற்படுத்துவோம். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு நாம் விரும்புகின்றோம்.இருப்பினும் 225 பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும்போது ஓர் இனக்குழுமத்தின் பிரதிநிதிகள் அதில் உள்ளடங்குவார்கள். ஆகவே தற்போது எண்ணிக்கையைக் குறைப்பது பிரச்சினைக்குரியதாக அமையும்.
கேள்வி : நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி மீண்டும் பாராளுமன்ற ஆட்சி முறைமைக் கொண்டுவருவது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் : நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அடிப்படையாகக்கொண்ட நிர்வாகத்தைக் காட்டிலும் பாராளுமன்ற முறைமையை முன்னிலைப்படுத்திய நிர்வாகம் மிகவும் சிறந்தது என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.அவ்வாறான நிர்வாக முறைமை எமது அடிப்படை எதிர்பார்ப்பாகும். இருப்பினும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் விகிதாசார தேர்தல் முறைமை ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாகும்.பாராளுமன்றத்தில் பலமான நிர்வாகத்தை உருவாக்குவதற்குத் தேவையான அடிப்படையான தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தல் மற்றும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்துச்செய்தல் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.
கேள்வி: நீங்கள் வெற்றியீட்டினால் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தின்கீழ் தொடர்ந்து செயற்படுவீர்களா?
பொதுமக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கும் அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளையும் பூர்த்திசெய்வதில் எவ்வாறு சமநிலையைப் பேணுவீர்கள்? மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு போன்ற பயன்பாட்டு சேவைகள் இலாபமீட்ட வேண்டும் அல்லது செலவுகளை ஈடுகட்ட வேண்டும் ஆகிய இரண்டில் உங்களது அபிப்பிராயம் என்ன?
பதில் : இல்லை, சர்வதேச நாணய நிதியத்தினால் எடுகோள்களுக்கு அமைய எமது கடன் சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 92 சதவீதமாகவும் அடிப்படை கணக்குகளின் இருப்புகளை 2.3சதவீதத்தை அடுத்த ஆண்டில் கடைபிடிக்க வேண்டும்.இவை எமது பொருளாதாரத்தின் முக்கிய இலக்குகாகும்.அத்துடன் பொருளாதார மீட்சியில் கருத்திற்கொள்ளப்படவேண்டிய முக்கிய விடயமாகும்.
அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான எமது தொடர்புகள் எமக்குள்ள மக்களாணை மற்றும் பொறுப்புகளில் உள்ளடங்கியுள்ளன. முதன்மை கணக்குகளை பேணுவதில் மாத்திரம் அவை மட்டுப்படுத்தப்படுவதில்லை.
அதற்கு அப்பாற் சென்று தேசிய உற்பத்திகளின் சதவீதத்தை பேணுவதும் நாட்டின் கடன் சுமையை குறைப்பதும் நாட்டுக்கு நன்மை பயக்கும். அதேவேளை அரச நிறுவனங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யும் போது நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியமாகும். கேந்திர நிலையங்களை அரச கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்ல எதிர்பார்த்துள்ளோம்.
கேள்வி: மலையக தமிழ் சமூகம் குறிப்பிடத்தக்க சமூக பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. அவர்களின் சம்பளம், நில உரிமைகள், வீடுகள், சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு போன்ற அடிப்படை வசதிகளுக்கான அணுகலை மேம்படுத்த உங்கள் நிர்வாகம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்?
பதில் : காணி உரிமையை அவர்களுக்கு வழங்கவேண்டும். அதற்கான கருத்திட்டத்தை நாம் செயற்படுத்துவோம். அதேபோன்று வாழ்க்கைச்செலவுக்கு ஏற்றவாறு நியாயமாக சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும். அதனை முன்னிறுத்தி நாம் செயற்படுவோம். ஊழல், மோசடிகளால் நிறைந்த சுகாதாரத்துறைக் கட்டமைப்பு இன்றளவிலே வீழ்ச்சியடைந்துள்ளது. ஆகவே சுகாதாரக்கட்டமை ப்பை மறுசீரமைப்போம். கல்வி போக்குவரத்து ஆகிய சேவைகளின் கிடைப்பனவு மக்களின் வருமானத்துக்குத் தக்கவாறு அமையக்கூடியவகையில் அதனை செயற்படுத்துவோம்.
கேள்வி: நாட்டில் பல்வேறு துறைகளில் ஊழல் மோசடிகள் மேலோங்கியிருக்கின்றன. அதனை எதிர்த்துப்போராட உங்கள் நிர்வாகம் எத்தகைய வழிமுறைகளை கையாளும்?
பதில் : எமது நாட்டின் ஊழல், மோசடிக்கு அரசியல்வாதிகளே வழிசமைக்கிறார்கள்.ஆகவே ஊழல் மோசடியை இல்லாதொழிக்கவேண்டுமாயின், ஊழல் மோசடிகளற்ற அரசியல் தலைவர்களை உருவாக்கவேண்டும்.
ஜனாதிபதி, பிரதமர் ஊழல் செய்யாவிடின் அதிகாரிகள் ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள்.அது ஊழல் மோசடியை இல்லாதொழிப்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கேள்வி : சிறுபான்மையினர் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதுடன் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர். உங்கள் நிர்வாகம் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் என்றும் உங்க ளால் உத்தர வாதம் அளிக்க முடியுமா?
பதில் : இன, மத, மொழி, கலாசார ரீதியாக ஏதேனும் நெருக்கடியோ அல்லது பாதிப்பு ஏற்படுமாயின் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய ஆணைக்குழு ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்க்கிறேன்.
கேள்வி : இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை குறிப்பாக உயர்திறமை யான வேலைகளை உருவாக்குவதற்கான உங்கள் உத்திகள் எவை? இளைஞர்கள் மத்தியில் எத்தகைய திறன்கள் அவசியமா னவை என நீங்கள் கருதுகின்றீர்கள்? அவற்றை மேம்படுத்து வதற்கு எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள்?
பதில் : அரசதுறைக்கு வெளியிலேயே நாம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். நாட்டில் இவ்வளவு காலமாக அரசதுறையில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கலாம் என்ற நிலைப்பாடே நிலவி வந்துள்ளது. ஆனால், உண்மையில் அரச தலையீட்டுடன் கூடிய அரசசார்பற்ற பொருளாதாரத்தையே கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் புதிய தலைமுறைக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது மற்றும் அதற்கு அப்பால் தொழில்முனைபவர்களை உருவாக்குவது எமது எதிர்பார்ப்பாகும். இலட்சக்கணக்கான தொழில்முயற்ச்சியாளர்களை உருவாக்க அபிவிருத்தி வங்கிகளை அமைப்பதே எமது முதன்மை நடவடிக்கையாகும்.
வீரகேசரியின் 'ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேளுங்கள் - 2024' எனும் தலைப்பில் ஆயிரக்கணக்கான மக்களால் தொடுக்கப்பட்ட வினாக்களில் முக்கிய வினாக்களுக்கான பதிலை மின்னிதழில் வாசிக்க https://mypaper.lk
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM