13இன் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப்பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச அபிவிருத்திக்காக சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு - சஜித் பிரேமதாச

18 Sep, 2024 | 04:02 PM
image

நாட்டு மக்­களின் பிரச்­சி­னைகளை ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் கவனத்­திற்கு கொண்­டு­வரும் பொருட்டு ‘ஜனா­தி­பதி வேட்­­பா­ளர்­க­ளிடம் கேளுங்­கள்’­ எனும் தலை­ப்பில் கேள்­வி­களை அனுப்­பு­மாறு பொது மக்­க­ளிடம் கோரி­யி­ருந்தோம். அந்த வகையில் நாட­ளா­விய ரீதி­யி­லி­ருந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான கேள்­வி­கள் எமக்கு கிடைக்கப்­பெற்­றன. அதில் தொகுத்து அனுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச அளித்­துள்ள பதில்கள்...

•அரச நிறுவனங்களில் குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி இல்லை

•புதிய அரசியலமைப்பின் கீழ் தற்போதைய அரசாங்க முறைமை பாராளுமன்ற முறையாக மாற்றப்படும்

•நாணய நிதிய இணக்கப்பாட்டில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

•மலையக மக்களின் நல்வாழ்வுக்கான நேர்மறையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம்

ரே நாட்டுக்குள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு தற்போதைய அரசியல் முறைமையை மாற்றுவதே தமது கொள்கையாகும் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை 13ஆவது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த தமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் கட்டமைக்க அபிவிருத்தி செய்ய கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிசெய்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டை ஏற்பாடு செய்வோம் என்றும், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பாதுகாப்பிற்கான நிதி ஒதிக்கீடானது அவசியமற்ற விடயங்களில் மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். 

வீரகேசரியின் 'ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேளுங்கள் - 2024' எனும் தலைப்பில் ஆயிரக்கணக்கான மக்களால் தொடுக்கப்பட்ட வினாக்களில் முக்கிய சில வினாக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச வழங்கியுள்ள பதில்கள் வருமாறு : 

கேள்வி : இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் சமூகம் நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. இனங்களுக்கிடையில் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு உங்கள் நிர்வாகம் எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளும்? குறிப்பாக சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்வது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன? 

பதில் : மதத் தலைவர்கள், பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து முறையாக கருத்துக்களைப் பெற்று தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க அர்ப்பணிப்புடன் உள்ளோம். இந்த செயல்முறையில் எமது கொள்கை தற்போதைய அரசியல் முறைமையை ஒரே நாட்டுக்குள் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதாகும். புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை 13ஆவது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அரசியலமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஒருபோதும் ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. 

கேள்வி : இறுதிகட்டப் போரில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டிருக்கும் பொறுப்பு கூறல் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன? நீங்கள் ஆட்சிபீடமேறும் பட்சத்தில் மனிதகுலத்துக்கு எதிரான மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்ட விரோத படுகொலைகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை எவ்வாறு அணுகப் போகின்றீர்கள்? 

பதில் : தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு அவற்றின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவோம். பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும்.  மேலும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக முதலீடு செய்ய விசேட சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படும்.  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் கட்டமைக்கவும் அபிவிருத்தி செய்யவும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிசெய்வதற்கு ஒரு சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டை ஏற்பாடு செய்வோம். மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன் சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் கொண்டதாக அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தையும் விரிவுபடுத்துவோம்.

கேள்வி : நாட்டில் போர் சூழ்நிலை இல்லாத பின்னணியில் வரவு – செலவு திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கான செலவீனத்தைக் குறைப்பதற்கு உங்களது நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? 

பதில் : யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பாதுகாப்பிற்கான நிதி ஒதிக்கீடானது பாதுகாப்பு தேவைக்கு தேவையான விடயங்களில் மாத்திரம் மேற்கொள்ளப்படும் மற்றும் அவசியமற்ற விடயங்களில் மேற்கொள்ளப்படமாட்டாது. 

கேள்வி : அரச துறை செலவீனங்கள் மற்றும் வரிகளைக் குறைப்பதை இலக்காகக் கொண்டு அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் நீங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன? 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசியம் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? அல்லது இந்த நடவடிக்கைகளைக் குறைப்பதற்கான நகர்வுகளை நீங்கள் மேற்கொள்வீர்களா? 

பதில் : தேசிய அரசாங்கம் நிறுவப்படும் பட்சத்தில் அமைச்சர், பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்திற்கு ஆற்றலை வழங்கும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் இரத்துச் செய்யப்படும். தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டாலும் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பிலான வரையறை ஏற்புடையதாக இருக்கும். பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான தரங்களையும் கோட்பாடுகளையும் நிலைநாட்டுவதற்கும் பொதுமக்களின் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி முதல் சட்டமாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கமுறைக் கோவையை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர்களுக்கு நியமனங்கள் வழங்கும்போது தங்கள் அமைச்சுகளின் அதிகார வரம்பிற்குட்பட்ட அரசு மற்றும் அரை அரசு நிறுவனங்களில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்படமாட்டாது.

கேள்வி : நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி, மீண்டும் பாராளுமன்ற ஆட்சி முறைமையைக் கொண்டு வருவது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன? 

பதில் : நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் தற்போது காணப்படும் சமகால அரசாங்க முறைமை பாராளுமன்ற முறைமையாக மாற்றப்படும்.

கேள்வி : நீங்கள் வெற்றியீட்டினால் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தின் கீழ் தொடர்ந்து செயற்படுவீர்களா? பொது மக்களுக்கான நிவாரணத்தை வழங்கும் அதே வேளை, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதில் எவ்வாறு சமநிலையைப் பேணுவீர்கள்? 'மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு போன்ற பயன்பாட்டு சேவைகள் இலாபமீட்ட வேண்டும் அல்லது செலவுகளை ஈடுகட்ட வேண்டும்' ஆகிய இரண்டில் உங்கள் அபிப்பராயம் என்ன? மேலும் பொதுப் போக்குவரத்து சேவை மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை என்பவற்றின் முறையற்ற நிர்வாகத்தை எவ்வாறு சீரமைக்கப்போகின்றீர்கள்? 

பதில் : சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி பொது நிதி ஒழுக்கத்தை வலுப்படுத்தி வருமானம், ஆரம்பக் கணக்கு மீதி மற்றும் கடன் தொடர்பான இலக்குகளை அடைவது கடினமாகும். ஆனால் அவசியமான சீர்திருத்தங்களை தொடர்ந்தும் செய்வோம். எவ்வாறாயினும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதை உறுதிப்படுத்தும் தற்போதைய திட்டத்திற்கு திருத்தங்களை முன்வைத்து இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம். சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் வருவாய் அதிகரிப்பில் கவனம் செலுத்தினாலும் அது அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் போதுமான கவனம் செலுத்தவில்லை. எனவே, வீணான அரச செலவுகளையும் ஊழலையும் கட்டுப்படுத்துவதே எங்கள் பொருளாதார பார்வையின் நோக்கமாகும்.  சுற்றாடலுக்கு உகந்த, நவீன பேருந்துகள், புகையிரதங்கள் இலத்திரனியல்மயமாக்கல், இலகு புகையிரத முறைமை மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தால் இயங்கும் பல்வகை பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்கி வினைத்திறனை மேம்படுத்தல் மற்றும் போட்டித்தன்மையை ஊக்குவிக்க இலங்கை போக்குவரத்து சபைக்கு ஒரு இலக்கு நோக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்  மூலம் தனியார் துறை போக்குவரத்து சேவைகளுடன் போட்டியிட்டு சேவை வழங்கும் திறனை அடைய முடியும்.

கேள்வி : மலையக தமிழ் சமூகம் குறிப்பிடத்தக்க சமூக, பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. அவர்களின் சம்பளம், நில உரிமைகள், வீடுகள், சுகாதாரம், மற்றும் கல்வி மேம்பாடு போன்ற அடிப்படை வசதிகளுக்கான அணுகலை மேம்படுத்த உங்கள் நிர்வாகம் அடுத்த 5 ஆண்டுகளில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்? 

பதில் : இரண்டு நூற்றாண்டுகளாக மலையக தமிழ் சமூகம் இலங்கைக்கு வழங்கிய பெரும் பங்களிப்பை நாம் அங்கீகரிக்கிறோம். அவர்கள் அனுபவித்த கட்டமைப்பு ரீதியான புறக்கணிப்பைக் கருத்தில் கொண்டு இந்தச் சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்த நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நாம் உணர்கிறோம். இதற்காக பின்வரும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம் : 

தோட்டத்துறையின் அனைத்து சுகாதார வசதிகளையும் தேசிய சுகாதார அமைப்புகளுடன் ஒருங்கிணைத்தல். தோட்டப்புற சமூகங்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டம் நியாயமான மற்றும் நீதியான முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தல். தோட்டத் தொழிலாளர்களை காணிக்குச் சொந்தமான சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான அரசாங்கக் கொள்கையை அறிமுகப்படுத்தி அமுல்படுத்துதல். பயிர்ச்செய்கை நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு மற்றும் தொழில்முனைவர் நடவடிக்கைகளுக்காகத் தோட்டங்களுக்குள் உள்ள பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டங்களைச் சார்ந்த குடியிருப்பாளர்களுக்கு பகிர்ந்தளித்தல். தோட்டப் பகுதிகளில் குடியிருப்பவர்கள் தற்போது பயிர் செய்து கொண்டிருக்கும் காணிகளுக்கு அரசாங்கத்தின் கொள்கை முறைப்படி உறுதிகளை வழங்கல். தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட உரிமையாளர்களுக்கு கட்டுப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு முழுமையான பிரஜையாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்கும் பரவலாக்கப்பட்ட அரச சேவைகளுக்கு சமமாக பிரவேசிக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்தல். தோட்டங்களைச் சார்ந்த குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான உறுதிகளுடனான காணிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுத்தல்.

கேள்வி : நாட்டில் பல்வேறுதுறைகளில் ஊழல், மோசடிகள் மேலோங்கியிருக்கின்றன. அதனை எதிர்த்துக் போராட உங்கள் நிர்வாகம் எத்தகைய வழிமுறைகளைக் கையாளும்? பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? மேலும் இது போன்ற பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பீர்களா? 

பதில் : வலுவான ஊழல் எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், தற்போதைய சட்டக் கட்டமைப்பின் அமுலாக்கத்தை வலுப்படுத்துவதன் மூலமும் நீதி வழங்கல் துரிதப்படுத்தப்படும். திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்கும், நாட்டின் நிர்வாக அமைப்பில் ஊடுருவியுள்ள ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு வலுவான திட்டம் முக்கிய அம்சமாக இருக்கும். ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்காக அரசியல் தலையீடுகள் இல்லாத சுயாதீன பொது வழக்குத் தொடுநர் அலுவலகத்தை அமைப்பது சட்டத்தின் இலகு திருத்தத்தின் மூலம் அவசர அடிப்படையில் மேற்கொள்ளப்படும். அரச கொள்வனவு வெளிப்படையாகவும், ஊழலற்றதாகவும், திறமையாகவும் இருப்பதை உறுதி செய்ய பொதுக் கொள்வனவு சட்டத்தை நிறைவேற்றுவோம்.

கேள்வி : சிறுபான்மையினர் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதுடன், பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர். உங்கள் நிர்வாகம் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் என்றும் உங்களால் உத்தரவாதமளிக்க முடியுமா? 

பதில் : கருணை, அன்பு, சமநிலை மற்றும் பரிவு ஆகியவற்றைப் பரப்பும் நேர்மையான சமூகத்தை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். பௌத்த மதத்தினைப் பாதுகாக்கும் அதே வேளையில் பிற மதங்களைப் பின்பற்றுபவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்கள் விரும்பும் மதத்தை கடைபிடிக்கவும் வழிபடவும் உள்ள அடிப்படை உரிமையை உறுதி செய்யவும் நாங்கள் செயல்படுவோம். அறநெறிப் பாடசாலைகள் மற்றும் மத கல்வியை வலுப்படுத்த முழு அரச ஆதரவு வழங்கப்படும். தங்கள் சொந்த மதத்தைத் தவிர பிற மதங்கள் பற்றிய போதுமான புரிதலை சிறுவர்களுக்கு வழங்க பாடசாலை பாடத்திட்டத்தில் மதங்களுக்கிடையேயான கல்வியை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி : சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு என்பன அதிகரித்து வருவது நாட்டின் சிறுவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்துக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. பாதாள உலகக் குழுக்களும், அரசியல்வாதிகளும் இதனுடன் தொடர்புபட்டிருப்பதாகப் பொதுமக்கள் நம்புகின்றனர். எனவே இவற்றைத் தடுப்பதற்கும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள்? 

பதில் : இலங்கைக்குள் போதைப்பொருள் இறக்குமதியைத் தடுக்கவும் இலங்கை வழியாக செல்லும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் பாதைகளைச்  சீர்குலைக்கவும் இன்டர்போல் மற்றும் பிற வெளிநாட்டு புலனாய்வு சேவைகளுடன் நெருக்கமாக செயல்படுவோம். பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்து 6 மாதங்களுக்குள் தண்டனை வழங்க போதைப்பொருள் எதிர்ப்பு விசேட மேல்நீதிமன்றம் நிறுவப்படும். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை விரைவாக புனர்வாழ்வளித்து சமூகத்தில் மீண்டும் இணைக்க நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் 25 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படும். 2 ஆண்டுகளுக்குள் நச்சு போதைப்பொருள் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க பாடுபடுவோம்.

கேள்வி : இலத்திரனியல் , மருத்துவமனை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட வெளிநாட்டு கழிவுகளை கொட்டும் இடமாக மாறுவது உட்பட கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இந்த சூழலியல் சவால்களை எதிர்கொள்ளவும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைக்கவும் உங்கள் நிர்வாகம் கொண்டிருக்கும் உறுதியான திட்டங்கள் என்ன? 

பதில் : அனைத்து துறைகளிலும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறோம். அபிவிருத்தி செயல்முறையில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காக 1980இன்  தேசிய சுற்றுச் சூழல் சட்டம் (திருத்தப்பட்ட) மற்றும் பிற சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகள் புதுப்பிக்கப்படும். புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆதாரங்களை ஊக்குவிப்பதன் மூலமும், பரிமாற்ற முறைமையில் சுற்றாடலுக்கு உகந்த மாற்று வலுசக்தி ஆதாரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், புவி வெப்பமடைதல் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் உள்ள இணக்கப்பாடுகளுக்கு அமைவாக செயல்பட முன்னுரிமை அளிக்கப்படும். கழிவுகளைப் புதைத்தல் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க அறிவியல் அடிப்படையிலான சுற்றுச் சூழல் ரீதியாக நிலையான தீர்வுகளை செயல்படுத்த எமது அரசாங்கம் உறுதிபூணும்.

கேள்வி : இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை, குறிப்பாக உயர் திறமையான வேலைகளை உருவாக்குவதற்கான உங்கள் உத்திகள் எவை? இளைஞர்கள் மத்தியில் எத்தகைய திறன்கள் அவசியமானவை என நீங்கள் கருதுகின்றீர்கள்? அவற்றை மேம்படுத்துவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள்?  

பதில் : நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் இளைய சமுதாயம் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழக்கூடிய பிரஜைகளாக இருக்க வேண்டும். அவர்களின் உழைப்பு பங்களிப்பை நாட்டின் வளர்ச்சிக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்த, கல்வி, தொழில் பயிற்சி, தொழில்முனைவு ஆகியவற்றுக்கான நவீன வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய வாய்ப்புகளை அடைந்து கொள்ள வசதிகள் செய்து கொடுக்கப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள நிறுவனமாக மாற்றுவதற்கு தேவையான சட்ட மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

கேள்வி : வேலை வாய்ப்பு மேம்பாடு மற்றும் தொழிநுட்ப நடைமுறைத் திறன்களை உள்ளடக்கிய நவீனமயப்படுத்தப்பட்ட கல்வித்திட்டத்தை கட்டியெழுப்புவதற்கான உங்கள் திட்டம் என்ன? 

பதில் : கல்வி என்பது அடிப்படை உரிமை. மனித மூலதன மேம்பாடு எமது முன்னுரிமை. விரிவாக்கப்பட்ட 'பிரபஞ்சம்' திட்டத்தின் மூலம் பாடசாலைகளில் டிஜிட்டல் கற்றல் தளங்களுக்கான அணுகலை உறுதி செய்யும் முன்னுரிமையாக இலங்கையை முன்னோக்கி செலுத்தும் முயற்சிகள் முன்னிலைப்படுத்தப்படும். இதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளடக்கங்களை வழங்கும் முறைகளில் முழுமையான நவீனமயப்படுத்தல் மேற்கொள்ளப்படும். தரமான கல்வி சேவைகளைப் பெறும் திறனை அதிகரிக்கும் இந்த திட்டம் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பாடசாலை பாடத்திட்டத்தை மறுசீரமைக்கும் போது, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார் துறையின் மனிதவள நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப போக்குகளுக்கு உரிய இடம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் பாடசாலைப் பருவத்தின் ஆரம்ப கட்டத்திலேயே ஆங்கில மொழியை நன்கு புரிந்து கொள்வதற்கும், பேசுவதற்கும், எழுதுவதற்கும் தேவையான திறன்களை பெற்றுக் கொள்ளும் வகையில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை பாடசாலை கல்வி வழங்கப்படும், இதற்காக நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படும். தொழில்முறை பயிற்சி பாடத்திட்டங்கள் தற்போதைய சந்தை தேவைகளுக்கு ஏற்ப விரிவாக புதுப்பிக்கப்பட்டு தரப்படுத்தப்படும். இதன் மூலம் பட்டதாரிகள் துறைக்கு ஏற்ற மற்றும் தேவைப்படும் திறன்களைக் கொண்டவர்களாக இருப்பது உறுதி செய்யப்படும்.

 

 வீர­கே­ச­ரியின் 'ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளிடம் கேளுங்கள் - 2024' எனும் தலைப்பில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­களால் தொடுக்­கப்­பட்ட வினாக்­களில் முக்­கிய வினாக்­க­ளுக்கான பதிலை மின்னிதழில் வாசிக்க    https://mypaper.lk

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னிலங்கையுடன் இணையும் புதிய அரசியலை நோக்கி...

2024-10-03 20:30:56
news-image

இ.தொ.காவை துரத்தும் துரதிர்ஷ்டம்...! 

2024-10-03 17:26:10
news-image

முதலில் ஈரானின் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கும்...

2024-10-02 13:56:37
news-image

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட புதிய...

2024-10-02 10:45:36
news-image

மாறி வரும் உலகில் உணரப்படாத வயோதிபம்

2024-10-01 15:53:03
news-image

பரீட்சை வினாக்களின் கசிவு: பொறுப்புக்கூறுவது யார்?

2024-10-01 14:52:31
news-image

இலங்கை சிறுவர்களின் நலன் கருதி முக்கிய...

2024-10-01 11:04:59
news-image

அநுரா குமார திசாநாயக்க ; இலங்கை...

2024-10-01 10:47:45
news-image

முதியோரின் உணர்வுகளை மதிப்போம் : இன்று...

2024-09-30 11:48:26
news-image

சிறுவர்களின் உலகைக் காப்போம்! : இன்று...

2024-09-30 12:17:38
news-image

மலையக தமிழ் பிரதிநிதிகளின் அடுத்த கட்ட...

2024-09-30 13:08:52
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதல் - மருத்துவமனையில் உயிருக்காக...

2024-09-30 11:03:05